Monday, August 18, 2014

போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!


கனவுகள் எல்லோருக்கும் உண்டு.
அதற்கு வடிவங்கள் கொடுப்பவர் சிலர்.
அந்த வடிவத்தை மற்றவர்கள் மனதிலும் விதைப்பவர் மிகச் சிலர்.
அந்த மிகச் சிலர்களில் ஒருவர் பி.கே.

சாமான்ய மக்களின் பங்கேற்புக்காகவும், பங்களிப்புக்காகவும் மட்டும் ஒரு தொலைக்காட்சியை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது. நட்சத்திரங்கள் விரும்பினால் அவர்களும் ஒரு சாமான்யனாகவே அதில் இடம்பெற வேண்டும் என அவர் திட்டமிட்டார். அவர் திட்டம் நிறைவேற அவரைப்போலவே கனவுகளுடன் இருந்தவர்களை தேடித்தேடி சலித்தெடுத்தார். அவர்களில் நானும் ஒருவன்.

அவருடைய கனவு மட்டும் ஈடேறியிருந்தால் அகில உலகமும் வியந்து வரவேற்றிருக்கக்கூடிய புதிய தொலைக்காட்சி வடிவம் பிறந்திருக்கும்.

தனது கனவை அவர் எனக்கு முதன்முதலில் விவரித்தபோது பிரமித்துப்போனேன். கரகரப்பான குரலில் புன்னகையா, கடுமையா எனத்தெரியாத ஒரு பாவனையில் எனது யாதுமானவள் குறும்படத்தைப் பற்றி தன் கருத்துக்களை கூறியபடியே தனது விவரிப்பைத் துவக்கினார். மக்களை பார்க்கவைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். மக்கள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையும், படங்களையும் தயாரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்றார். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிகிறோம் என்றில்லாமல் ஒரு அருமையான கனவுக்கு உயிர்கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தை அனைவரின் மனதிலும் ஓயாமல் பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

அதற்காக அவர் உருவாக்கிய அலுவலகச் சூழல் அலாதியானது. அங்கே உயர்வு, தாழ்வு கிடையாது. நீ பெரியவன் நான் பெரியவன் கிடையாது. ஆண், பெண் ஏற்ற இறக்கங்கள் கிடையாது.

ஏராளமான இளைஞர்கள் அனுபவசாலிகளுடன் இணைந்து கற்றுக்கொண்டே பணிபுரியும் அபாரமான முறையை உருவாக்கினார்.

நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதைத்தாண்டி மக்களுக்கு பொறுப்பான பங்களிப்பு என்ற எண்ணத்துடன் செயல்படத்தூண்டினார். அதனால் அலுவலக ஒழுக்கங்களைப் போலவே, தனி மனித ஒழுக்கங்களையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த ஒழுக்கம் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அவருடைய திடீர் மறைவு அதிர்ச்சிப்பேரலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் அவருடைய கனவுகள் முற்றுப்பெறவில்லை. ஏனென்றால் அவருடைய கனவுகள் என்னைப்போல பலரின் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

”டியர் பிகே, நான் உங்கள் கனவுக்கு உயிர்கொடுப்பேன்.”

அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது நான் இப்படித்தான் உறுதி ஏற்றுக்கொண்டேன். காலம் எனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் குருவாக ஏற்றுக்கொண்ட எங்கள் அன்பு பிகேவுக்கு விடைதருகிறேன்.


போயிட்டு வாங்க ஓய்! நீங்கள் கனவு கண்ட புதுயுகம் பிறக்கும்!