Monday, June 23, 2014

மெல்லிசை மன்னரின் ஸ்டீரியோ ஆல்பம் - 44 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரிலீஸ்

அபூர்வமான மனிதர்களைப் போல, அவர்களைச் சுற்றி நிகழ்பவையும் அபூர்வமாகத்தான் இருக்கின்றன. மெல்லிசை மன்னர் ஒரு அபூர்வப் பிறவி! அவர் தொடர்புடைய ஒரு அபூர்வமான விழா கடந்த ஞாயிறு (22nd Jul, 2014) ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

Thrilling Thematic Tunes - இது மெல்லிசை மன்னர் இசையமைத்துள்ள ஒரு இன்ஸ்ட்ருமென்டல் ஆல்பத்தின் பெயர். 1970ல் வெளியான இந்த ஆல்பம் முழுக்க முழுக்க ஃபியூஷன். தென் இந்தியாவில் வெளியான முதல் ஃபியூஷன் ஆல்பமும் இதுதான். இன்னொரு ஆச்சரியமும் அதில் உள்ளது. அது ஸ்டீரியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் எல்.பி. ஆல்பம். அந்த வகையில் இந்த ஆல்பமே ஒரு அபூர்வம். ஆல்பத்தை இந்தப் பதிவில் கேட்கலாம்.

 அதையும் மிஞ்சிய அபூர்வம் என்னவென்றால், கிட்டத்தட்ட 44 வருடங்களுக்குபின் அந்த ஆல்பம் மீண்டும் ஸரிகமா நிறுவனத்தால் ஒரு சிடியாக வெளிடப்பட்டது. இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஆல்பம் வெளியிடப்படுவது ஒரு இந்திய சாதனையாக இருக்கக்கூடும்.

அவருடைய பிறந்த தினத்தில் (ஜீலை 24) அவர் இசையமைத்துள்ள இந்த மகத்தான ஆல்பத்தை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். MSVTIMES.COM என்பது எம்.எஸ்.வி இசை இரசிகர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆல்பம் வெளியீட்டு விழாவில் ஒரு குழந்தையைக் கொண்டாடுவது போலத்தான் அனைவரும் எம்.எஸ்.வியின் பெருமைகளை குறிப்பிட்டு குதூகலப்பட்டார்கள். அவரும் ஒரு குழந்தையைப் போல நான் என்ற உணர்வின்றி அவற்றை ஏற்றுக் கொண்டார். தான் ஒரு ஞானி என்பதையே அறியாத குழந்தை அவர். அவரை நேரில் பார்த்தேன் என்பதே என்னைப் பொறுத்தவரையில் ஒரு பரவசமான அபூர்வமான நிகழ்வுதான்.

மெல்லிசை மன்னர் என்ற அந்த ஞானக் குழந்தை பற்றி கவியரசு கண்ணதான் கூறியுள்ளதை இந்தப் பதிவில் கேட்கலாம்.

44 வருடங்களுக்குப் பின் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் மீண்டும் இசை கோர்க்கப்பட்டு நவீன டிஜிட்டல் துல்லியத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டால், இன்னும் பல தலைமுறைகளை எம்.எஸ்.வியின் இசை மேதைமை பரவசப்படுத்தும். என்னுடைய ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

மெல்லிசை மன்னர் பற்றி இசைஞானி அவர்கள் கூறியுள்ள உணர்வுப்பூர்வமான கருத்துகளை இந்தப் பதிவில் கேட்கலாம்.



வாழ்க மெல்லிசை மன்னர்! வளர்க அவர் புகழ்!