Saturday, March 15, 2014

இரட்டை இலையை மக்களிடம் சேர்க்க குள்ளநரித் தந்திரங்கள் தேவையா?


மதுபான விளம்பரங்களுக்கு மீடியாக்களில் தடை உண்டு. இந்த தடையை மதுபான நிறுவனங்கள் தந்திரமாக மீறுகின்றன. மதுபானங்களின் பெயரிலேயே தண்ணீர் பாட்டில்கள் அல்லது சோடாக்களை விளம்பரங்கள் செய்கிறார்கள். இவை மார்கெட்டில் கிடைக்கவே கிடைக்காது. ஆனாலும் விளம்பரம் செய்வார்கள். இந்த விளம்பரங்கள் மதுபானங்களைத்தான் குறிக்கின்றன என்பது சட்டத்திற்கும், நீதிமன்றத்திற்கும் தெரியும். ஆனாலும் இந்த குள்ள நரித்தந்திரத்தை  உடைக்க முடியவில்லை.

ஜெயலலிதா தற்போது இதே தந்திரத்தை கையாள்கிறார்.  மினிபஸ்களில் இரட்டைஇலையுடன் இன்னும் இரண்டு இலைகளை வரைந்துவிட்டு கவுண்டமணி-செந்தில் ஸ்டைலில் இது அதுவல்ல என்று வாழைப்பழக்கதை சொல்கிறார். இதனை அவரது ஆதரவாளர்களே இரசிக்கவில்லை. இப்படியெல்லாம் அடம்பிடித்து இரட்டை இலையை புரொமோட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயலலிதாவே முயன்றாலும் அது தமிழக மக்களால் மறக்க முடியாத ஒரு சின்னம்.

எம்.ஜி.ஆர் சமாதியின் முன் உள்ளதும், மினிபஸ்களில் வரையப்பட்டிருப்பதும் இரட்டை இலைதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை உணர்ந்து, நேர்மையாக தேர்தல் முடியும்வரை மறைப்பதற்கு ஒப்புக்கொண்டால் குறைந்தபட்ச மரியாதையாவது மிஞ்சும்.

எதைச் சொன்னாலும் நம்பித் தலையாட்டும் கட்சிக்காரர்களைப் போலவே மக்களையும் கருதினால் என்ன ஆகும் என்பது பற்றிய முன் அனுபவம் அவருக்கே உண்டு. உண்மையை மறுத்து தொடர்ந்து அடாவடி செய்பவர்கள் எப்போதும் வென்றதில்லை.
#தோணுச்சு

No comments: