Saturday, March 17, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 01


பொரி சாப்பிட்டுக் கொண்டே இதை எழுத ஆரம்பிக்கிறேன். எத்தனையோ கொறியல்கள் இருக்க, பொறியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை பின் வரும் பாராக்கள் ஏதாவதில் சொல்கிறேன்...

முதலில் ஸ்டாட்டர்... 
சில வீடுகளில் முன்பசிக்கு இதைச் சாப்பிடுங்க.. அதுக்குள்ள விருந்து தயாராகிடும் என்று உட்கார வைப்பார்கள். அதே போல நட்சத்திர ஓட்டல்களில் மெயின் சாப்பாட்டுக்கு முன் ஸ்டாட்டர்கள் தருகிறார்கள். நான் பொதுவாக வறுத்த மஞ்சூரியன் மற்றும் வெஜ் ரோல்களை விரும்பிச் சாப்பிடுவேன். பில் கொடுப்பது நீங்கள் எனத் தெரிந்துவிட்டால், ஸ்டாட்டர்களின் பட்டியல் நீளும். ஆனால் அதற்கப்புறம் ஃபிரைடு ரைசுடன் உணவை முடித்துக் கொள்வேன், உங்க பர்ஸின் கனம் அதிகம் குறையாமல் பார்த்துக் கொள்வேன். அதனால் தயங்காமல் என்னை விருந்துக்கு அழைக்கலாம்.

பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!
எதற்காக இதைச் சொல்ல வந்தேன் என்பதால் கடந்த மாதம் பொன்னேரியில் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். சிறப்பு விருந்தினர் என்பதால் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று, நண்பர்கள் ஒரே அடம். நித்யகல்யாணி என்றொரு ஓட்டல். கல கலவென்று கூட்டம். அங்கு உணவை விட பரிமாறுபவர்கள்தான் ஸ்பெஷல்! ஆர்டர் எடுப்பது, டேபிள் துடைப்பது, இலை எடுப்பது, பரிமாறுவது, பில் போடுபவர்கள் என அனைவருமே பெண்கள். மகளிர் தினத்தை தாண்டி வராமலிருந்திருந்தால், அவர்களின் ஃபோட்டோ போட்டு ஸ்பெஷல் கவரேஜ் செய்திருப்பேன். அவர்கள் அனைவரும் அன்னையராக இருந்தால், அன்னையர் தினம் ஸ்பெஷலில் அவர்களை குறிப்பிடுவேன் என்று இன் ரூ அவுட் எடிட்டோரியலுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன். சாப்பாடு நல்லா இருந்துதா சார் என்றாள் அந்தப் பெண். நல்லா இருந்துச்சும்மா. . . ஆனா நான் கேட்டது ஃபிரைட் ரைஸ், நீ தந்தது கர்ட் ரைஸ் என்றேன். அச்சச்சோ மாத்தியிருக்கலாமே சார்! மாத்திக் கேட்டேனே . . . ஆனா நீ தந்தது மிக்ஸ்டு ரைஸ் என்றேன். மன்னிச்சிருங்க சார் என்றாள். வெள்ளந்தியாக பேசிக் கொண்டே, தலை குனிந்த அந்தப் பெண்ணின் மேல் எனக்கு கோபம் வரவில்லை. அழுத்தும் பணப் பற்றாக் குறையை சமாளிக்க, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, ஓட்டலில் வந்து சிரமப்படும் நித்யகல்யாணி ஓட்டல் பெண்களுக்கு பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!

பிலேட்டட் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மாற்று என்ன? சரியான விடை சொல்வோருக்கு அட்வான்ஸ்டு வாழத்துகள்!

ஜிமெயிலுக்கு ஒரு விண்ணப்ப மெயில்
நேற்று இரவு, ஜிமெயிலுக்குள் நுழைந்த போது, ராஜஸ்தான் பாலைவன வெயிலில் நுழைந்தது போல ஆகிவிட்டது. உங்ககிட்ட ஒரே பிரச்சனை, கடைசி நிமிஷத்துலதான் ஆர்டிகிளை எழுதித் தருவீங்க என்று என் பத்திரிகை ஆசிரிய நண்பர்கள் கோபிப்பார்கள். தாமதத்துக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இன்றைய காரணம் ஜி-மெயில். இந்தக் கட்டுரையை ஜி-மெயில் டிராஃப்டில் டைப் அடித்துக் கொண்டே வந்தேன். நள்ளிரவு தூக்கக் கலக்கத்தில் ஏதோ ஒரு கீயை விரல்கள் அமுக்கிவிட, 3 நாட்களாக தொடர்ந்து அடித்து வைத்திருந்த கட்டுரை நொடியில் னுசயகவல் இருந்து காணாமல் போய்விட்டது. அதற்குப்பின் விடிய விடிய கூகுள் தேடல். எத்தனை தேடியும் னுசயகவல் இருந்து டெலிட் ஆகிவிட்டால் அதை அன்டெலிட் செய்ய வழியே கிடைக்கவில்லை. அப்படி ஒரு வசதியே ஜிமெயிலில் கிடையாதாம். அபத்தம். குப்பை ஸ்மாம் மெயில்களை எல்லாம், ஒரு டப்பாவுக்குள் போட்டு ஊற வைக்கிறது. ஆனால் டிராஃப்டில் இருப்பவற்றை ஒரு பட்டன் அழுத்தலில் தொலைத்துவிடுகிறது.

யுவர் ஆனர்
டிராஃப்ட்டில் உள்ள மெயில்களை டெலிட் செய்யும்போது, ஒரு முறைக்கு பல முறை உறுதி செய்த பின்தான் டெலிட் செய்ய வேண்டும் என்று ஜிமெயிலுக்கு ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு இ.பி.கோ சட்டத்தின்படி தொடர்ந்து அவர்களுக்கு ஒரு இலட்சம் ஸ்பாம்மெயில்களை ஜிமெயிலுக்கு அனுப்பி தண்டனை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வழக்கால் இன் ரூ அவுட் சென்னை பதிப்பகத்தார், தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், என்னிடமிருந்து ஆர்டிகிள் தாமதாகவோ, லேட்டாகவோ வேறு ஏதோ ஒரு ஆகவோதான் வரும். எனவே கபர்தார்!

இந்த வரியுடன் பவர் கட்... இரண்டு மணி நேரம் கழித்துதான் தொடர்வேன். தொடரும் முன் பழைய சாதமும், மிளகாய் வத்தலும் சாப்பிட்ட பின்தான் வருவேன். கட்டுரையின் முதல் பாராவில் பொறியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எதற்காக என்று யோசித்துக் கொண்டு நீங்களும் இரண்டு மணி நேரம் கழித்து இக் கட்டுரையை தொடரலாம்.


டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்
உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் புகைபிடிக்கக் கூடாது டாஸ்மாக் போகக் கூடாது கன்னா பின்னா தீனி கூடாது என்பது அறிவுரை. நமக்கு இந்த அறிவுரை பிடிக்கும். மீறக் கூடாது என்று தோன்றும். ஆனால் அதை மீறிக் கொண்டே இருப்போம். இந்த சுய அத்து மீறலுக்கு தீனி போடுவதுதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள். கை நிறைய பணம் புரண்டு எப்படி பொழுதைப் போக்குவது எனத் தெரியாமல் எழுபதுகளில் அமெரிக்கர்கள் திணறிக் கொண்டிருந்தபோது அவர்களை டெலிவிஷன் பெட்டிகளின் முன் கட்டிப்போட உதித்தவைதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்.

மனிதனுக்கு பரபரப்பு பிடிக்கும். அதுவும் பக்கத்து வீட்டின் பரபரப்பு என்றால் நமக்கு இன்னும் சுவாரசியம். பக்கத்துவீட்டுக்காரனின் தனியறை சமாச்சாரமாயிற்றே என்று ஒதுங்க மாட்டோம். ஜன்னல் வழியாகக்கசியும் அவர்கள் வீட்டு மோதலையும் காதலையும் இரகசியமாக ஒட்டுக் கேட்போம். மனசாட்சி வேண்டாம் எனச் சொன்னாலும் ஒட்டுக்கேட்கும் ஆசை பக்கத்துவீட்டு ஜன்னலை விட்டு நகராது. ஏன் இப்படி இரகசியமாக கஷ்டப்படறீங்க. எல்லாரும் எங்க ஸ்டுடியோவுக்கு வாங்க. உங்க பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிரச்சனைகளையெல்லாம் பகிரங்கமாக கைதட்டி விசில் அடித்து வேடிக்கை பாருங்கள் என்று நிகழ்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள். கள்ள உறவுகளும் விரிசல் உறவுகளும் மேடை ஏறினர். கணவன், மனைவி அப்பா மகன் மகள் காதலன் காதலி என சகட்டு மேனிக்கு எல்லோரையும் மேடை ஏற்றி பப்ளிக்காக சண்டை போட வைத்தார்கள். வேடிக்கை பார்த்த கூட்டம் சுற்றி அமர்ந்து விசில் அடித்து கை தட்டி ஆரவாரம் செய்தது. நிகழ்ச்சி செம ஹிட்.

ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் என்றொருவர் இதில் சமர்த்தர். குடும்பங்களை உறவுகளை மோதவிடுகிறார். அவர்கள் அமைதியாக இருந்தாலும் எதையாவது பேசி தூண்டி விடுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு தூண்டிவிடுகிறார். அடித்துக் கொள்ளும் இரகசியக் காதலிகள் மனைவிகள் கணவன்களை இரத்தம் வராமல் தடுத்து காப்பாற்ற பயில்வான்களுடன்தான் காமிரா முன்னால் தோன்றுகிறார். அதனால் இவருடைய நிகழச்சி பயங்கர பிரபலம்.

நம்ம ஊர் நீயா? நானா? இந்த வகைதான் ஆனால் மிக மென்மையான டேப்ளாய்ட் நிகழ்ச்சி. அவ்வப்போது அமெரிக்கத்தனம் எட்டிப்பார்த்தாலும், பொதுவாக அடக்கி வாசிக்கிற நிகழ்ச்சி! அரட்டை அரங்கங்களின் கண்ணீர் கதறல்கள் இதிலேயே இன்னொரு வகை. ஊன்றிக் கவனித்தால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் சுவாரசியம் கூட்டுவதற்காக அவ்வப்போது ஒரு குடும்பத்தை கண்ணீர் விட வைக்கும் அபத்தங்களை அத்து மீறல்களை நாம் அடையாளம் காணலாம். வடநாட்டில் ஹிந்திக்காரர்கள் கொஞ்சம் தைரியமாக பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பாதி டேப்ளாய்ட் நிகழ்ச்சிக்காரர்களாக புரொமஷன் பெற்றுவிட்டார்கள்.

நூற்று சொச்சம் சேனல்கள் இருந்தாலும் எஃப் எம் சேனல்கள் இருந்தாலும் ஐ-பாட் முழுக்க பாடல்கள் நிரம்பி வழிந்தாலும் நமக்கு எதிலும் நாட்டம் இல்லை. ரிமோட் பட் பட்டென்று மாறிக் கொண்டே இருக்கிறது. எதிலுமே திருப்தி இல்லை. ஆனாலும் எனக்கு இது வேண்டாம் தேவை இல்லை என்று நியாயம் பேசும் மனசாட்சியை மீறுவது மட்டும் எப்போதும் திருப்தியாக இருக்கிறது. இதற்கு தீனி போடும் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழ் தொலைகாட்சிகளை முற்றுகையிடும். இன்னும் 50 தமிழ் சேனல்கள் வரப்போகிறதாம். ஜாக்கிரதை!

மேயர் சார் இதைக் கவனிங்க ப்ளீஸ்
இப்போது பொறி மேட்டருக்கு வருகிறேன். ஆனால் இது நான் முதல் பாராவில் குறிப்பிட்ட கடலைப் பொரி அல்ல. கடந்த வாரம் உதயம் தியேட்டர் பின்புறத்திலிருந்து இ.எஸ்.ஐ நோக்கி வெறும் 30 கி.மீ வேகத்தில் என்னுடைய ஸ்ப்ளெண்டர் சென்று கொண்டிருந்தது. இடது பக்கத்தில் எங்கிருந்தோ வந்தான் ஒரு டெம்போ டிராவலர். டங் என்று ஒரு சத்தம்! அடுத்த நிமிடம் தரையில் உருண்டேன். துணைக்கு என் எழுபது வயது சித்தப்பாவும் உருண்டார். தலைக்கவசம் இருந்ததால் தப்பித்தேன். அவருக்கு நல்ல நேரம் கவசமாக இருந்ததால் நெற்றியில் வெட்டுடன், சில எம்.எல்.கள் இரத்தம் இரத்தம் சிந்தியபின் தப்பித்தார். எனக்கு கையிலும் காலிலும் எக்கச்சக்க சிராய்ப்பு. நான் துவைக்காமலேயே ஒரு மாதமாக பயன்படுத்திய ஜீன்ஸ் அவுட். இனி அதை கட் பண்ணி அரை டிரவுசராகத்தான் பயன்படுத்த முடியும். அந்த வளைவு ஒரு மரணப் பொறி. ஓ வடிவில் வாகனங்கள் கிராஸ் பண்ணுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பேர் விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்று தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்திய அந்த ஏரியா கடைக்காரர் சொன்னார். அந்த வளைவில் சிக்னல் வைக்க வேண்டும் அல்லது ஓ வடிவில் வாகனங்களை கிராஸ் பண்ண விடாமல் சுற்றி வர வைக்க வேண்டும்.

மேயர் சார் படுகுழியாகக் கிடந்த ஆற்காட் ரோடுக்கே தார்ச்சாலை வந்தாச்சு. இந்த உதயம் தியேட்டர் மரணப்பொறிக்கும் முடிவு கட்டுனீங்கன்னா நல்லா இருக்கும்.

பசுமை விடியல்
சர்வதேச அளவில் வயது ஜாதி மத வித்தியாசம் இன்றி எல்லோரையும் பிடித்திருக்கும் வியாதிக்குப் பெயர் ஃபேஸ்புக். அடுத்த 5 வருடங்களுக்கு இந்த வியாதியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றுதான் நினைக்கிறேன். இதில் என்னைப் போல முத்தக் கவிதைகள் எழுதி இம்சிப்பவர்களைத் தவிர, உருப்படியான வேலை செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். பசுமை விடியல் என்றொரு குழு! தமிழகம் முழுக்க படர்ந்து நீர் வளத்தை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதுதான் இவர்களுடைய முக்கிய பணி! தொடர்ந்து மரம் நடும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். இதற்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்துபவர் திருமதி.கௌசல்யா ராஜ். திருநெல்வேலிக்காரர். இவருடைய ஆர்வமும் செயலும் என்னையும் பசுமை விடியலுக்குள் ஈடுபாடு கொள்ள வைத்துவிட்டது. கடந்தவாரம் போரூரை அடுத்து உள்ள கொளப்பாக்கத்தில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டோம். உங்கள் காலனியிலும் மரம் நட வேண்டுமா? பசுமை விடியலை அழையுங்கள். உடனே வருவோம்.

பொறி வைக்காத பொரி
இறுதியாக முதல் பாராவில் குறிப்பிட்ட பொறி மேட்டருக்கு வருகிறேன். உலகிலேயே பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளாத சிக்கிக் கொண்டாலும் கரைந்து போகின்ற பல் இல்லாதவர்களும் சாப்பிட முடிகின்ற எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாத ஒரே உணவு பொறிதான். கிரிக்கெட் ஸ்டம்புகளைப் போல எக்கச்சக்க இடைவெளியுடன் பற்களை பராமரிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பொறிதான் எக்காலத்துக்கும் உகந்த கொறியல்! நான் ஏன் பொரி சாப்பிடுகிறேன் என்பதை இதை விட சிம்பிளாக விளக்க முடியாது!

In and Out Chennai என்ற மாதமிருமுறை வெளிவரும் நாளிதழில் மார்ச் இதழில் எழுதியது.

Friday, March 16, 2012

ஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி?


கல்லூரி புராஜக்டுகளும், சர்டிபிகேட் படிப்புகளும் வெற்றியின் மாஜிக் ஃபார்முலா!

முத்து ராமலிங்கம்
புராஜக்ட் மானேஜர் - மெட்லைஃப் - நியூயார்க்

கம்ப்யூட்டர் உலகம் மாத இதழுக்காக
மின்னஞ்சல், ஃபேஸ்புக் மற்றும் தொலைபேசி வழி பேட்டி

ஐடி துறையில் அடிப்படை தெரிந்திருந்தாலே, கை நிறைய சம்பளம் என்கிற காலம் போயே போச்சு. இப்போது அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே அழைப்பு. ஐடி துறை தவிர அதைச் சார்ந்த வேறொரு துறை பற்றிய அறிவும் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. ஆனால் ஒரு மாணவன் எப்படி அனுபவஸ்தனாக கல்லூரியை விட்டு வெளி வர முடியும்? ஐடி படிக்கிற மாணவன், வேறொரு துறையின் அனுபவத்தை பெறுவது எப்படி? ஐடி மாணவன் படிப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக் கேள்விகளுக்கு மெட்லைஃப், நியூயார்கிலிருந்து பதில் சொல்லியிருக்கிறார் திரு. முத்து ராமலிங்கம். 

சம்பிரதாயமான ஆனால் அவசியமான கேள்வி.  உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

படித்தது டிப்ளோமா மற்றும் BCA பட்டப் படிப்பு. 15 சான்றிதழ் படிப்புகள். (15 International Certificates) IT இல் கடந்த 12 வருடங்களாக வேலை செய்கிறேன். என்னுடைய முதல் வேலையாக சாதாரண ஹார்ட்வரே எஞ்சினியராக ஆரம்பித்தேன். தற்போது இங்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறேன். 

உங்களுடைய பணி எப்படிப் பட்டது?
நிறுவனங்கள் உபயோகப் படுத்தும் மென்பொருள்கள், ஹார்ட்வேர்,நெட்வொர்க், பாலிசி மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தகுந்த (Security) பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொடுத்து கண்காணிப்பதே என் வேலை. செக்யூரிட்டி என்றதும், போலீஸ் போல யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வாசலில் நிற்கிற வேலை என்று நினைத்துவிடாதீர்கள் (சிரிப்பு).

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்கள் புத்திசாலிகள். அவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
ஹா..ஹா...ஹா...அவங்க அப்படி நினைக்க மாட்டாங்க. ஆனா டேட்டா செக்யூரிட்டின்னு சொன்னா, ஏதோ யூனிஃபார்ம் மாட்டின அமெரிக்க காவல்காரன்னுதான் எங்கம்மாவும், சொந்தக்காரங்களும் நினைக்கறாங்க..(மீண்டும் சிரிப்பு). அவங்க படிக்காதவங்க அப்படி நினைக்கறதுல தப்பு இல்ல. ஆனா மாணவர்களுக்கே ஐடி துறை பற்றிய புரிதல் கம்மியா இருக்குன்னு நினைக்கறேன்.

மாணவர்கள் ஐடி துறையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவில்லைன்னு சொல்றீங்களா?
ஆமாம். ஐடி தொடர்பான படிப்பு என்றால், ஹார்டுவேரா? சாஃப்டுவேரா? என்று இரண்டே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஐடி துறை இப்போது இந்த இரண்டையும் எப்போதோ தாண்டி மிகப் பரவலாகிவிட்டது. ஹார்டுவேர் என்று எடுத்துக் கொண்டால் Networking, Routing, Firewall என்று நீண்டு கொண்டே போகும். அதே போல சாஃடுவேர் என்றால் Coding, Tester, Database Administrater என்று ஏகப்பட்ட பிரிவுகள். மாணவர்களுக்கு இதில் எது தனக்கு விருப்பம் என்பதை படிக்கும்போதே உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப சான்றிதழ் (Certificate) படிப்புகளையும் முடிக்க வேண்டும். முன்பெல்லாம் BCA, MCA, BE Computer Science முடித்தாலே வேலை கிடைத்துவிடும். ஆனால் தற்போதைய நிலை வேறு. மாணவர்களுக்கு அவர்களுடைய டிகிரி தவிர, சான்றிதழ் படிப்புகளும் கட்டாயம் தேவைப்படுகிறது.

சான்றிதழ் (Certificate) படிப்புகள் என்றால் என்ன?
முன்பு பட்டங்களை தகுதியாக வைத்து (Degree based) வேலை தந்தார்கள். தற்போது திறமைகளை அடிப்படையாக வைத்துதான் (Skill based) வேலை. CISCO, Microsoft, Linux, ORACLE போன்றவை மிகப்பெரிய சர்வதேச ஐடி நிறுவனங்கள். இவர்களுடைய மென்பொருள்கள் அல்லது வன்பொருள்கள்தான் தற்போது உலகெங்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஐடி துறையில் வேலை தேடும்போது, இவர்களின் மென்பொருள் அல்லது வன்பொருள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். இதற்கென சான்றிதழ் (Certificate) தேர்வுகள் உள்ளன. உங்கள் விருப்பம் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். அதை எடுத்துக் கொண்டு ஜாப் மார்கெட்டுக்குள் நுழைய வேண்டும். போகப் போக ஒன்றுக்கு மேற்பட்ட சர்டிபிகேட்டுகளை படித்து வாங்கிக் கொள்ளலாம். இதற்காக கல்லூரி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. கல்லூரியில் படிக்கும்போதே ஈடுபடலாம்.

சான்றிதழ் படிப்புகள் இவ்வளவுதானா? இன்னமும் இருக்கின்றனவா?
நான் சில உதாரணங்களைத்தான் கூறியுள்ளேன். இது போல எவ்வளவோ சான்றிதழ் படிப்புகள் உள்ளன. PCI for ATM Cards, .Net, Java, Share Point, Web logic என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்கள் புதிய மென்/வன் பொருள்களை அறிமுகப்படுத்துகின்றனவோ அப்போதெல்லாம் அது குறித்த ஒரு சான்றிதழ் படிப்பும் உருவாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் பட்டப்படிப்பு மட்டும் போதவே போதாது. சான்றிதழ் படிப்புகளை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

சான்றிதழ் படிப்புகளைப் படித்தால் மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆரகிள் யாஹீ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?
நீங்கள் திறமைசாலியாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இன்று ஐடி என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், தொலை தொடர்பு துறை, விண்வெளி, சூப்பர் மார்கெட், விமானத் துறை, பங்கு வர்த்தகத் துறை என எல்லா துறைகளிலும் ஐடி உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவும், அங்கு பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் பற்றிய அறிவும் தற்போதைய தேவை. அதற்கேற்ப உங்கள் சர்டிபிகேட் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் ஐடி துறையில் மட்டுமல்ல, ஐடியை சார்ந்திருக்கும் எல்லா துறைகளிலும் உலகமெங்கும் வேலை வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் தற்போது ஒரு சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஐடி துறையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு மாணவனுக்கு எப்படி புதிய துறை பற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் கிடைக்கும்?
ஒரு துறை சார்ந்த அறிவும், அனுபவமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கல்லூரிகளில் புராஜக்ட் தருகிறார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அந்த துறையில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அந்த நிறுவனத்தில் தற்காலிக பயிற்சிக்கு அனுமதி பெற்று அங்கு உள்ள ஐடி தேவைகளை உணர்ந்து அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்தவரை மாணவர்கள் இந்த பயிற்சியை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மாணவர்கள் தங்கள் புராஜக்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்களா?
பெரும்பாலான மாணவர்கள் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புராஜக்டுகளை செய்வதே இல்லை. பணம் கொடுத்து வேறு யாராவது செய்து வைத்திருக்கும் புராஜக்டுகளை வாங்கி, தங்கள் பெயர் போட்டு கல்லூரியில் சமர்ப்பிக்கிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பல மாணவர்கள் உணர்வதே இல்லை. புதிதாக ஒரு துறை பற்றிய அடிப்படை அறிவு, நிறுவனங்கள் இயங்கும் விதம், அங்கு பயன்படுத்தப்படும் மென்/வன் பொருள்கள் பற்றிய அடிப்படை அறிவை பெறும் வாய்ப்பை தாங்களே உதறுகிறார்கள். பணம்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு புராஜக்டுகளை விற்கிற நிறுவனங்களை உதாசீனப்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு எப்படியாவது தங்கள் புராஜக்டுகளை தாங்களே முடிக்க வேண்டும். அங்கு கிடைக்கும் அனுபவத்துக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஐடி படித்து விட்டு மாரக்கெட்டிங், கணக்கு வழக்கு என்று தொடர்பில்லாத வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். பல மாணவர்கள் இந்த தவறைத்தான் செய்கிறார்கள்.

கம்ப்யூட்டர் உலகம் வாசிக்கும் மாணவர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று பணம் கொடுத்து புராஜக்ட் வாங்காமல், தாங்களே செய்து முடிப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி அளிக்கிறோம். ஆனால் புராஜக்டுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லையென்று சில மாணவர்கள் புலம்புகிறார்களே...
யார் சொன்னது? இன்றைக்கு உலகத்தையே கட்டிப் போட்டிருக்கும் ஃபேஸ்புக் ஒரு கல்லூரி புராஜக்ட்தான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வந்து பேசிப்பழகும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஃபேஸ்புக். மார்க் ஜீகர்பர்க் என்கிற மாணவர் உருவாக்கிய இந்த புராஜக்ட்தான் இந்த நூற்றாண்டின் மிகப் பரபரப்பான புராஜக்ட். இது போல ஒவ்வொரு மாணவரும் க்ரியேட்டிவாக புராஜக்டுகளை சிந்திக்க வேண்டும். அதை கூட்டாகச் சேர்ந்து செய்து முடிக்க வேண்டும். இன்று முதலீட்டாளர்கள் சிறந்த புராஜக்டுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்து முடிக்கிற புராஜக்ட் ஃபேஸ்புக் போல ஒன்றாக அமைந்துவிட்டால் . . . யோசித்துப் பாருங்கள். நாளை உலகமே உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

நீங்கள் கூறுவது போல புராஜக்டை முடித்துவிட்டு, சான்றிதழ் படிப்பையும் முடித்துவிட்டு பணிக்குச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் ஏற்கனவே சொன்னதுதான். இந்த இரு அடிப்படை தகுதிகள் இல்லாதவர்கள்தான் தடுமாறுவார்கள். மற்ற அனைவருக்கும் மிகப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 

பிசினஸ் அனலிஸ்ட் -->ப்ரீ சேல் --> டெவலப்மெண்ட் டீம் ---> டீம் மேனேஜர்  ---> ஹாக்கிங்  --->  சானிடைசிங்  --->  டெஸ்டிங்  --->  குவாலிட்டி அனலைசிஸ்.  இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் பல பிரிவுகள் உள்ளன. ஒரு உதாரணத்திற்கு நான் இவற்றை குறிப்பிடுகிறேன். உங்கள் திறமையும், விருப்பமும் உங்களை தாமாகவே இதில் ஏதாவது ஒரு பிரிவில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் பணிபுரியும் துறையான Information Security பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். Information என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்?

Information என்று நான் குறிப்பிடுவது தகவல். ஐடிக்கும், தகவலுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றும். அதை விளக்கி விடுகிறேன். ஒரு நிறுவனத்திற்கும் எப்படி அசையும்/அசையா சொத்துக்கள் உண்டோ, அதே போல தகவல் என்ற மிகப் பெரிய சொத்து உண்டு. சொல்லப் போனால் தகவல்கள் இல்லையென்றால் நிறுவனங்கள் இல்லை, வியாபாரம் இல்லை. அவற்றை நிர்வகிக்க சிறந்த ஐடி சொல்யூஷன் இல்லையென்றால், அந்த தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

எனவே தகவல்களை வாங்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும் சிறந்த ஐடி வழிமுறைகள் (Process) வேண்டும். அவற்றை தகவல் திருடர்களின் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வழி முறைகள் வேண்டும். 

மாணவர்களுக்கு புரியும் வகையில் கொஞ்சம் எளிமைப்படுத்துவோமே... எத்தனை வகையான தகவல்கள் உள்ளன? அல்லது தகவல்களை எப்படி பிரிக்கலாம்?

ஒரு நிறுவனமோ அல்லது வங்கியோ அல்லது ஒரு மருத்துவமனையோ அவர்களின் தேவைகளைப் பொறுத்து தகவல்களில் பல வகைகள் உள்ளன..

ஆனால் சில தகவல்கள் (General) பொதுவான தகவல்கள். உதாரணமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள், அவர்களின் தயாரிப்புகள், பணப் பரிமாற்றங்கள்,வேலை செய்யும் நபர்களின் தகவல்கள், அவர்களின் ஆண்டு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் உபயோகிக்கும் கணினிவிபரங்கள். சில தகவல்கள் வெளி ஆட்கள் யாருக்கும் தெரியக் கூடாது(Confidentiality) கோகோ கோலா சீக்ரட் ஃபார்முலா போல. சில தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்(Partially), உதாரணமாக ATM பாஸ்வேர்டுகள். சில தகவல்கள் பொதுமக்களுக்கு(Public), இதற்கு உதாரணமாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விதம் விதமான திட்டங்கள். .

இவ்வாறு தகவல்களின் தேவைகள் பொறுத்து(Availability) அதன் பாதிப்புகள் (Impact) பொறுத்து தகவல்களை வகை பிரிக்கலாம். 

நீங்கள் சொல்லும்போதுதான் தகவல்கள் மிக முக்கியமானவை என்று புரிகிறது. தகவல்களை ஐடி எப்படி பாதுகாக்கிறது?

மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். Information Security என்பது பெரிய குடை போல. அதன் கீழ் பல பிரிவுகள் இயங்குகின்றன.  தகவல்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவதுதான் ஹாக்கர்கள் மற்றும் வைரஸ் பரப்புவர்களின் நோக்கம். அவற்றை தடுக்க மிக முக்கியமாக மூன்று பிரிவுகள் உள்ளன. 1. உடனடி காவல் (IR Instant Response Team). ஆம்புலன்ஸ் போல இயங்கும் பிரிவு 2. வரும் முன் காவல் (Before attack). தடுப்பு மருந்து கொடுப்பது போன்ற பிரிவு. 3. சேத மதிப்பீட்டுப் பிரிவு (Risk assesment)

Information Security Management - இந்த துறைக்கென்ற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
எக்கச்சக்கமாக உள்ளன. CISM, CISSP என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

கம்ப்யூட்டர் உலகம் வாசகர்களுக்கு உங்களுடைய ஸ்பெஷல் டிப்ஸ் என்ன?
மாணவர்கள் கல்லூரியில் தரப்படும் புராஜக்டுகளை காப்பியடிக்காமல், தாங்களே சிந்தித்து, தாங்களே செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின்னும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. விருப்பம், திறமை மற்றும் அப்போதைய வேலை டிமாண்டுக்கு ஏற்ப படித்து தங்கள் பயோடேட்டாவை மதிப்பு மிக்கதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் என்னை muthuramalingam.s@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அணுகலாம். ஆல் த பெஸ்ட்!

Wednesday, March 14, 2012

காயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்!

சினிமாவையும் சினிமாவில் இருப்பவர்கள் வாழ்வையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவதை விடுத்து... மக்களையும் மக்களின் வாழ்வையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவோம்.

சங்ககிரி ராஜ்குமார் தனது வலைப்பதிவில் இப்படித்தான் அறிமுகம் தந்திருக்கிறார். யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்? இந்தக் கேள்வி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உரக்க எழுந்திருக்கிறது. காரணம் இயக்குனர் சேரன்.

திரு.சேரன் சமீபகாலமாக பத்திரிகைகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார். காரணம் அவரது சினிமாக்கள் அல்ல, அவர் நேசிக்கும் சினிமாக்கள்!

எனது நண்பர் ஷண்முகராஜ், திரு.சேரனிடம் சினிமா பயின்றவர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எல்லா முதல் பட இயக்குனர்களுக்கும் உள்ள பிரச்சனை. படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இரசிகர்களிடம் சென்றடைவதில் சிக்கல். சேரன் தாமாகவே முன்வந்து படத்தைப் பார்த்து, பாராட்டி பத்திரிகைகளில் அது பற்றிய செய்திகள் வரவழைத்தார். விளைவு திரு.மைக்கேல் ராயப்பன் படத்தை வாங்கியிருக்கிறார். தற்போது சன்பிக்சர்ஸ் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது. படம் நிச்சயம் திரைக்கு வரும். அதற்கு காரணம் மாணவனின் மேல் அக்கறை கொண்ட குரு சேரன்.

அதே போல நடிகர் திலகத்தின் டிஜிட்டல் கர்ணன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் கர்ணன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய உணர்வுபூர்வமான யுடியூபில் செம ஹிட். சிவாஜியின் மாஸ்டர் பீஸ் கர்ணன். அதனை நோக்கி, இன்றைய தலைமுறையினர் சிலபேரையாவது தனது பேச்சால் கவர்ந்து இழுத்திருக்கிறார். வரும் வாரத்தில் கர்ணன் டிஜிட்டல் திரையில் கர்ஜிக்கப்போகிறான். நிச்சயம் ஒரு ஓபனிங் இருக்கும். நான் குடும்பத்துடன் செல்லப் போகிறேன். அதற்கு முக்கியக் காரணம் சிவாஜி மட்டுமல்ல, சிவாஜி வெறி பிடித்த இரசிகன் சேரன்.

தற்போது காயம் என்ற திரைப்படத்தை தானே வெளியிடுகிறார். காயம், சென்ற வருடம் வெங்காயம் என்ற பெயரில் வெளியான படம். வழக்கமாக கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட குதறி எடுத்துவிடும் ஆன் லைன் விமர்சகர்கள் கூட, நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய படம். ஆனால் விளம்பர வெளிச்சம் இல்லாமல் வெளியானதால், படம் நன்றாக இருந்தும் இரசிகர்களைச் சென்றடையவில்லை.

தற்போது காயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படம்தான், வெங்காயம். அந்தப் படத்தின் இயக்குனர்தான் சங்ககிரி ராஜ்குமார். அவரை நான் கேபிள் சங்கர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். இயக்குனர் மீரா கதிரவனும், அவரும் சிறப்பு விருந்தினர்கள்.

‘நான் இந்தப் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. எனவே எனக்கு புத்தகம் பற்றிய கருத்து இல்லை. ஆனால் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்‘ என்று சுருக்கமாகப் பேசி, ஒரு நேர்மையான மனிதனாக இன்னமும் என் மனதிற்குள்ளேயே இருக்கிறார்.

உண்மையும் நேர்மையும் எப்போதும் நிராகரிக்கப்படுவதில்லை. இனி அவ்வளவுதான் என்று சினிமா உலகம் மறந்திருந்த அவருடைய வெங்காயம், இன்று மீண்டும் தமிழ் சினிமா இரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.

இன்று ஃபேஸ்புக்கில் படத்தின் புதிய டிரையலரைப் பார்த்தேன். இன்றைய தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி இயக்குனர்களும், மிகப்பெரிய ஜாம்பவான்களும், சங்ககிரி ராஜ்குமார் என்ற எளிய மனிதனின் சினிமாவைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலம் மறந்து போகவிருந்த ஒரு நல்ல திரைப்படம் மீண்டும் உயிர்பெற்று, இன்று புகழ் வெளிச்சத்தில் இருக்கக் காரணம், ஒரு நல்ல மனிதன் சேரன்.

காயம் நல்லது! அது தந்த நிராகரிப்பு வலிதான் இன்று இத்தனை ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது.

முதல் படம் தயாரிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு விட வேண்டும் என்று இயக்குனர் ஜனநாதன் கூறியிருந்ததாக, ஒரு பத்திரிக்கை குறிப்பை வாசித்தேன். டிஜிட்டல் யுகத்தில் சினிமா புதிய அவதாரம் எடுத்தாலும், அது சேரன், ஜனநாதன் போன்ற அக்கறை உள்ளவர்களால்தான் தாக்குப்பிடிக்கிறது.

நற் குணங்கள் உடையோர் நல்ல படைப்புகளையே தருவார்கள். அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஆதரிப்போம்!


Tuesday, March 13, 2012

இதழ் அகல் முத்தம்




தீபங்களின் ஒளியில்
அவள் பார்வைகள் சொன்னதை
அவள் இதழ் அகல் விளக்கில்
முத்தங்களாக ஒளிர வைத்தேன்!

Monday, March 12, 2012

கண் பொத்தி முத்தம்



தனியாக அலைபாயும் கூந்தலுக்கு
அவள் கண்கள் பொத்தி விளையாடுவது எப்படி என்று . . .
இதழ்களால் இதழ்கள் பொத்தி சொல்லித் தருவேன்! 

Sunday, March 11, 2012

அரவான் - விமர்சனம்


வசந்தபாலன் ஒரு ஒரிஜினல் படைப்பாளி. அரவான் பார்க்கிறவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரும் ஆங்கிலப் படங்களின் டிவிடிக்களைப் பார்த்து, அவற்றில் உள்ள நல்ல காட்சிகளை தமிழாக்கம் செய்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

அவர் வெயில் படத்தின் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக கண்களில் நீர் வழிய விவரித்ததை நேரில் கேட்டிருக்கிறேன். கதாபாத்திரங்களை உயிருள்ளவர்கள் போல நம்பி அவர்களுடன் ஒன்றக் கூடியவர். ஆனால் அரவானில் அவர் கதாபாத்திரங்களுடன் ஒன்றியதைவிட பிரமாண்டம், கிராபிக்ஸ், பீரியட் ஃபிலிம், டிஜிட்டல் சினிமா என்று டெக்னிகல் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் அதிகம் ஒன்றிவிட்டார் எனத் தோன்றுகிறது.


அண்ணா சாலை வழியாக சத்யம் எஸ்கேப்புக்குள் நுழைய முற்படுபவர்கள், நைட் ஷோவுக்கு சாயங்காலமே புறப்பட்டுவிடுவது நல்லது. திக்குத் தெரியாமல் திரியும் திரைக்கதை போல, தியேட்டரின் நுழை வாயிலைத் தேடி (மெட்ரோ ரயிலுக்கு வழிவிட்டு) கிட்டத்தட்ட 300 யு டர்ன்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தாமதமாகப் போனாலும் ஃபிங்கர் சிப்ஸ் மொறு மொறுவென்று சூடாகக் கிடைக்கிறது என்பதும், படம் ஆரம்பித்துவிட்டாலும், சென்னை டிராபிக் ஜாம் போல, நமக்காக அதே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருக்கிறது என்பதும் முதல் பாதியின் மைனஸ்.


கதைக் களமும், கதையும் அருமை. ஆனால் படத்தில் ஓடி ஒளியும் கதாநாயகனைப் போல,  திரைக்கதையும் ஓடி ஒளிந்துவிட்டது.


எதைச் சொன்னாலும், நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதால், பண்டைத் தமிழர்களை பீட்ஸா தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுள்ள பாலை படத்துக்கு ஒரு சபாஷ்! அடடா பாலை என்று சொல்லிவிட்டேனா...! பரவாயில்லை.... கிட்டத்தட்ட அதே சாயலில் வெளியாகியுள்ள அரவான் படத்துக்கும் அதே சபாஷை பாதியாக்கி பகிர்ந்து கொடுக்கிறேன்.

இரு படங்களும் முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரான படங்கள் என்பதில் ஒற்றுமை துவங்குகிறது. பண்டைய தமிழர்களைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க, அவர்கள் களவாடியதையும், சண்டையிட்டுக் கொண்டதையும் மட்டுமே சொன்னதில் ஒற்றுமை தொடர்கிறது. அப்புறம் (ஏதோ ஃபேஷன் ஷோவில் பிடித்துக் கொண்டு வந்தது போலத் தோன்றும்) கதை நாயகிகளை தேர்வு செய்த விஷயத்தால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவதை தவிர்க்கவே முடியவில்லை. மிக முக்கியமாக சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்க வேண்டியதை, இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீட்டி முழக்கி அலுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பசுபதி நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய தியேட்டர் அனுபவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதெல்லாம் போதாது. ஆதிக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும் அதிகமாக சோபிக்கவில்லை. காரணம் அவருக்கு பெரும்பாலும் அழுத்தமற்ற காட்சியமைப்புகள். படம் முழுக்க வரும் நாயகியை விட, நண்பனின் மனைவியாக வரும் பெண்ணும்,  கவர்ச்சிப் பெண்மணிகளும் அதிகம் நிற்கிறார்கள். கோடம்பாக்கத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அலைபாய்ந்து கொண்டிருக்கும் பரத்துக்கு அரவான் சரியான பயிற்சிப் பட்டறை! அஞ்சலி தேவையற்ற தேர்வு, வீணடிக்கப்பட்டிருக்கிறார்.


எங்களுடன் படம் பார்த்த சொற்ப இரசிகர்களில் பாதிப்பேர், படத்தில் நடித்த யாருக்கோ நண்பர்கள் போலிருக்கிறது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அலுத்துப் போய் அவர்களே கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் பாப்கார்ன் செம சேல்ஸ். பக்கெட் பக்கெட்டாக காலி செய்தார்கள். படம் சுவாரசியமின்றி தொய்யும்போதெல்லாம், இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.


எனது நண்பர் விவேக் நாராயண் ஒரு பாடலில், சீர்காழி சிவசிதம்பரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் சுமார் என்றாலும், (அரவான் அரவான் கோரஸ்) ஏதோ முஸ்லீம் பாடல் போல ஒலிக்கிறது. கதாநாயகி தேர்வைப் போலவே, கார்த்திக்கை இசையமைப்பாளராக்கியதும் ராங் சாய்ஸ். நிலா பாடலில் வரும் கிராபிக்ஸை எட்டாங்கிளாஸ் படிக்கும் மாணவர்களே ஃபிளாஷில் செய்துவிடுவார்கள். படு குழந்தைத் தனமாக இருந்தது!

சிலுக்கு சீஸன், பழி வாங்கும் சீஸன் போல இது தமிழ் உணர்வு சீஸன் போலிருக்கிறது. பாலை, ஏழாம் அறிவு, அரவான் என்று தொடர் தமிழ் உணர்வுத் தாக்குதல்கள் கொஞ்சம் கிலியைத் தருகிறது. சந்தோஷமாக இருந்தாலும், அரை குறை திரைக் கதைகள் இம்சிக்கின்றன.

மகா பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, தன்னைத் தானே பலி கொடுத்துக் கொண்டவனின் பெயர் அரவான். வசந்தபாலனின் நாயகன், இரு ஊர்களின் பகை தீர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்கிறான்.

மரண தண்டனை அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. இனிமேல் இருக்கக் கூடாது என்ற டைட்டில் கார்டுடன் படம் முடிவடைகிறது.

ஆனால் படம் இந்த டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஆதி கழுத்தை வெட்டிக் கொள்ளும் முன் ஃபிளாஷ் பேக்கில் கதை நகர்ந்திருக்க வேண்டும்.

காவல்கோட்டம் புத்தகத்தின் இடையில் வந்து போகும் சிறுகதைதான் அரவான் திரைக்கதை என்று வசந்தபாலன் சொல்லியிருந்தார். அரவான் படம் முழுவதுமே ஒரு இடைச் செருகலை வலிந்து இழுத்தது போலத்தான் இருக்கிறது.

டியர் வசந்தபாலன்,
இனி நாவல்களை முழுவதுமாக வாசியுங்கள். எங்களைப் போல பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆங்கிலப்பட டிவிடிக்களை பார்த்துவிட்டு திரைக்கதை எழுத ஆரம்பிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவே சிந்தித்து நல்ல படம் எடுக்கக்கூடியவர் என்கிற அபார நம்பிக்கையால் இதை உரிமையுடன் சொல்கிறேன்.

(அவர் எந்தெந்த படங்களின் டிவிடிக்களை பார்த்து அரவானில் காட்சியமைத்திருக்கிறார் என்பதை, வசந்தபாலனை விமர்சிக்க நேர்ந்த  வருத்தத்துடன், இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்)

இதே திறமையான டீம், இன்னும் நல்ல திரைக்கதையுடன் மீண்டும் களத்துக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.