Thursday, August 16, 2012

ஃபேஸ்புக் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதம்

வணக்கம் கலைஞர் அவர்களே, 

பல தலைமுறைகள் கண்ட நீங்கள், இன்றைய இணைய தலைமுறையையும் நேரடியாக சந்திக்க வந்ததை பலத்த கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.

சரியோ, தவறோ இயன்றவரை பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உங்கள் கருத்துகளை எங்களிடம் கூறிவருகி
றீர்கள்.

அரசியல் களம் பல கண்டது உங்கள் பேனா! நாட்டின் தலையெழுத்தை புரட்டிப் போட்ட பல விவாதங்களை துவக்கியும், நடத்தியும் வைத்திருக்கிறது உங்கள் பேனா! உங்களுடைய அனுபவம் வாய்ந்த பேனா, இனி எங்களுடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லும் என்பது இனிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

உங்கள் மீதும், உங்கள் இயக்கம் மீதும் இங்கே எத்தனையோ விமர்சனங்கள் உண்டு, ஆதரவுக் குரல்களும் உண்டு. இவற்றையெல்லாம் சமாளிக்கத்தான் நீங்கள் இணையம் வந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

உங்களை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா? என தயக்கமும், எங்கள் விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? என அச்சமும் எங்களில் சிலருக்கு இருக்கிறது. அவற்றை களைவீர்கள், எங்களுடன் கலந்து உரையாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதுகிறேன்.

வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வையும் உங்கள் பேனா நுனியில் வைத்திருப்பவர் நீங்கள். கட்டற்ற சுதந்திரம் தந்திருக்கும் இணையம், உங்களைப் போன்ற மாபெரும் தலைவர்களையும் சந்திக்க, உரையாட வாய்ப்பு தந்திருக்கிறது. இதனை நாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வோம்.

உங்களைத் தொடர்ந்து, உங்களைப் போன்ற இதர தலைவர்களும் இணையத்திற்கு வர வேண்டும். விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும். மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள தூரம் இதனால் குறையும்.

அப்படி ஒரு நிலையை நீங்கள் விரைவில் ஏற்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை உங்களை இணைய உலகிற்கு அன்புடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கிறேன்.

இப்படிக்கு உங்கள் ஃபேஸ்புக் நண்பன்.
(ஃபேஸ்புக் எல்லோரையும் இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறது)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கடிதம் சார்... நன்றி...

வாழ்த்துக்கள்...

Unknown said...

கடிதம் கலைஞரின் நேரடிப்பார்வைக்குப்போகுமானால்...
கலைஞருக்கு ஒரு நல்ல முகநூல் நண்பர் கிடைத்து விட்டார்...!

அப்படியில்லாமல் ஈரோடு கதிர் அண்ணே சொன்னது போல -

கலைஞரே உட்கார்ந்து நேரிடையாக கலைஞரின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் தட்டச்சு செய்வார் என நினைப்பதுதான் இணைய விழிப்புணர்வின் உச்சம்! :) - என்றாக எண்ணிக்கொண்டாலும் சரி...

இனி முகநூலிலும் துவிட்டரிலும் அரசியல் வழக்கத்தையும் விட அதிகம் சரளமாகும்...! போல