Friday, July 13, 2012

ஆண்டோ பீட்டர்

ஆண்டோ பீட்டர்!
என் நண்பர். ஆனால் அதிகம் பேசிப் பழகாத நண்பர். சில நட்புகள் அப்படி அமைந்துவிடும். எப்போதும் நினைவில் இருப்பார்கள். ஆனால் பேசிக் கொள்கிற சந்தர்ப்பம் வாய்க்காது.

அந்தக்கால Tiff முதல் இன்றைய Tam, Tab மற்றும் Unicode வரை தமிழ் எழுத்துருக்களை(font) உருவாக்குவதில் நிறைய பங்காற்றியவர். சிங்கப்பூரில் TI Internet 2000 தமிழ் இணைய மாநாடு நடந்தபோது, கொஞ்சம் நெருக்கமாகப் பழகினோம். அப்போதுதான் www.tamilcinema.com துவங்கியிருந்தார். மாநாட்டில் The future of Tamil ezines பற்றிப் பேச வேண்டும். எதிர்காலத்தில் இணையப் பத்திரிகைகள் நிச்சயம் கொடிகட்டிப் பறக்கும். பல பத்திரிகைகள் உருவாகும் என்று அப்போதே கணித்து சொன்னார். இன்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா.காம் அதற்கு சாட்சி.



ஆண்டோ பீட்டர், கம்ப்யூட்டர் உலகம் பத்திரிகை ஆசிரியர் மகேந்திரன் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். அதனால் பெரும்பாலான சந்திப்புகள் மகேந்திரன் இருக்கும்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின் போதும், ஏதாவது புத்தகம் எழுத வேண்டும், கைடு தயாரிக்க வேண்டும், விஸ்காம் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும், சாஃப்ட் வியூ நிறுவனத்துக்கு விளம்பரம் எடுக்க வேண்டும் என்று ஏதாவது காரணங்கள் இருக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை, இதுவரை அவருடன் இணைந்து எந்த புராஜக்டும் செய்ய வாய்க்கவில்லை.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். CSC நிறுவனர் திரு.ஐயம்பெருமாள் அவர்கள் மறைந்தவுடன் அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வாய்ப்பு கிடைத்தது. அந்த புத்தகத்திற்கு அணிந்துரை ஆண்டோ பீட்டர்தான். நான் இன்னும் அந்த அணிந்துரையை வாசிக்கவில்லை. அடுத்தவாரம் வெளியிடப்படுவதாக தேதி குறிக்கப்பட்டுள்ள அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவேமாட்டார் என்பது என்பது வாழ்வின் விசித்திரங்களைச் சொல்வதாக இருக்கிறது.

கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டிருந்த போது, Add Friend என்ற அறிவிப்புடன் ஆண்டோ பீட்டரின் புகைப்படத்தை பார்த்தேன். ஒரு நிமிடம் நிதானித்து அப்புறம் என்று ஒத்தி வைத்துவிட்டேன்.

ஆனால் இன்று அவர் மறைந்துவிட்டார். அவரை ஃபேஸ்புக்கில் நண்பராக ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாமோ? கடைசியாக ஒரு ஹலோ சொல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!

4 comments:

எல் கே said...

மின்தமிழ் குழுமம் மூலம் பழக்கமானவர். நல்ல நண்பர்

J.P Josephine Baba said...

நல்ல மனிதர்!

மதுரை சரவணன் said...

தருணங்கள் முக்கியம் வாய்ந்தவை…காலம் கடந்த எந்த முடிவும் எந்த ஹலோவுக்கும் உயிரூட்டம் கொடுக்க இயலாதவை… அனுதாபங்கள். நல்ல மனிதரைப் பற்றி செய்தி அறிந்தேன்.

Unknown said...

நல்லதோர் தகவல் களஞ்சியமாய் விளங்கியவர்....இவர் சரிவர பழக்கமில்லை எனினும் இப்போது வரை இவரின் இழப்பு நம்பகதன்மையற்றதாகவே இருக்கு என் மனதுக்கு :-(