Friday, June 29, 2012

வளசரவாக்கம் மின்வாரியத்தின் அலட்சியம்!


சென்னை ஆழ்வார் திருநகர் காந்தி ரோடில் அபாயகரமாக வெளியே துருத்திக் கொண்டிருக்கும் மின் கேபிளைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். 

பெரிய விபத்து நடக்கும் வரை அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

பிஸியான இந்தச் சாலையில் சில நாட்களுக்கு முன்பு ஏதோ பிரச்சனை என்பதால், பூமிக்கு அடியில் இருந்த கேபிளை தோண்டியிருக்கிறார்கள். பிரச்சனையை சரி செய்த பின் அரைகுறையாக அப்படியே விட்டுவிட்டார்களாம்.

அருகில் இருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் பல முறை புகார் செய்தபின், அந்த இடத்திற்கு ஏ.இ வந்தாராம். அவரும் கேபிளை மூடச் சொல்வதற்கு பதிலாக, ஆள் இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதைக் கேட்டதில் இருந்து அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கேபிள் இன்னமும் புதைக்கப்படாமல் இருக்கிறது. மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈரத்தில் பொதுமக்கள் யாருக்காவது ஷாக் அடித்து விபத்து ஏற்பட்டுவிட்டால்... அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு இந்த பொறுப்பற்ற அலட்சிய அதிகாரிகள் தான் காரணம்.

அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அண்ணா மேம்பால பஸ்விபத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? டிரைவர் தரப்பு, பஸ் ஓட்டை, சீட் ஆடிக் கொண்டிருந்தது. அதனால் திருப்பத்தில் கழன்று கொண்டு, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்கிறது. ஆனால் அதிகாரிகள் தரப்போ, டிரைவர் வேகமாகச் சென்றார், பாலம் சரியில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறது.  நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு இல்லை. அதனால் இது சாதாரணமாகத் தோன்றுகிறது. அதே போலத்தான் இந்த மின் கேபிள் விஷயத்திலும். பொதுமக்களும் புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இது பற்றிய புகாரை எழுத்து மூலம் தருவதில்லை. எனவே அதிகாரிகள் எங்கள் கவனத்துக்கே வரவில்லை என்று தப்பிவிடுகிறார்கள்.

எனவே விரைந்து நடவடிக்ககை எடுக்கும்படி அதிகாரிகளை வலியுறுத்தவும், இது திடீரென்று புதிதாக முளைக்கப்போகிற பிரச்சனை அல்ல. ஏற்கனவே இந்த அபாயம் இருந்தது, வளசரவாக்கம் மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை, தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள்  என்று பதிவு செய்யவும் இதை எழுதுகிறேன்.

No comments: