Thursday, December 1, 2011

பாலை - விமர்சனம்

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம்.

Canon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடிட் செய்யப்பட்ட படம். அந்த வகையில் இந்தப் படத்துக்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டுகள்.

கதைக் களம் வித்தியாசமானது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்கள் வகுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை. முல்லை நிலத்தில் வசிக்கும் தமிழர்களை, வந்தேறிகள் பாலை நிலத்துக்கு துரத்தியடிக்கிறார்கள். ஓடி ஒளிந்த தமிழர்கள் போரிட்டு மீண்டும் முல்லை நிலத்தை வெல்கிறார்கள்.

அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை, இரண்டு மணி நேரத்துக்கு இழு இழு என்று இழுத்துவிட்டார்கள். சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாத திரைக்கதை. படம் பார்த்து முடிக்கும்போது அசதியாக இருக்கிறது. மனதில் எதுவுமே தங்கவில்லை.

நாட்டிய நாடகத் தன்மை படம் முழுவதும் இழையோடுகிறது. வெள்ளைத் துண்டுகளும், மலர் கிரீடங்களும்தான் மேக்கப். சில நேரங்களில் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் போல இருக்கிறது. குறிப்பாக காயாம்பூ என்கிற பெண் பாத்திரம் தோன்றும்போதெல்லாம் அப்படி இருக்கிறது. அந்தப் பெண் ஈர்க்கிறார். அவர் ஏற்கனவே இரு தமிழ் படங்களில் நடித்திருக்கிறாராமே..

மற்ற நடிகர்களில் எவருடைய முகமும் மனதில் தங்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி வந்து மறைகிறார்கள். தமிழர்களும், வந்தேறிகளும் மோதுகிற காட்சிகளில், இருவருமே ஒரே மாதிரி வெள்ளை துண்டுகளை அணிந்து கொண்டு, இருட்டிலும், மணல் புழுதியிலும் மோதும்போது, யார் யாரை தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை.

பழந் தமிழர்கள் போர் செய்வதைத் தவிர வேறெதுமே செய்யவில்லையா? இவ்வளவு நீளமான படத்தில் தமிழர்களின் மற்ற குணாதிசயங்களையும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம்.

இந்தப் படம் தியேட்டர்களை விட்டு போகக் காரணம், சினிமாவை கையில் வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் என இயக்குனர் சில பேட்டிகளில் குற்றம்சாட்டியிருந்தார்.

சுவாரசியமில்லாத காட்சியமைப்புகள் நிறைந்த பாலையை எவ்வளவு பெரிய பண முதலையும் ஓட வைக்க முடியாது என்பதுதான் என் கருத்து.

வித்தியாசமான படங்கள் எல்லாம், நல்ல படங்கள் அல்ல. - உதாரணம் பாலை.

5 comments:

குரங்குபெடல் said...

மிக யதார்த்தமான பார்வையில் . . .

விமர்சனம் . . .

நன்றி

thodarum muyarchigal.... said...

palai padam patriya uggal vimarsanathirkku nandri anna.. thodardhu thaggal vimarsanaththai varaverkkirean.

Ravindhar said...

நல்ல விமர்சனம்.இத்தகைய படங்களுக்கு ”சாய் சாந்தி “ திரையரங்கு வழங்கிய அந்த நல்ல உள்ளத்திற்க்கு பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் கருத்து யதார்த்தமாக இருக்கிறது செல்வா...!!!

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

விகடன் முதற்கொண்டு மற்றவர்கள் சொல்லத் தயங்கிய விமரிசனத்தை வெளிப்படையாக வைத்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழர்...