Saturday, October 9, 2010

வோறொரு டிவியில் நியுஸ் பார்த்து, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் சேனல்கள்!

மீடியாக்களின் நெகடிவ் பிரசாரங்களை தவிடு பொடியாக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள்.
காமன் வெல்த் போட்டிகளில், நேற்று(அக்டோபர் 8) நம்ம சாய்னா, மலேசியாவின் வோங் மியு சூவை எதிர்த்து 24-26, 21-17 21-14 என்ற கணக்கில் செம த்ரில்லிங் மாட்ச் ஒன்றை ஜெயித்தார். இந்தியாவில் இறகுப் பந்து போட்டியை பிரபலப் படுத்திய பிரகாஷ் படுகோன், அவருடைய மகளும் சினிமா நடிகையுமான தீபிகா படுகோன் உட்பட பிரபலங்கள் காலரியில் உட்கார்ந்திருக்க, இரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.சாய்னா! சாய்னா! என்று அவர்கள் கோரஸாக கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்காக குரல் கொடுத்தது, பார்க்கவே பரவசமாக இருந்தது.

அடுத்துதான் நம்ம சூரப்புலி மீடியாக்களின் காமெடி ஆரம்பித்தது. NDTV HINDU மற்றும் SUN NEWS சானல்கள் சாய்னா தங்கம் வென்றுவிட்டதாகவும், இந்தியா மொத்தம் 21 தங்கம் வென்றுவிட்டதாகவும்  ஃப்ளாஸ் நியுஸ் போட ஆரம்பித்துவிட்டன. சாய்னா அடுத்த சுற்றுக்குதான் தகுதி பெற்றுள்ளார் என்பதை அவர்கள் உணர ஒரு மணி நேரம் பிடித்தது.

எதையும் சரிபார்க்காமல், மற்றொரு டிவியை பார்த்தே, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் இவர்கள்தான் காமன்வெல்த் போட்டியை குறை சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டியில் குறைகள் நிச்சயம் உண்டு. ஆனால் அவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியாக்களின் இலட்சணம் இதுதான்.

அவர்களை விட்டுத் தள்ளுங்கள். எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். காமன்வெல்த் போட்டிகளில் எங்கே சாக்கடை ஒழுகுகிறது என்பதை தேடிக் கொண்டிருக்கும் காமெடி மீடியாக்களை ஒதுக்கிவிட்டு, வியர்வை சிந்தி பதக்கங்களை வெல்லும் இளைஞர்களை கொண்டாடுவோம்.