Monday, May 31, 2010

10-10-10

நான் இந்தப் புத்தகத்தை வாசித்தேன். நான் தன்னம்பிக்கை பெற்று, கோடீஸ்வரனாக மாறியது அதிலிருந்துதான். இப்படி பலர் சொல்வதையும், எழுதியிருப்பதையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் சொன்ன புத்தகத்தைப் படித்தால் தூக்கம் சொக்கும். அடுத்த வரிக்குப் போகமுடியாமல் ஜவ்வாக ஒரே வரியிலேயே பிசுபிசுக்கும். இதற்கு சுறா படத்தை ரெண்டுவாட்டி பார்க்கலாம் என்று கூட தோன்றும்.

ஏன் இப்படி? சிலரை கண்டவுடன் பிடிக்கும். காதல் கூட வரும். ஆனால் உங்கள் கண்களுக்கு ஆர்யா, மாதவன், அஸின், அனுஷ்கா போல வசீகரித்தவர்கள் என் கண்களுக்கு எடைகுறைப்பு விளம்பரத்தில் வரும் அட்டுகளைப் போலத் தோன்றும்.  அதைப் போலத்தான், சில வரிகளும், வார்த்தைகளும் கண்டதும் ஈர்க்கும். மனதில் தைக்கும். உங்களுக்கு சுண்டல் மடிக்கிற பேப்பராகத் தோன்றும், ஆனால் எனக்கு கீதை போல அட்வைஸ் பண்ணும்.

சிங்கம் படத்தில் வரும் அனுஷ்காவைப் போல சிக்கென்று இந்த வாரம் என் மனதில் ஒட்டியதுதான் 10-10-10. எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோன்னு அன்னைக்கு பாட்ஷா சொன்னார். பத்து பத்தா உன் செயல்களைப் பிரிச்சுக்கோன்னு குமுதம் சொல்லுது. ஆமாம் குமுதத்துல தான் இதை நான் படிச்சேன். ஐயைய்யோ... கதவைத் திறந்து சாமியார் மேட்டர்களை வளர்த்த பத்திரிகையிலிருந்தா என்று ஓட வேண்டாம். இது கொஞ்சம் உருப்படியான மேட்டர்தான்.

எதையும் பிளான் பண்ணாம செய்யக் கூடாது என்ற வடிவேலுவின் பஞ்ச் டயலாக்கை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
எதைச் செஞ்சாலும் அதை 3 பத்தா பிரிச்சுக்கணுமாம்.
முதல் 10 - அடுத்த பத்து நிமிஷத்தைப் பற்றியது.
2வது 10 - அடுத்த 10 மாதங்களைப் பற்றியது.
3வது 10 - அடுத்த 10 வருடங்களைப் பற்றியது.

இப்போ உதாரணத்துக்கு வருகிறேன்.
முதல் 10
அடுத்த 10 நிமிடங்களுக்கு கனவு நாயகன்/நாயகியை முத்தமிட வாய்ப்பு கிடைத்தால்....? என்ஜாய்!!!.
2வது 10
10 நிமிட முத்தத்ததால் பத்து மாத பந்தம் ஏதாவது உருவாகிவிட்டால் சமாளிக்க திறன் இருக்கிறதா? கையளவு சம்பாத்யம், குழந்தையை சமாளிக்கும் திறன், மாமியார், மச்சினன் பிரச்சனை உட்பட எல்லாவற்றையும் யோசியுங்கள்.
3வது 10
பத்து மாத பந்தம் ஓகே. அடுத்த 10 வருடங்களுக்கும் இதே மூஞ்சியைத்தான் பார்க்க வேண்டும். ஒரு நாள் சத்யம், அடுத்த நாள் ஐநாக்ஸ் என்று தியேட்டர் மாற்றியது போல, இந்த உறவை மாற்ற முடியாது. எத்தனை அலுப்பாக இருந்தாலும் தொடர வேண்டும். இதற்கு தயாரா? தயார் இல்லை என்றால் முதல் பத்து நிமிட முத்தத்துக்கு முன்பே விலகி விடுங்கள்.

இப்போது, எதையுமே பிளான் பண்ணாம செய்யக் கூடாது என்ற சாதாரண வடிவேலுவின் சோதா தத்துவம் பளிச்சென்று அட்டகாசமாகத் தோன்றுகிறதா? அப்படியென்றால் எனக்குப் பிடித்த 10-10-10 என்ற தத்துவம் உங்களுக்கும் பிடித்துவிட்டது என்று பொருள். பிடிக்கவில்லையென்றால் காத்திருங்கள், தமன்னாவைப் பிடிக்காதவர்களுக்கு அனுஷ்கா வந்தது போல, 10-10-10 பிடிக்காதவர்களுக்கு ஒரு 20-20 வரும். அதுவரைக்கும் அட்டகாசமா அடிச்சு ஆடு மாமே...!

சைட் அடித்த நேரம் போக, டைம் கிடைச்சா இந்த வெப்சைட்டையும் கண்டுக்கோ நைனா. குமுதம் சுட்டுப் போட்ட மேட்டர் இங்கதான் ஒரிஜினலா இருக்குது. http://www.suzywelch101010.com/