Tuesday, February 9, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 01

நிலம் ஒன்றே,
சேரிக்கும் சீவாலயத்துக்கும் ஜலம் ஒன்றே,
அலம்புவதற்க்கும் பூசைக்கும் குளம் ஒன்றே,
தன்னைத்தான் அறிந்தவனுக்கே . . .

இதை பேச்சுப் போட்டியில் பேசி பரிசு வாங்கி மறந்தவர்களும், மறக்காவிட்டாலும் பின்பற்ற முடியாதவர்களும், மறந்தாலும் பின்பற்ற முயற்சிக்கிறவர்களும் ஒன்று கூடி கும்மியடிக்கிற ஆன்லைன் மடம் டிவிட்டர்.

தினப்படி வேலைகளைத் தவிர்த்து, டிவிட்டரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் சங்க காலம் முதல், அவதார் காலம் வரை 140 எழுத்துகளில் சுருங்கிய தகவல்கள் சற்றும் எதிர்பாராமல் கிடைக்கலாம். ஆனால் அத்தனையும் சளைக்காமல் ஓடும் நதி போல சளசளவென விரைவாக . . .

சரி எதற்க்காக இந்த டிரையலர்? டிவிட்டர் நதியில் தகவல்களையும், விமர்சனங்களையும், வெற்று அரட்டைகளையும் அள்ளிக் கொட்டுபவர்கள் நேரில் சந்திக்க நேர்ந்தால்? பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமையில் அப்படி ஒரு சந்திப்பு மெரினா பீச்சில் காந்தி சிலை அருகில் நிகழ்ந்தது.

சந்திப்பை பற்றி துவக்குவதற்குமுன் ஒரு கேள்வி. டிவிட்டர்கள் சந்திப்பு எதற்கு?
ஏய் . . .
வாடா சும்மா போய் யாரெல்லாம் வராங்கன்னு பார்த்துட்டு வரலாம்.
Bee . . . மாதிரி நேரில் போய் ரெண்டு கொட்டு கொட்டலாம்.
சீய் . . . இந்த ஆளு அவ்வளவுதானா/இவ்வளவு பெரியவனா என்று நொந்து/வியந்து போகலாம்.
டீ . . . பிஸ்கெட்டை அங்க போய் ஓசியில சாப்பிடலாம்.
ஈ . . . ன்னு இளிச்சு நிறைய ஃபிரெண்டுகளை சம்பாதிக்கலாம்.
ஃ . . . மேற் கூறிய எல்லாம்.
ஃ2 . . . மேற் கூறிய எதுவுமில்லை.

இதில் எது உங்கள் பதில் என்பதை யோசித்துக் கொண்டே அடுத்த வரிக்கு நகருங்கள்.

சந்திப்பு ஆரம்பித்த கதை
எழுதுவதற்கு மிட்நைட் கவிதையும், வாசிப்பதற்கு லைம்லைட் பிளாகுகளும் சிக்காத சில இரவுகளில் வெறுமனே தமிழ் டிவிட்டுகளை கவனித்துக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு இரவில் நியுஜெர்ஸி டிவிட்டர் @njganesh நான் சென்னையில் இருக்கிறேன் என்றார். உடனே @vickytamil நாம் சந்திக்கலாமா என்று பதிலுக்கு டிவிட்டினார்.

 இடையில் வேறு வேலைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நுழைந்தபோது எங்கே சந்திக்கலாம் என்று கேட்டு (@elavasam, @icarusprakash, @athisha, @luckykrishna, @anbudan_bala) டிவிட்டியவர்களின் எண்ணிக்கை கூடியிருந்தது. எந்த முன் உத்தேசமும் இல்லாமல் ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைவது போல நானும் வர்றேன் என்று டிவிட்டினேன். பட்டென பவர்கட் போல டிவிட்டரே அமைதியாகிவிட்டது. என் மிட்நைட் கவிதைக்கு மிரண்டு அனைவரும் பதுங்கிவிட்டார்களோ என சந்தேகித்தபோது @mu75 எத்தனைபேர் என்று கேட்டார். நான்தான் இது வரைக்கும் ஆட்டத்திலேயே இல்லையே, இருந்தாலும் டிவி பார்த்து ஸ்கோர் சொல்வது போல ஆறோ ஏழோ என்றேன். கேட்ட அடுத்த வினாடி @priyaraju ஆஜராகி ”இந்த முறை மன்னியுங்கள், நண்பர்களே. சில உறவினர்களை நாளை சந்திக்க உள்ளேன். அடுத்த முறை சந்திப்போம்” என்று ஸ்கோரைக் குறைத்தார். அதே நேரம் பளிச்சென @vickytamil ஆஜராகி "இதுவரைக்கும் 12 + 1 பேர்" என்று ஸ்கோரை ஏற்றினார். யாரந்த +1 எனக்கேட்டதற்கு இதுவரைக்கும் பதில் இல்லை. இடையில் @elavasam காலையில் வைக்கமுடியுமா நானும் வரப்பார்க்கிறேன் என்றார். நான் மீண்டும் இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்க என்று கேட்டவுடன் 4 மணி காந்தி பீச் என்று ஒருவழியாக @vickytamil அறிவித்தார்.

திடீரென @ommachi ஆஜராகி ”குடும்பத்துடன் வரலாமா? ஆண்டீர் மட்டுமேவா?” என்றார். இடையில் புகுந்த @lavanyaj This tweetup is for guys alone? என்று அதையே ஆங்கிலத்தில் கேட்டார். யாரும் பதில் சொல்லாததால் @ommachi I would like to come with the kid அப்போதான் நம்மள (வசதியாய்) கண்டுகாம வுடுவாங்கோ :)  என்றவுடன் சூட்சுமம் புரிந்து நானும் மனைவி ஜெயந்தி மற்றும் மகளுடன் வருவதாக சம்மதித்தேன். ஆனால் @lakshmi ஹோம்வொர்க் செய்து தருவதாக சம்மதித்தும், என் மகள் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இதற்கிடையில் @anbudan_bala குடும்பஸ்தர்களுக்கு ஒரு வரவேற்பு டிவிட்டை தட்டிவிட @lavanyajவும் வருவதாகச் சம்மதித்தார்.

கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடித் தடங்கள் இல்லை.

எந்தக் காலத்திலோ கணையாழியில் படித்த ஹைகூவை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன். என் காலடித் தடங்கள் எங்கே போனதாம் என்று கேட்பவர்கள் அடுத்த வரிக்கும், கேட்காதவர்கள் அடுத்த பாராவுக்கும் தாவலாம்.
”என் பின்னால் டிவிட்டர் நண்பர்கள் வந்துகொண்டிருந்ததால் என் காலடித் தடங்கள் மறைத்துவிட்டன” என்பது முந்தைய ஹைகூவில் எழுதப்படாத (எழுதக்கூடாத) கடைசி வரி.

காந்திசிலையை நெருங்கியபோது
@vickytamil கிட்டத்தட்ட நான் மனதில் வடித்திருந்தது போலவே தேகம். முன் நெற்றி மட்டும் அதிகம். ஆனால் ”வாங்க அவர் நான் தான் இவர்” என்று அதிர்வேட்டு போல வரவேற்ற @njganeshன் சரீரமும் சாரீரமும் (கமெண்ட் உபயம் @anbudan_bala) நான் எதிர்பாராதது. மனிதர் செம ஜாலி பட்டாசு. ஃபிங்கர் சிப்ஸ் போல பொறாமைப்பட வைத்த ஒல்லி உடம்புடன் மையமாகச் சிரித்து கைகுலுக்கி வரவேற்றார் @luckykrishna. எனக்குப் போட்டியாக @njganesh கூலிங்கிளாஸை எடுத்து மாட்டி அட்டகாசமாக போஸ் கொடுக்க காமிரா கிளிக்க ஆரம்பித்தது. ஓரிரு கிளிக்குகள் முடிவதற்கு முன் பீச்சுக்காற்றில் சுடிதார் போட்டு ஒரு காற்றாடி பறந்து வந்தது போல இருந்தது. பார்த்தால் நம்ம @lavanyaj என் மனைவி துணைக்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் லாவண்யாவிற்கு ஹலோ சொல்ல அது ஒரு கிளிக் ஆனது. கொஞ்ச நேரத்தில்
லாரிக்கு ஒதுங்குகிற மொபெட் போல @athisha வந்தார். போட்டோவுக்கு போஸ் கொடுக்க அநியாயத்துக்கும் பிகு செய்தார்.


சிறிது நேரத்தில் @ommachi @lakshmi தம்பதியர் குழந்தையுடன் வருகை தந்தனர். பரஸ்பர கைகுலுக்கல் மற்றும் குழந்தை கொஞ்சலுக்குப் பின் ”இவர் உண்மையிலேயே நியுஜெர்சிதானா?” #doubt01 என்று என் மனைவி @njganeshஐ சந்தேகித்தார். அட ஆமாங்க. நான் என் பேச்சை வச்சு என்னை சைதாப்பேட்டைன்னு முடிவு பண்ணிடாதீங்க. தமிழ்லயே டி-ஷரட் போடற அளவுக்கு பற்று அதிகமானதால என்கிட்ட அமெரிக்க வாசனை கம்மி என்றார்.

அதற்குள் பெண்கள் தனிக் கூட்டணி அமைக்க, @ommachi மட்டும் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். காலையில ரிப்போர்ட்டர், மத்தியானம் டிவிட்டர், அப்புறம் பிளாகர் அப்படின்னு தினசரி டிரிபிள் ரோல் பண்றோம் என்றார்கள் அதிஷாவும், லக்கியும்.அவர் திரைப்படக்குழு கதை, திரைக்கதை, வசனங்கள், பாடல்களை முடித்துவிட்டு நடிகர் நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறது என்றேன் நான். விக்கி தான் சார்ந்திருக்கும் டாட்காம்கள் பற்றி ஏதோ சொன்னார்.  கணேஷ் லோக்கல் கடை ஒன்றில் கத்தரிக்காய் வாங்குவது போல செல் போன் பர்ச்சேஸ் கதையைச் சொன்னார். இதற்குள் அரை மணி நேரம் கடந்து கால் வலிக்க ஆரம்பித்ததும்,  நாம உள்ள மணல்ல போய் உட்காரலாம். மத்தவங்க மெதுவா வரட்டும் என்று முடிவானது. முதலில் வந்த டிவிட்டர் குழு காந்தி சிலையை விட்டு உள்ளே நகர்ந்தது.

நகர்ந்த பின் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இன்னும் சில கேள்விகள்.
எழுதியவை இலகுவில் மறந்து எழுதியவர்களே அதிகம் நினைக்கப்படுவதால் டிவிட்டுகளை ஜங்க் ஃபுட், ஜங்க் ஃபிக்ஷன் போல ஜங்க் சொற்கள் என்று சொல்லலாமா?
கோடம்பாக்கத்திற்கு பஸ் ரூட் சொல்வது போல எளிதாக இருப்பதால் பேப்பர் பேக், வெர்னாகுலர், மாத நாவல்கள் வரிசையில் டிவிட்டுகளை சேர்க்கலாமா?
வடிவேலு - சிங்கமுத்து மோதல்கள் போன்ற மெலிதான விஷயங்களைக் கூட தீவிரமாக அலசிக் காயப்போடுவதால் ஜங்க்கர்கள் என்று டிவிட்டர்களை அழைக்கலாமா? யோசிப்பவர்கள் இங்கேயே நிற்கவும், மற்றவர்கள் அடுத்த வரிக்கு வந்துவிடலாம்.

பீச் மணலில் வட்டமாக வசதியாக உட்கார்ந்தபின்னும் என்னை ஆச்சரியப்படுத்திய சமாச்சாரம், நமது @ommachiயின் அமைதி. கடந்த (வசந்தபவன்) டிவிட்டர்கள் சந்திப்பில் எஃப்எம் ரேடியோ போல எங்களைக் கவர்நதவர், இந்த முறை விருப்பம் கேட்ட நேயர் போல மகளுடன் காத்தாடி விட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் @luckykrishnaவும் @athishaவும் தங்கள் டிவிட்டர் அவதாரம் முடிவதாகவும், இனி உலகசினிமா இரசிகனாக அவதாரமெடுத்து கிழக்குப் பதிப்பகம் செல்லவேண்டுமென்றார்கள் வாட்சைப் பார்த்தபடி. இப்பதான் ஓபனிங் டைட்டில் போட்டிருக்கோம் அதுக்குள் எண்ட் டைட்டிலா?  என்று நொந்த வேளையில் பெண்கள் தங்களுக்குள்ளும், மொபைலிலும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

@njganeshன் இடிக்குரலில் புதியதலைமுறை மாத இதழின் தொடர் விளம்பரங்களைப் பற்றி பேச்சு யு டர்ன் அடித்தபோது, SRM குழு கல்விக்கென புதிய சானல் துவங்குகிறார்களாமே என்ற என் சந்தேகத்தை மறுத்தார்கள் @luckykrishnaவும் @athishaவும். டிவி பற்றி பேச்சு வந்தவுடன் தூர்தர்ஷனில் எனது நிகழ்ச்சி மற்றும் துபாய் பயண விபரங்களை கேட்டுக்கொண்டார் @vickytamil. @ommachiக்கு காத்தாடி அலுத்துவிட்டது போல, மற்றவர்கள் எங்கே என்று தூரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே திசையில் உற்று நோக்கிய விக்கி, @icarusprakash அப்பவே வந்துகிட்டிருக்கேன்னு சொன்னாரே எங்க காணோம் என்று முணுமுணுத்தபோது, கையில் காமிராவுடன் அவர் வந்தார்.

டிவிட்டர்கள் மற்றும் பதிவர் சந்திப்புகளில் ஆளாளுக்கு ஒரு காமிரா இருப்பது வசதி. போஸ் கொடுக்கத் தேவையின்றி, அவரை விட்டுட்டோமா, நாம இருக்கோமா என்ற கவலையின்றி கிளிக்குகளுக்கிடையில் இயல்பாக அரட்டை நடக்கிறது. அதற்கு இந்த சந்திப்பை பற்றிய புகைப்படங்களே சாட்சி.
.
@icarusprakash @luckykrishna மற்றும் @athisha இவர்கள் மூவரும் சந்திப்பு எக்ஸ்பர்டுகளாக இருக்கிறார்கள். மிக இயல்பாக இணைந்து மிக இயல்பாக விலகுகிறார்கள். பல்வேறு சந்திப்பர்களைப் பற்றி காமெடியாக அலசுகிறார்கள். இன்னைக்கு நம்மளப் போலவே இன்னொரு குரூப் மஞ்ச சட்டையில சந்திக்கிறாங்க என்றார் @luckykrishna. ஆங்கிலத்தில் மட்டுமே டிவிட்டும் குழு ஒன்றிடம் நானும் வரலாமா என்று தமிழில் விண்ணப்பித்தேன். அதற்கும் ஆங்கிலத்தில்தான் பதில் தந்தார்கள் என்றார் @athisha. பைக்கை பீச்சுலயே விட்டுட்டு உலக சினிமாவுக்கு போயிட்டு வந்திடலாமா என்று @luckykrishnaவும் @athishaவும் சுறுசுறுப்பு காட்டியபோது @lavanyaj மற்றும் @njganesh ஆகிய இருவரும் அவர்களிடம் இன்டர்வியு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

@ommachi இன்னும் அதிசயமாக அமைதி காத்தார். வட்டம் பெரிசா இருக்கு கொஞ்சம் கிட்ட உட்காரலாமே என்று @icarusprakash யோசனை சொல்ல, வட்டம் சுருங்கியது. ஆனால் அடுத்த வினாடியே @icarusprakash எழுந்து கொண்டு இதோ வர்றேன் என்று கிளம்பினார். எதற்கு என்பது நான் சொல்லாமலயே உங்களுக்குத் தெரியும்.

இடைவேளை


@njganesh தனது பையை திறந்து எடுத்தது என்ன?
@anbudan_bala @spinesurgeonனிடம் கேட்ட அதிரடி கேள்வி என்ன?
@madhankarky யார் என்பது எப்போது வெளியானது?

இது போன்ற அதிரடி சஸ்பென்ஸ் கேள்விகளுடன் அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.தொடர்ச்சியை படிக்க அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.