Wednesday, March 10, 2010

சுவாமி சரியானந்தா - நான் எப்பவுமே ரைட்டு

அந்த சாமியாரின் பெயர் சுவாமி சரியானந்தா. அவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும். அவர் சொன்னால் அது பலிக்கும். அவர் சொல்லி எதுவுமே நடக்காமல் போனதில்லை. அதனாலேயே அவருக்கு சுவாமி சரியானந்தா என்ற பெயர் வந்துவிட்டது. மேட்டுக்குப்பம் பக்தர்களிலிருந்து நியுஜெர்சி பக்தர்கள் வரை எல்லோருக்கும் அவர் ஒரு மகான். அவர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு அருள்வாக்கு வாங்கிச் செல்வார்கள்.

”சாமி”
”உனக்கென்னம்மா தெரியவேண்டும்”
”எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?”
”என்னைப் போலவே உனக்கொரு மாயக் கண்ணன் வந்து பிறப்பான் மகளே”
ஆயிரம் ரூபாய் தட்சணை வைத்துவிட்டு, பக்தை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அடுத்த பக்தர் பரவசத்துடன் நுழைகிறார்.

”சுவாமி”
”சொல் குழந்தாய்”
”எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?”
”நிச்சயம் கிடைக்கும், மகிழ்ச்சியுடன் போ”
தட்டில் சில நூறுகளை வைத்துவிட்டு அவர் நகர அடுத்த பக்தர் வருகிறார்.

”குருஜி”
”எனக்கு இந்த டென்டர் கிடைக்குமா?”
”நமது ஆசிரமத்திற்கு 10 இலட்சம் கொடுத்தால் அந்த 100 கோடி டென்டர் உனக்குதான்?”
”இதை நான் எப்படி நம்புவது?”
”ஹா..ஹா..ஹா..சந்தேகப் பதரே.. என் மேலேயே சந்தேகமா... இருக்கட்டும்... சிஷ்யா?”
”சொல்லுங்கள் குருவே”
”டென்டர் கிடைக்கும் என்று நான் சொன்னதை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு பத்து லட்சம் வாங்கியபின், இந்த சநதேகபுத்தி அற்பனை அனுப்பி வை”
”உத்தரவு குருவே”

தட்சணையை வாங்கி உண்டியலில் போட்டபடி ”டென்டர் கிடைக்காது” என்று நோட்டுப் புத்தகத்தில் சிஷய்ர் எழுதுகிறார். பிறகு . . .

”குருவே எனக்கொரு சந்தேகம்”
”கேள் சிஷ்யா”
”ஆண் பிறக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பெண் என்று எழுதச் சொல்கிறீர்கள். வேலை கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் வேலை கிடைக்காது என்று எழுதச் சொல்கிறீர்கள். டென்டர் கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் டென்டர் கிடைக்காது என்று நோட்டுப்புத்தகத்தில் எழுதச் சொல்கிறீர்கள். ஏன் இப்படி?”

”சிஷ்யா !!! இது இந்த முட்டாள் பக்தர்களை ஏமாற்றும் எளிய வழி. யாருக்காவது நான் சொன்னது நடக்காமல் போனால் உடனே என்னிடம் தான் மீண்டும் வருவார்கள். அப்போது இந்த நோட்டுப் புத்தகம்தான் நம்மை காப்பாற்றும்”
”எப்படி?”, என்று சிஷ்யர் கேட்க, அடுத்து ஒரு பெண் பக்தை உள்ளே வருகிறார். முகத்தில் பதற்றம், ஏமாற்றம்.

”சாமி..ஏன் என்னை கைவிட்டுட்டீங்க?”
”அழாமல் விஷயத்தை சொல் பக்தையே”
”எனக்கு ஆண் பிறக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டதே”
”பக்தையே நீ தவறாகச் சொல்கிறாய். நான் சரியாகத்தான் சொன்னேன். சிஷ்யா அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் காட்டு”
”அட ஆம் குருவே, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அம்மா நீங்களும் பாருங்கள்”, என்று சிஷ்யர் நோட்டுப்புத்தகத்தை நீட்ட அந்தப் பெண் அதைப் படித்துவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள்.

”ஐயோ சாமி..நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, புலம்பிக் கொண்டே வெளியே சென்ற பின் குருஜி புன்னகைக்கிறார்.
”சிஷ்யா, இப்போது புரிகிறதா நான் ஏன் உன்னை மாற்றி எழுதச் சொல்கிறேன் என்று?”
”புரிகிறது குருவே..இந்த உலகில் உங்களை வெல்ல யாரும் இல்லை”

சுவாமி சரியானந்தா வாழ்க.. சுவாமி சரியானந்தா வாழ்க..
பக்தர்களின் வாழ்த்து கோஷம் டிவியில் லைவ்வாக 75 நாடுகளில் ஒலிக்கிறது.

8 comments:

ஆயில்யன் said...

சாமியாராகிறதுக்கு ஏதோ ஃபார்முலா கதைகள் மாதிரி இருக்கு ரைட்டு எது எப்படியோ சமூகம் சந்தோஷமா இருந்தாச்சரி :)))

butterfly Surya said...

சரிதான். ரைட்டு.

பத்மநாபன் said...

'''சரியானந்தா '' ......'''' சரியானந்தா''
(விவேக் படத்தில் வரும் ''பல்பானந்தா ..... ''பல்பானந்தா என்ற பஜனை ராகத்தில் பாடலாம் )

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பரவாயில்லையே... இப்படியும் கூட பிசினஸ் பண்ணலாம் போல் இருக்கே!!!

Chitra said...

ஸ்ரீலஸ்ரீ செல்வகுமாரானந்தாவுக்கு நிறைய டிப்ஸ் தெரியுதே. ஆனந்தா காலேஜ் எப்போ ஆரம்பிக்க போறீங்க?

R.Gopi said...

சுவாமி செல்வானந்தா அவர்களே

உங்களிடம் எந்த எந்த கன்ஸல்டேஷனுக்கு எவ்வளவு எவ்வளவு தொகை என்று தெரிவிக்கலாமே...

Thenammai Lakshmanan said...

எந்த சாமியார்கிட்டயோ சிஷ்யரா இருந்த மாதிரி தெரியுது செல்வா

priyamudanprabu said...

நல்ல டெக்கினுக்கு

ஆசிரமம் ஆரம்பிச்சுட வேண்டியதுதான்