Friday, February 19, 2010

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - 03

மீண்டும் வட்டமடித்து அமர்ந்த போது மீண்டும் இனிப்பு இன்னொரு சுற்று வந்தது. நீங்க பாண்டியராஜன் மாதிரி எப்பவும் கூலிங்களாஸை கழட்ட மாட்டீங்களா என்று @njganesh என்னை நக்கலடிக்க, அதை கழட்டிட்டா வயசு அதிகமா காட்டும் என்று என் மனைவி வெள்ளைக் கண்ணாடியை மாற்றித் தந்தாள் (கவலையா, கடுப்பா). உண்மையிலேயே இப்பதான் நீங்க யூத்தா இருக்கீங்க என்று பாலா, @ommachi உள்ளிட்டோர் (கேலியா,நிஜமா) சர்டிபிகேட் கொடுத்தார்கள். அப்போது பாலா, @ommachiக்குப் பின்னால் பலூன் சுடும் கடை ஜரூர் ஆகிக் கொண்டிருந்தது. ஹலோ ரொம்ப பின்னால போகாதீங்க சுட்டுருவாங்க என்றார். இதுக்குப் பேரு சுடறதா? ரிலீசுக்கு முன்னாடியே ஜக்குபாய் சிடியானதுக்குப் பேர்தான் சுடறது என்றார் @rgokul. என்னைப் பார்த்து டைரக்டர் உங்க படம் எப்போ என்றார் @anbudan_bala, எதுக்கு சிடி போடறதுக்கா என்று அதிர வைத்தார் @ommachi.
.
யாரு ஹீரோ? யாரு மியுசிக் போன்ற சம்பிரதாய சலசலப்புகள் அடங்கிய பின்னால், மீண்டும் அதே ஸ்வீட் வந்தது. அலுத்தபடி அட எனக்கு வேணாங்க என்றபடி @njganesh தனது மூட்டையை எடுத்து வைக்க, மற்றவர்கள் அனைவரும் கப்சிப் ஆனோம். அனைவரும் பார்வையும் அவருடைய பையில். அவரோ ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் டைம் பாமை ஃபியுஸ் செய்வது போல, பயங்கர சஸ்பென்சுடன் படு நிதானமாக பையை திறக்க ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த நான் ஆர்வம் தாங்காமல் எட்டிப்பார்த்துவிட்டு,  கணேஷ் சாப்பாடு கட்டிக்கிட்டு வந்திருக்காருங்க என்று கொளுத்திப் போட, பதறியபடி அவர் தனது மூட்டையை பட்டெனத் திறந்தார். உள்ளே இருந்து அவர் வெளியே எடுத்தது..... சே! தண்ணீர் பாட்டில். 

அடுத்த சில நிமிடங்களை ஆபரேஷன் செய்தவர் @spinesurgeon இலவச இன்ஷீரன்ஸ் அது இதுன்னு சொல்றீங்க? ஆனா ஒருத்தன் பொது மருத்துவமனைக்கு வந்து போனா அவனைப் பத்தி ஒழுங்கா ரெக்கார்ட் மெயிண்டெயின் பண்றீங்களா நீங்க? என்று வம்புக்கு இழுத்தார் @anbudan_bala வம்புக்கு இழுக்க வைத்தவர்கள் @vickytamil மற்றும் @icarsprakash. கலைஞரை வம்புக்கிழுத்தால் டாக்டர் சூடாவார் என்பது டிவிட்டர் ஐதீகம். ஆனால் ஆத்து மணலில் பீச்சு மணலை நைசாகக் கலப்பது போல, டாக்டர் சிக்கலில் சிக்காமல் எந்த அளவுக்கு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பற்றிய தகவல்களை கணிணி மயமாக்கி இருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். விளக்கத்தை விலாவாரியாக கேட்டு வாங்கியது, வெங்கட். டாக்டர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த என் மனைவி இவர் உண்மையிலேயே டாக்டரா என்று சந்தேகக் கேள்வி எழுப்ப #twitter-meet-doubt-03, ஏங்க இப்படி ஒரு சந்தேகம் என்று மொத்த டிவிட்டர்களும் அதிர்ந்தார்கள். ”இல்ல அவர் பேசற அழகான கோயம்புத்தூர் தமிழைக் கேட்டா ஆச்சரியமா இருக்கு” என்று அப்பாவியாக என் மனைவி சமாளித்தார். இவரை டாக்டர்னு சொல்றதுக்கே அதிர்ச்சியாகறீங்களே, இளைய தளபதி விஜய்யை டாக்டர்னு சொன்னப்போ எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று மொத்த பேரும் கோரஸாகச் சொல்ல, உண்மையிலேயே அதிர்ச்சியானவர் நம்ம @scanmanதான். அவர் பேரு விஜய். நானும் டாக்டர் விஜய், அவரும் டாக்டர் விஜய்யான்னு புலம்பித் தள்ளிட்டார் என்று @spinesurgeon தனது சக டாக்டரின் சார்பில் புலம்பினார் (அல்லது சந்தோஷப்பட்டார்).

திடீரென பிரகாஷ் முகத்தில் குறும்பு, டாக்டர் உங்களை பாலா என்னமோ கேட்கணுமாம் என்றார். என்னது? நான் டாக்டரான்னு நீங்களும் கேட்கப் போறீங்களா? அதான் அவங்க கேட்டுட்டாங்களே என்றார். இல்ல இது வேற என்றார் பாலா. கேளுங்க என்றார் டாக்டர். நாங்கள் எல்லோரும் என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகமாகி பாலாவைப் பார்க்க, இளையராஜாவுக்கு பத்மபூஷண் கொடுத்தது பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க என்றார். தனது வாயைப் பிடுங்க வலை விரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த டாக்டர், கொடுக்கலாமே தப்பில்ல, எவ்வளவோ பேருக்கு தர்றாங்க, இப்ப இளையராஜாவுக்கும் கிடைச்சிருக்கு என்று, மையமாகப் பேசி ஜகா வாங்கிக் கொண்டார். பொறி பறக்கும் என்று நினைத்த மற்ற டிவிட்டர்களுக்கு ஏமாற்றம்.
போட்டோவை ஏற்றிவிட்டு அடுத்த வரியை எழுதுவதற்கு முன் உதயம் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வீடு வருவதற்குள் படம் மறந்து போனாலும், அன்றைய சந்திப்பில் தமிழ்படம் பற்றிய பேச்சு ஞாபகம் வந்தது.

தமிழ்படத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, ஒரு தடவை பார்க்கலாம். நேற்று நான், மனைவி,மகள் மூவரும் போய்விட்டு வந்தோம் என்றார் @ommachi. அத இரசிக்கணும்னா பழைய படமெல்லாம் பார்த்திருக்கணும், இல்லன்னா சிரிப்பு வராது என்றார்கள் @icarsprakash, @spinesurgeon, @njganesh. அப்படின்னா எனக்கு ஒத்து வராது என்றார் வெங்கட். ஆனா இதை தலைவர் ஃபேமிலி தவிர யார் எடுத்திருந்தாலும் ரிலீஸ் பண்ணியிருக்க முடியாது, என்ன சொல்றீங்க என்று மீண்டும் பாலா டாக்டருக்கு கொக்கி போட, டாக்டர் சிக்கவே இல்லை. ஆமாம், ஆமாம் என்று என்னைப் பார்த்து (ஏன் என்னைப் பார்த்து?) சிரித்தார்.


இடையில் மீண்டும் என்னுடைய ”அவர்” படம் பற்றி பேச்சு வந்தபோது MP3 பிளேயரில் வைத்திருந்த பாடலை @anbudan_bala, @ommachi, @njganesh, @icarsprakash, @madhankarky @vickytamil @lavanya ஆகியோர் தனித்தனியாகக் ஆளுக்கொரு பாடலாகக் கேட்டார்கள். மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு 5 நிமிஷம் நீங்க கண்ணை மூடினா, உங்க பாடல்களை சுட்டு நெட்டுல போட்டுலாம் என்று @njganesh கிண்டலடித்தார்.

இவங்க எல்லாரையும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கீங்களா என்று மறுபடியும் ஒரு சந்தேகத்தை கிளப்பினாள் என் மனைவி. #twitter-meet-doubt-04. @ommachi, @icarsprakash தவிர மற்றவர்களை இப்போதுதான் நான் பார்க்கிறேன். ஏன் கேட்கிற? என்றேன். இல்ல எல்லாரும் பல வருஷ ஃபிரண்ட்ஸ் மாதிரி ஜாலியா ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கறீங்களே, அதனாலதான் கேட்டேன் என்றாள்.


நான் பதில் சொல்லும்முன் @madhankarky மணலில் ஏதோ எழுத ஆரம்பித்திருந்தார்.
க - கா - கி - கீ -கு -கூ
ப - பா - பி - பீ - பு -பூ
ம - மா - மி - மீ - மு - மூ
இந்த எழுத்து வரிசைகளின் எழுதும் பாணியை உற்று நோக்குங்கள். “அ, ஆ, இ, ஈ“ ஒலி வரை எல்லாம் ஒரே மாதிரி உள்ளன. ஆனால் “உ“ ஒலி வரும்போது எழுதும் முறையில் “கு“ மேல் நோக்கி சுழிக்கப்படுகின்றது. ”வு” கீழ்நோக்கி ஒரு நேர்கோடாக இறங்குகின்றது. அதே போலத்தான் ”ஊ” ஒலியுள்ள எழுத்துக்களும் அடிப்படை ஒலியில் ஒன்றாக இருந்தாலும் எழுதும் முறையில் மாறுபடுகின்றன. இதை சரி செய்து அனைத்துக்கும் ஒரே மாதிரி எழுத்து வடிவம் கொண்டு வந்தால் தமிழுக்கென கீபோர்டு வடிவமைப்பதும், குழந்தைகளுக்கு தமிழ் எழுதக் கற்றுத் தருவதும் சுலபமாகிவிடும், என்று @madhankarkyயும், @spinesurgeonம் படு தீவிரமாகச் சொன்னார்கள்.

சிங்கப்பூரில் தமிழ் எழுத்துப் பயிற்சி என வரும்போது, “ட ப” போன்ற வளைவற்ற எழுத்துக்களில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது. போகப் போக ”க, வ” போல வளைவுகளுக்குப் பழக்கி கடைசியாக “இ” சொல்லித் தரப்படுகின்றது என்று டிவிட்டர் மீட்டிங், செம்மொழி மாநாடு போல வித்தியாசம் காட்டத் துவங்கியது. ஆனால் @ommachi மற்றும் venkat இந்த பயிற்சி முறை பம்மாத்து என்றார்கள். வளைவுகளை உடனே பழக்க வழி கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, தள்ளிப் போடுவது வேஸ்ட் என்றார்கள்.

திடீரென பேச்சு எல்.கே.ஜி லெவலில் இருந்து, டாப் கியருக்கு மாறியது. என்னதான் தமிழுக்கு வக்காலத்து வாங்கினாலும் இஞ்சினியரிங் மற்றும் மருத்துவத்தை ஆங்கிலம் தவிர்த்து தமிழில் மட்டும் படிக்க முடியுமா? என்று @icarsprakash கேட்டதும், ஏன் முடியாது என்று @ommachi சூடாகிவிட்டார். படிக்க முடியாது என்பது ஒரு mind set தான் என்று வெங்கட் அவரை ஆமோதித்தார். ஜப்பானில், சைனாவில் எல்லாம் ஆங்கிலம் கிடையாது. அவர்களில் டாக்டர் இல்லையா, சயிண்டிஸ்ட் இல்லையா என்று @ommachi கேட்க, ஆனால் அதற்கு மேல் படிக்க ஆங்கிலம் கட்டாயம் தேவையாமே என்று யாரோ சொல்ல... அதற்கு மேல் என்றால் நோபல் பரிசு வாங்க தமிழ் போதாதுன்னு சொல்றீங்களா? நான் இதை மறுக்கிறேன் என்று ஆங்கிலம் தெரியாமல் நோபல் பரிசு வென்ற ஒரு ஜப்பானியரைப்  பற்றிச் சொன்னார்.

ஆனா ஒண்ணுங்க, ஏகப்பட்ட திறமைசாலிகள் இருக்காங்க, இந்தியாவில ஐ.டி. முன்னேறிடுச்சு, அது இதுன்னு சொல்றாங்க, ஆனா ஒரே ஒரு புராடக்டாவது இந்தியர்கள் உருவாக்கினதுன்னு இருக்கா? இதே எம்.பி.3 பிளேயர்லயே பாட்டு கேட்கறீங்க. பாட்டுக்கு Tag இங்கிலீஷ்லதான் இருக்கு. இதை தமிழ்ல பண்ண முடியாதா? ஏன் யாரும் முயற்சிக்கல? என்று வெங்கட் காட்டமாகக் கேட்டார்.

அதற்கு யார் என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் என் மனைவியின் கடைசி சந்தேகம் #twitter-meet-doubt-05. அவர் யாரு என்றாள் @madhankarkyயைக் காட்டி. இவ்வளவு நேரம் கழித்து இந்த சந்தேகமா என்று தோன்றினாலும், @madhankarkyயையே பதில் சொல்லச் சொன்னேன். அவர் என் பெயர் மதன் கார்க்கி, அண்ணாமலை யுனிவர்சிட்டியில் தமிழ் கம்ப்யுட்டடிங் பற்றி வகுப்பு எடுக்கிறேன், என்று முடித்துக் கொள்ள, முக்கியமா அவர் கவியரசு வைரமுத்துவின் மகன் என்று @spinesurgeon சொல்ல, ஏங்க அவர் வைரமுத்துவோட பையன்னு ஏன் சொல்லல என்று மனைவி ஆதங்கப்பட்டார். அவரே அடக்கமா இருக்கும்போது, நான் என்னத்தை சொல்ல என்றேன். @lavanyaவும் என் மனைவியைப் போலவே வியக்க ஆரம்பித்திருந்தார். அதே நேரம் இருட்ட ஆரம்பித்திருந்ததால், அனைவரும் புறப்பட முடிவானது. ஆளாளுக்கு ஃபோன் நம்பர்களையும், டிவிட்டர், இ-மெயில் ஐடிகளையும் பரிமாறிக் கொள்ள, மணி 7.30, கடைசி நேர ஃபிளாஷ்கள் மின்னின.

@lakshmi கடைசிவரை பார்வையாளராகவே இருந்தார். அரட்டையில் வெகு சில வார்த்தைகளே பேசினார் என்பது பெட்டிச் செய்தி. @lavanjaj அவ்வப்போது சில கேள்விகளைக் கேட்டார், பதில்களை காதில் வாங்கிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. என் மனைவி டிவிட்டர் அல்ல என்பது உபரிச் செய்தி.

விடைபெறும் போது எனக்குத் தோன்றியது இதுதான். சந்திப்பு ஏற்பாடானது டிவிட்டர் வழியாக இருக்கலாம். ஆனால் சந்திப்பை சாத்தியமாக்கியது மனிதர்களை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் ஆர்வம் தான். இந்த ஆர்வம் அடிக்கடி சந்திக்கும் நட்பாக மாறலாம் அல்லது டிவிட்டுகளாகவே தொடரலாம்.

சந்திப்புக்கான பஞ்ச் லைன், அதே இரவில் @anbudan_bala விடமிருந்து வந்தது. அவர் @madhankarky வைரமுத்துவின் மகனா?  சொல்லவே இல்லையே என்று டிவிட்டியிருந்தார். டிவிட்டுகள் தொடரும்.

4 comments:

ஆயில்யன் said...

//விடைபெறும் போது எனக்குத் தோன்றியது இதுதான். சந்திப்பு ஏற்பாடானது டிவிட்டர் வழியாக இருக்கலாம். ஆனால் சந்திப்பை சாத்தியமாக்கியது மனிதர்களை மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் ஆர்வம் தான். இந்த ஆர்வம் அடிக்கடி சந்திக்கும் நட்பாக மாறலாம் அல்லது டிவிட்டுகளாகவே தொடரலாம்.///


ரைட்டு !:)

நிச்சயம் நல்லதொரு நட்பு கிடைக்கப்பெற்றதன் தொடக்கமாகவே கொள்ளுங்கள் இந்நிகழ்வினை - தொடரட்டும் டிவிட் சந்திப்புக்கள் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கின்றேன் நேரில்...!

:)

ஆயில்யன் said...

// வெள்ளைக் கண்ணாடியை மாற்றித் தந்தாள் (கவலையா, கடுப்பா). உண்மையிலேயே இப்பதான் நீங்க யூத்தா இருக்கீங்க என்று பாலா, @ommachi உள்ளிட்டோர் (கேலியா,நிஜமா) சர்டிபிகேட் கொடுத்தார்கள்.//

வெள்ளை/கறுப்பு கண்ணாடிகளெல்லாம் வேண்டாம் இனி நாங்கள் நம்பிவிட்டோம் டைரக்டர் சார் நீங்களும் யூத்தே தான் ! :))

enRenRum-anbudan.BALA said...

உங்களுக்கு இருக்கும் வேலையில், மெரினா சந்திப்பு பற்றி விரிவாக, ரசிக்கும் வகையில் எழுதியதற்கு நன்றி.

It was a enjoyable and worthwhile meeting.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு சார்...