Wednesday, October 7, 2009

கவிதை என்பது . . .



கவிதை!
நினைத்தால் வருவதல்ல.
உள்ளுக்குள் ஊறியிருக்கும்
நினைப்பால் வருவது!

தோற்றவனின் முகச்சுளிப்பு அல்ல.
அகத்தின் ஆழத்தில் பெருகி வரும்
வேதனைகளின் வார்த்தை தெளிப்பு!

நீண்டு விரிந்திருக்கும் பாதை அல்ல
அதில் பதிந்து அழிந்திருக்கும்
பாதச் சுவடுகள்!

புல்லாங்குழலின் துளைகளில் தெறிக்கும்  இசை அல்ல.
இசைப்பவனின் ஆன்மாவில்
அமிழ்ந்து கிடக்கும் ஆரவாரங்களின் முணுமுணுப்பு!

இளநியில் பூசியிருக்கும் பச்சை மினுமினுப்பு அல்ல
நார்களின் உள்ளே பொதிந்திருக்கும்
நீரின் குளுகுளுப்பு!

----------------------------- இந்த வரிகள் 30.4.85ல் எழுதியது

கவிதை என்பது . . .
எழுதியது அல்ல
எழுத நினைப்பது!

----------------------------- இந்த வரிகள் இன்று எழுதியது

Monday, October 5, 2009

வானவில் உலகில் “லலிதம் சுதர்ஸனம்”

நான் தற்போது ”அவர்” திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது ஒரு ரிப்பீட் செய்தியாகிவிட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. ”அவர்” திரைப்படம் வெள்ளித் திரையில் ஒளிரும் வரை நான் அடிக்கடி அவரைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பேன். ஏனென்றால் தற்போது என்னை முழுவதும் ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

படத்திற்கான ஸ்கிரிப்ட் தான் முதல் படி. வசனம் உட்பட ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டுதான் மற்ற எதுவும் என்பதில் உறுதியாக இருந்தேன். திருப்தி வரும் வரையில் ஸ்கிரிப்டை செதுக்கிக் கொண்டே இருந்தேன். எழுதும்போதே எங்கெங்கே எதுபோன்ற இசை தேவை என்பதையும் குறித்துக் கொண்டே வந்தேன். அதனால் ஸ்கிரிப்ட்டை முடித்த கையோடு பாடல் மற்றும் பிண்ணனி இசை கோர்ப்பு பற்றிய விவாதத்தில் இறங்கிவிட்டேன்.

படத்தில் ”வானவில் உலகம்” என்ற பாடல் வருகின்றது. முழுக்க மேற்கத்திய பாணியில் அமைந்த ஒரு மெலடி. அந்த மெலடிக்கு இடையே ஒரு Divine Feel தேவைப்பட்டது. தெய்வீக உணர்வு தேவை என்றவுடன் அதற்கான வார்த்தைகளை சில நாட்கள் தேடினேன். கடைசியாக ரெய்கி மாஸ்டர் திரு.பாலகுமார் அவர்களை நாடினேன். அவர் ”லலிதம் ... சுதர்ஸனம்” என்ற இரு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை கொடுத்தார். சுதர்ஸனம் என்றால் பேரொளி. அது ஆண் சக்தி. லலிதம் என்றால் பெண் சக்தி. இரு சக்திகளும் இணையும்போது, அதனால் ஏற்படக்கூடிய தெய்வீக அதிர்வுகள் பூரணமாக இருக்கும் என்று விளக்கத்தையும் திரு.பாலகுமார் அவர்கள் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், அளப்பறிய ஆற்றல் பொருந்திய ஒன்றை நாம் கையாளப் போகிறோம். அதை கவனமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. இந்த வார்த்தைகளையும், அதற்கான அர்த்தங்களையும் கூறியவுடன், எனது நண்பரும் இசையமைப்பாளருமாகிய விவேக் நாராயண் மௌனமாகிவிட்டார். பிறகு முதலில் டியுனை ஓ.கே. பண்ணு. பிறகு லலிதம் சுதர்ஸனத்திற்கென தனியாக ஸ்பெஷலாக சிந்திக்கலாம் என்றார். நானும் அவர் சொன்ன படியே ஒரு மெட்டை தேர்ந்தெடுத்து ஓ.கே செய்தேன்.

இன்னைக்கு நைட் feed பண்ணிடறேன். நாளைக்கு காலையில பாட்டு ரெடியா இருக்கும் என்றார். சரி என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர் பின்னாடியே வந்துவிட்டார்.
என்ன?
பாட்டு ரெடி!
”வானவில் உலகம்” பாட்டு நான் ஓ.கே செய்த மெட்டில் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம்? இன்னும் அருமையான ஒரு டியுனில் இருந்தது. அதை விட ஆச்சரியம். அசத்தலான வெஸ்டர்ன் பாணி இசைக்கு இடையில் இழைந்த சாமவேத மெட்டு. வெஸ்டர்ன் இசையுடன் சாமவேதமா? எப்படி? ஏன்? என்று தோன்றுகிறதா?

இசையின் ஆரம்பமே சாமவேதம் தான். அதனால்தான் ஆற்றல் பொருந்திய ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகளை சாமவேத மெட்டில் பொருத்தினேன் என்றார் விவேக் நாராயண். இது பற்றிய விளக்கங்களை அவரே பிளாக் ஒன்றில் எழுதியுள்ளார்.

முதல் முறை கேட்டபோது, ”லலிதம் . . . சுதர்ஸனம்” என்ற வார்த்தைகள் ஏற்படுத்திய தெய்வீக அதிர்வுகளை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

”அவர்” பாடல்கள் விரைவில் வெளியாகும். அப்போது நீங்களும் அந்த இனிய அதிர்வை உணர்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஏ.ஆர்.இரகுமான் எம்.எஸ்.வியை காப்பியடித்து ஆஸ்கார் வென்றாரா?


இந்த வாரம் இசை வாரம் போலிருக்கின்றது. என்னுடைய பல பதிவுகள் இசையை பற்றியே பதிவாகியிருக்கின்றது. சரி, விஷயத்திற்க வருகின்றேன்.

வலையுலகின் மிகப்பிரபல பதிவர் அதிஷா ஒரு பதிவு எழுதியுள்ளார். அட்டைக் காப்பிக்கு ஆஸ்கர் - இதுதான் தலைப்பு! இளையராஜாவின் இன்னும் வெளிவராத சிம்பொனி மீதும், ரஹ்மானின் ஜெய்ஹோ மீதும் இன்னமும் பல (ராஜா/ரகுமான்) வெறி பிடித்த இரசிகர்கள் ஆசிட் ஊற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள் இசையின் இரசிகர்களாக அல்லாமல் இசையமைப்பாளர்களின் இரசிகர்களாக இருப்பதால் தான் இந்த விபரீதம். அதிஷாவின் இந்தப் பதிவும் ஏ.ஆர்.இரகுமானை பிடிக்காத ஒருவரின் வெளிப்பாடுதான்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” என்ற அற்புதமான மறக்கமுடியாத பாடலை எம்.எஸ்.வி இசையமைத்திருக்கின்றார். இந்தப் பாடலின் மெட்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையமைத்து ஆஸ்கர் வென்ற ஜெய்ஹோ பாடலின் மெட்டும் ஒரே மெட்டுதான். எம்.எஸ்.வியை காப்பியடித்துதான் இரகுமான் ஆஸ்கர் ஜெயித்திருக்கின்றார் என்று ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை அதிஷா முன் வைக்கின்றார்.

எம்.எஸ்.வி தின்று போட்ட எச்சிலைத்தான் இன்று இருக்கும் இசை அமைப்பாளர்கள் கையாள்கிறார்கள் என்று எஸ்.பி.பி ஒரு விழாவில் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார். அது உண்மைதான் என்றாலும், மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் எஸ்.பி.பி பலத்த கண்டனத்துக்கு உள்ளானார் (குறிப்பாக வலையுலகில் இளையராஜா இரசிகர்கள் எஸ்.பி.பியை வறுத்தெடுத்துவிட்டார்கள்). ஒரு பேட்டியில், இது குறித்து ஏ.ஆர்.இரகுமானை கேட்ட போது, இதை ஏன் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், திரை இசையை பொறுத்தவரை, எம்.எஸ்.வியின் பாதிப்பு அவருக்கும் இருக்கிறது என்று அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றுதான் அர்த்தம்.

எம்.எஸ்.வியின் பாதிப்பு இருக்கிறது என்பதாலேயே, இரகுமான் எம்.எஸ்.வியை காப்பி அடித்து ஆஸ்கர் வென்றுவிட்டார் என்று குற்றம் சாட்ட முடியாது. எம்.எஸ்.வியின் ”அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை” பாடலின் சாயல் இரகுமானின் ஜெய்ஹோவின் ஆரம்ப வரிகளில் இருப்பது போல இருக்கிறது, அவ்வளவுதான். அதிஷா அட்டைக் காப்பி என்று புலம்புவது போல ஜெய்ஹோ பிரதியெடுக்கப்பட்ட பாடல் இல்லை. இருந்தாலும் இதைப் பற்றி இசை தெரிந்த ஒருவர் சொன்னால்தான் நன்றாக இருக்கும். எனவே இது குறித்து என்னுடைய நண்பர், இசையமைப்பாளர் திரு.விவேக் நாராயணன் அவர்களை கேட்டேன். அவர் அதிஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலாக ஒரு பதிவையே எழுதிவிட்டார். இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

அதிஷா பிரபல பதிவர், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் பதிவர் அல்ல. எனவே இன்னும் பல இசை வல்லுனர்களை கேட்டு, சந்தேகங்களை களைந்து தனது தவறான குற்றச்சாட்டுக்கு மறுப்பு  எழுதுவார் என்று நம்புகிறேன். ஜெய்ஹோ!