Wednesday, November 4, 2009

தலை சுற்ற வைக்கும் கோனார் நோட்சும், தமிழ் Teacherசும்


”இவையும் சிங்கங்களும் மான்களும் புலிகளும், இங்ஙனம் ஒன்றுக்கொன்று பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும் பறவைகளும் இசையால் மயங்கித் தத்தம் வழியினை அறியாதவனாய் இடந்தோறும் ஒன்றோடொன்று கலந்து சோர்ந்து இசையாகிய வலையின்கண்பட்டன.”

இந்த வரிகளை உளறாமல் படித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண்கள். மனப்பாடம் செய்து மூச்சுத் திணறாமல் ஒப்பித்துவிட்டால் 10 மதிப்பெண்கள். தலையை பிய்த்துக் கொள்ளாமல் உடனே அர்த்தம் கூறிவிட்டால் 15 மதிப்பெண்கள். இல்லாவிட்டால் பிரம்படி மற்றும் பரீட்சையில் ஃபெயில்.

கோனார் நோட்சும், தமிழ் டீச்சரும் சேர்ந்து என் மகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தலை வலி என்றால் அனாசின், படுக்கையில் என்றால் ஹார்லிக்ஸ், டிவி என்றால் சன் டிவி என்பது போல, தமிழ் பாடம் என்றால் கோனார் நோட்ஸ் என்பது முப்பது வருடங்களாக மாறாத விதி. பலபேரின் தலை விதியை இந்த கோனார் நோட்ஸ் மாற்றியிருக்கிறது.

கோனார் நோட்ஸ் என்பது மாணவர்களின் உற்ற நண்பன் என்பார்கள். ஆனால் உண்மையில் இது தமிழ் டீச்சர்களின் உற்ற நண்பன். குறிப்பாக இங்கிலீஷ் பள்ளிகளில், தமிழ் நடத்தும் தமிழ் டீச்சர்ஸ் கோனாரின் உற்ற நண்பனாக இருக்கிறார்கள். வகுப்பில் எதையும் சொல்லித்தருவதில்லை. கோனார் நோட்ஸை மனப்பாடம் செய்யச் சொல்லிவிட்டு, சிவப்பு இங்க் பேனாவை எடுத்து மார்க் போடத் தயாராகிவிடுகிறார்கள்.

திருவிளையாடல் படத்தில் ”விறகு வாங்கலையோ விறகு” என்று கூவியபடி சிவன் விறகுவெட்டி வேஷத்தில் நடந்து வருவாரே ஞாபகம் இருக்கா?

”ஆமாம்? “பாட்டும் நானே, பாவமும் நானேன்னு“ ஒரு பாட்டு பாடுவாரே...”

”அதேதான். அவர் பாடறதைக் கேட்டு சிங்கம், மான், புலி போன்ற மிருகங்கள் எல்லாம் மயங்கிடுச்சாம். ”

”மயங்கி . .”

”மயங்கிப் போய் தங்களுக்குள்ள பகையை மறந்து, போற பாதையை மறந்து சொக்கிப்போயிடுச்சாம். இதைத்தான் கோனார் நோட்ஸ்ல எழுதியிருக்காங்க.”

”நிஜமாவா? எங்க மிஸ் இதையெல்லாம் சொல்லலயே!”

”கோனார் நோட்ஸ்லயும் இதைத்தான் எழுதியிருக்காங்க.”

”நீ சொல்றது ஈஸியா இருக்குப்பா. ஆனா இது வேண்டாம்.”

”ஏன்?”

”ஏன்னா? கோனார் நோட்ஸ்ல இல்லாததை நான் எழுதினா மிஸ் எனக்கு மார்க் போட மாட்டாங்க.”

”ரெண்டும் ஒண்ணுதாம்மா.”

”ஆனா கோனார் நோட்ஸ்ல நீ சொன்னது இல்லையே . . . அதனால நானே படிச்சிக்கறேன். என்னை விடு.”

”ஏங்க அவளை கெடுக்காதீங்க. ஏய் அப்பா சொல்றத கேட்காதடி . . .”, உள்ளேயிருந்து அவளுடைய அம்மா.

”பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும்.... பகைமை.. பகைமை... பகைமையினு... பக்கை..மை..யின..”

மீண்டும் என் மகள் கோனார் நோட்ஸை கையில் எடுத்துவிட்டாள். இனி நான் தடுக்க முடியாது.

வாழ்க கோனார் நோட்ஸ் . . . வளர்க தமிழ் டீச்சர்ஸ்

10 comments:

கலையரசன் said...

ஆமா.. அந்த கோனார் யாருங்க?
நோட்ஸ் போட்டே, நோட்டை கறந்துட்டான்!!

S.A. நவாஸுதீன் said...

”பகைமையினையுடைய ஏனைய விலங்குகளும்.... பகைமை.. பகைமை... பகைமையினு... பக்கை..மை..யின..”

ஹா ஹா ஹா. அப்ப்டியே கண்ணு முன்னாடி காட்சி தெரியுது சார். சூப்பர்.

S.A. நவாஸுதீன் said...

”மயங்கிப் போய் தங்களுக்குள்ள பகையை மறந்து, போற பாதையை மறந்து சொக்கிப்போயிடுச்சாம். இதைத்தான் கோனார் நோட்ஸ்ல எழுதியிருக்காங்க.”

”நிஜமாவா? எங்க மிஸ் இதையெல்லாம் சொல்லலயே!”

எனக்கு 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. இன்னமும் அதுதானா நடக்குது. என்ன கொடுமை சார் இது. .

Cliffnabird said...

Went back to school for a while.... !!! TRUE & Nicely said!

cool blogger said...

Half not accepted.
Koduma pandranganu theriyum. ana tamil missa sollakoodadu.

மங்களூர் சிவா said...

/
”ஏங்க அவளை கெடுக்காதீங்க. ஏய் அப்பா சொல்றத கேட்காதடி . . .”, உள்ளேயிருந்து அவளுடைய அம்மா.
/

எல்லார் வீட்டம்மணிங்களும் இப்படித்தானா??
:))


/

எனக்கு 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. இன்னமும் அதுதானா நடக்குது. என்ன கொடுமை சார் இது. .
/

அதானே :(

கடைக்குட்டி said...

இது உண்மைங்க...

நல்ல தமிழ் டீச்சர் இல்லாமா நாசமாபோனவனும் இருக்கான்.. நல்ல ஆசிரியர்களின் முயற்சியால்தானே நீங்களும் இப்ப அழக உங்க குழந்தைக்கு விளக்குறீங்க...

ஆனா மனசுல ரொம்ப நாளா இருந்த விஷயங்க...

நல்லா சொல்லி இருக்கீங்க :-)

malar said...

கோனார் தமிழ் உரை கிடைக்காமல் நான் அலைந்த அலைச்சல் எனக்கு தான் தெரியும் .நல்ல கண்டுபுச்சன்யா ஒரு கோனாரை

கிருஷ்ண மூர்த்தி S said...

கோனார் உரை என்று தமிழ்ப்பாடத்திற்கு முதலில் உரை notes எழுத ஆரம்பித்த அய்யம்பெருமாள் கோனார் காலமாகி நீண்ட நாட்களாகி விட்டனவே!

தவிர கோனார் தமிழை நன்கு கற்றறிந்தவர்.

இப்போதுள்ள டமில் டீச்சர்ஸ் மாதிரி அல்ல! இவர்களுக்கு தமிளும் தெரியாது, நோட்ஸ் எழுதவும் வராது.

ஆகையினால் அருள்கூர்ந்து கோனார் நோட்ஸ் என்று வரும் இடங்களில் எல்லாம் திருத்தம் செய்து, உங்களுக்கு முகம் தெரியாத ஒரு நல்ல மனிதனைக் கேலி செய்யாமல் இருப்பது நலம்!

Anonymous said...

>> ஆமா.. அந்த கோனார் யாருங்க?
நோட்ஸ் போட்டே, நோட்டை கறந்துட்டான்!!

அவர் பேர் ஐயம் பெருமாள் கோனாராம். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவராம்.

ஐயம் பெருமாள் கோனார் எழுத்தாளர் சுஜாதாவின் தமிழாசிரியர்.

சுட்டி: http://my.opera.com/muralikrishnanrb/blog/show.dml/1868327

http://koottanchoru.wordpress.com/2010/02/20/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95/