Tuesday, November 3, 2009

பேராண்மையில்லை - ஆண்மை - விமர்சனம்


 எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜனி பிரபலப்படுத்தி, நேற்று வந்த புதிய,இளைய,  புரட்சி தளபதிகள் வரை தன்னைத் தானே சொரிந்து கொள்ளும், புகழ்ந்து கொள்ளும் அருவருப்பான சுய பிரச்சார பாடல்களை, காட்சிகளை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் கைதட்டி இரசித்திருக்கிறோம். அவற்றையெல்லாம் இரசித்த நாம் பேராண்மை போன்ற ”சில கருத்துகளை” பிரச்சாரம் பண்ணும் படத்தை ஆதரியுங்கள் என்ற வேண்டுகோளுடன் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன்.

திரைப்படங்கள் வழியாக “தன்” கருத்தைச் சொல்லும் படைப்பாளிகளில் (ஒரே)ஒருவராக ஜனநாதன் தனித்து தெரிகின்றார்.

கதை - மிக நல்ல கதை
(சொல்லாமல் கொள்ளாமல் தழுவிய கதை என்று இணையத்தில் படித்தேன்)

திரைக்கதை - பலவீனமான திரைக் கதை
(சாதிப் பிரச்சனையாக துவங்குகிற படம், தேச பக்தி படமாக முடிகிறது)

வசனம் - கொச்சை
(அந்தப் பெண்களின் விரசமான பாலியல் பேச்சுக்களும், ஜெயம் ரவியின் வீரமில்லாத அரசியல் கருத்துக்களும்)

நடிப்பு - அனைவரும் அபாரமாக நடித்திருக்கின்றார்கள். கடினமான உடல் உழைப்பும், மனோ ரீதியான அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்தப் படத்தில் வரும் காடுகளுக்குள் நடித்திருக்க முடியாது.

எடிட்டிங் - நறுக்கென்று இல்லை.

ஒளிப்பதிவு - நடிகர்களுக்கு இணையான உழைப்பு.

இயக்கம் - ஆபரேஷன் சக்ஸஸ்.

இந்தப்படத்தில் சென்சாரால் mute செய்யப்பட்ட வசனங்களாலும், சென்சாருக்கு தப்பித்த வசனங்களாலும் இயக்குனர் ஜனநாதன் படம் முழுக்க தனித்து தெரிகின்றார். ”வசனங்களால்” என்று குறிப்பிடக்காரணம் அவருடைய கருத்து வெறும் வசனங்களாகவே வெளிப்பட்டிருக்கின்றது. கருத்துக்களை காட்சியாக்குவதில் கவனம் செலுத்தவில்லை. காட்டுவாசிகளை காட்டை விட்டு துரத்தும் காட்சியிலும் அழுத்தமில்லை. அதனால்தான் திரையரங்குகளில் வெறும் பிரச்சார நெடி அடிக்கிறது.

மேலதிகாரி பொன்வண்ணன் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கீழ்படிந்து, ஒரு புழுவைப் போல, கடமையை மட்டும் செய்யும் என்.சி.சி. அதிகாரி துருவனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். தன்னை ஒடுக்கும் ஆதிக்க சக்திகள் யார் எனத் தெரிந்தும் அவர்களை எதிர்த்து ஒரு சிறிய கல்லைக் கூட எறியவில்லை துருவன். ஆனால் முகமற்ற, வெறுமனே வெள்ளைக்காரர்கள் என்ற அடையாளத்துடன் வரும் கூலிப்படையை ஒடுக்க உடனே போரில் இறங்குகிறார்.

உலக அரசியல் சுளிவுகள், மூலதனக் கோட்பாடுகள், காட்டுக்குள் மேப் பார்த்து வழி கண்டுபிடித்தல், கொலை செய்தல் உட்பட அனைத்தையும் ஒரு Demoவாக தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு செய்து காட்டுகிறார்.

ஆனால் அந்தப் பெண்கள் யார் தெரியுமா? துருவன் ஒரு கீழ்சாதி ஆள் என்பதாலேயே அவனை பிடிக்காமல் கழிவறையை கழுவ வைத்து அவமானப்படுத்தும் ஆதிக்க வெறிபிடித்த பெண்கள். அவர்களையும் துருவன் ஒரு வார்த்தை கூட கடிந்து கொள்வதில்லை.

ஏன் என்று நமக்கு வரும் ஆச்சரியம், அந்தப் பெண்களுக்கும் வருகின்றது. ஏன் எங்கள் மேல் கோபப்படவில்லை என்று அவர்களில் ஒரு பெண் கேட்கிறாள். புன்னகைக்கும் துருவன் ”நமது சக்தியை எதிரிகளிடம்தான் காட்ட வேண்டும்” என்று துப்பாக்கியைக் கையில் கொடுக்கின்றான்.

பிறகு அதே 5 அடாவடி இளம் பெண்களுடன் இணைந்து போராடி முகம் தெரியாத கூலிப்படையினருடன் மோதி தேசம் காக்கிறார்.

அதாவது தேசத்திற்கு ஒரு ஆபத்து என்றால், சாதி மறந்து, ஆதிக்க வெறி மறந்து இணைந்து போராட வேண்டும் என்பது தான் படத்தின மெசேஜ்.  ஆனால் இந்த மெசேஜ் யாருக்கு? ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கா? அடங்கி நடப்பவர்களுக்கா? இதுதான் குழப்பம்.

ஏனென்றால் படம் முழுக்க கருத்து சொல்லும் துருவன், இந்தக் கருத்தைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதனாலேயே இது பேராண்மையில்லை.

5 comments:

பிரேம்குமார் அசோகன் said...

ஜெயம் ரவி தனக்கு குத்தப்பட்ட சாக்லேட் ஹீரோ முத்திரையை மறைக்க கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் பல காட்சிகளில் அவரது உடைகள் மற்றும் முகம், மேல்தட்டு இளைஞராகக் காட்டுகிறது.
நல்ல விமர்சனம் சார்.
ஆனாலும் என்னவோ மிஸ்ஸிங்!!

S.A. நவாஸுதீன் said...

படம் இன்னும் பார்க்கவில்லை. இனிதான் பார்க்கனும். விமர்சனம் நடுநிலையா, நல்லா இருக்கு செல்வா சார்

Anonymous said...

This movie is thousand times better than commercial movies (particularly Vijay and others). We should support movies like peranmai not like pokkiri, porukki and villu.

Though this has some flaws that can be excused bcos of the good try. Instead of pointing faults on this movie we should support this type of movies.

Anonymous said...

u said something missing in the film.. like that some thing is missing in ur review.. this film is much better than other commercials..

அப்ரகாம் said...

நல்ல விமர்சனம்
புத்தன் வாழ்ந்த பூமியில் இன்று சாதீ மதத்தின் பெயரால் நடக்கும் வண்முறையும் அது சார்ந்த வாழ்க்கைமுறையும் சினிமா இன்னும் எட்டிகூட பார்கவில்லை காரணம் சிமாவையும் ஆள்வது சாதி மற்றும் மதம் தான், பேராண்மை ஒரு சிரிய முயச்சியாக இருக்கலாம்.