Saturday, October 17, 2009

ஆதவன் - ஒளிரவில்லை!


”அண்ணே தீபாவளிக்கு ஆதவன் எத்தனை டிக்கெட் வேணும்?”, உதயம் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான செல்வம் எங்கள் குடும்ப நண்பர்.
”10 டிக்கெட் போட்டிருங்க”, என்றேன். அவர் நைட் ஷோவிற்கு டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தார்.
இதற்கிடையில் எனது சித்தப்பா சோலை வழியாக திரு.சிவகுமார் அவர்களிடமிருந்தே தீபாவளிக்கு முதல் நாளே சத்தியம் தியேட்டரில் மாலை (பிரிவியு) காட்சிக்கான டிக்கெட் கிடைத்துவிட்டது.

சீட்டில் அமர்ந்த கொஞ்ச நேரம் கழித்து, ஒரு குடும்பம் வந்து இது எங்கள் சீட் என்றார்கள். அவர்கள் கையிலும் டிக்கெட், ஆச்சரியகரமாக அதே டிக்கெட் எண்கள். சரியாக டைட்டில் போட்டு படம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த இடைஞ்சல் கடுப்பாக இருந்தது. தியேட்டரில் விசில்கள் பறக்க ஆரம்பித்த வினாடிகளில் நானும் சித்தப்பாவும் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.

”ஹலோ இது என்னங்க கன்பியுஷன்? ஒரே டிக்கெட் நம்பரை எப்படி ரெண்டு பேருக்கு இஷ்யு பண்ணீங்க?”, டிக்கெட்டை வாங்கிப் பார்த்த உதவியாளர் முதலில் ஜெர்க் ஆனார். பிறகு முகத்தில் நமட்டுப் புன்னகையுடன், ”சார், இது சத்தியம் தியேட்டர். நீங்க சாந்தம் தியேட்டரோட டிக்கெட்டை வைச்சிருக்கீங்க. ரெண்டாவது ஃபுளோர் போங்க” என்றார். அசடு வழிந்து கொண்டே ரெண்டாவது புளோருக்கு விரைந்தோம். ”நம்மள விடு. தியேட்டர்காரனுக்கு தெரியாதா? எது சத்யம் டிக்கெட், எது சாந்தம் டிக்கெட்டுன்னு. . .?” இந்த கடுப்பான கேள்விகளுடன் சாந்தம் தியேட்டரில் நுழையவும், சூர்யா திரையில் தோன்றவும் சரியாக இருந்தது.

முதல் Action காட்சி முடிந்து, பிறகு டைட்டில் போட்டு, பிறகு ஒரு பாடலும் முடியும்போது சரிதான் சூர்யா பட்டைய கிளப்ப போகிறார் என்று தோன்றியது.




கூலிக்கு கொலை செய்யும் Paid Killerஆக அறிமுகம் சூர்யா செம பிட். சிக்ஸ் பேக்கை விடாமல் வைத்திருக்கிறார். டைட்டாக உடை அணிகிறார். விதம் விதமாக யோகாசனம் செய்கிறார். அப்புறம் கொஞ்சமாக நடிக்கிறார். மற்ற நேரங்களில் எல்லாம் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்கிறார். நயன்தாராவைக் கூட மிகக் கொஞ்சமாகத்தான் கொஞ்சுகிறார். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுகிற ஸ்டண்டை இந்தப் படத்துடன் விட்டுவிடுவது நல்லது. முதலில் பார்த்த ஆச்சரியம் விலகி சலிப்பாக மாறுகிற அளவுக்கு தாவிக் கொண்டே இருப்பது ஓவர் டோஸ்.

மற்ற நேரத்தில் எல்லாம் ஏ.சி பஸ் தேடுபவர்கள், தீபாவளி அவசரத்தில் மட்டும் கிடைக்கிற தகர டப்பா பஸ்ஸில் கூட தொற்றிக் கொண்டு ஊருக்கு விரைவார்கள். அதே போல ஒரு தீபாவளி அவசரத்தில் படம் எடுத்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரின் அவசர டச், அல்லது அவுட் ஆஃப் டச் படம் முழுக்க தெரிகிறது. சில காட்சிகளில் பழைய “முத்து“ வாசனை அடிக்கிறது. பல காட்சிகளில் புத்தம் புது டெக்னிகல் ”தசாவதாரம்” வாசனை அடிக்கிறது.

முதல் 15 நமிடங்களுக்குப் பின்  சூர்யாவை விட வடிவேலு அதிகம் ஆக்கிரமிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு புரோமஷன். அதாவது இவருக்கும் கிண்டல் செய்ய ஒரு ஜீவன் சிக்கியிருக்கிறது. அந்த ஜீவன் சரோஜா தேவி. 

அதிக பட்ச மேக்கப்புடன் சரோஜா தேவி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார். (இது எம்.ஜி.ஆர் காலத்துல வாங்கின லிப்ஸ்டிக்தான)  வடிவேலு அடிக்கடி சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்.

நயன்தாரா தனது அழகை இழந்து கொண்டே வருகிறார். கன்னங்கள் ஒட்டிப்போய், ஒட்டாத மேக்கப்புடன் சூர்யாவுடன் டுயட் பாடுவதில் இளமை இல்லை.

ஆடியோ சிடியில் நன்றாக இருந்த பாடல்கள், திரையில் டல்லடிக்கின்றன. முக்கியமான எமோஷனல் காட்சிகளில் எல்லாம் ஆங்கில சோகப் பாடல்களை இசைக்கிறார் ஹேரிஸ் ஜெயராஜ். ஒட்டவில்லை!

மற்றபடி யாரையும், எதையும் குறிப்பிட்டு சொல்லத் தோன்றவில்லை. டப்பிங் குரல்கள் முதல், நடிகர், நடிகையர் தேர்வு வரை எல்லாமே ஒரு படி கம்மிதான்.


அப்புறம் அந்த 10 வயசு மேட்டர். ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியில் சூர்யா பத்து வயது சிறுவனாகத் தோன்றுகிறார். அது ஒரு கிராபிக்ஸ் நுணுக்கம். (இந்த நுணுக்கத்தின் e-How பற்றி அப்புறம் எழுதுகிறேன்) சூர்யாவை விட டெக்னிகல் டீமிற்குதான் அந்தப் பாராட்டுகள் அதிகம் போய் சேர வேண்டும். டைட்டிலில் அவர்கள் யார் என்று கவனிக்க முடியவில்லை. அவர்கள் யாராக இருந்தாலும், அந்த டெக்னிகல் டீமிற்கு பாராட்டுகள். ஆனாலும் அந்த பத்து வயசு எபிசோட், அழுத்தமில்லாத அறுவையான காட்சிகள்.

சூர்யா சாதாரண நடிகராக இருந்து ஒரு ஸ்டாராக எப்போதோ உயர்ந்துவிட்டார். இது அவருடைய ஸ்டார் ஸ்டேட்ஸை கேஷ் பண்ணுகிற படம். மற்றபடி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.

படத்தை விட End Title மகா நீளம். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருடன் சேர்ந்து படத்தின் புரொடியுசர் உதயநிதி ஸ்டாலினே தோன்றுவதால் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேல் டைட்டில் போடுகிறார்கள்.

ஆதவன் ஒளிரவில்லை!!!

பின்குறிப்பு -
இன்றைக்கு உதயம் தியேட்டரில் (தீபாவளி) நைட்ஷோவிற்கான டிக்கெட்டை யாருக்கு கொடுத்து மாட்டிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

3 comments:

குப்பன்.யாஹூ said...

Thanks for honest review,

thats why they planned for TV shows on aadhavan

பிரேம்குமார் அசோகன் said...

பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் யாவும் அயன் திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன...

இந்தப் படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென சொந்தக்காட குட்டீஸ்கள் தொல்லை...நல்லவேளை தப்பினேன்!

ARV Loshan said...

நம்ம விமர்சனமும் உங்களோடு ஒத்துப் போகிறது..
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமானது கொஞ்சம் கடுப்புத் தான்.. எனினும் காமெடி,பாடல்கள்,சூர்யாவுக்காக ஒரு தடவை ரசிக்கலாம்..

ஒரு தடவை நம்மதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..
http://loshan-loshan.blogspot.com/2009/10/blog-post_17.html


//பின்குறிப்பு -
இன்றைக்கு உதயம் தியேட்டரில் (தீபாவளி) நைட்ஷோவிற்கான டிக்கெட்டை யாருக்கு கொடுத்து மாட்டிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்//
நச் பன்ச்