Tuesday, September 22, 2009

அவருக்காக என் பெயரை மாற்றலாமா?

எனக்கு என் பெற்றோர்கள் வைத்த பெயர் செல்வக்குமார். 60களில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் படம் மற்றும் நாடகத்தில் என் தந்தை(ஐ.எஸ்.ஆர்) நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் இந்த படைப்பு அட்டகாசமான ஹிட். அதில் எனது தந்தை ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் செல்வம். அந்தப் படம் வெளியான நேரத்தில் நான் பிறந்ததால் எனக்கு செல்வக் குமார் என்ற பெயர் வைத்தார்களாம். ஆனால் (பெண்)நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட அனைவரும் என்னை செல்வம் என்றே அழைத்தார்கள், அழைக்கிறார்கள்.

இதில் விந்தை என்னவென்றால் செல்வம் என்ற பெயர் செல்வக்குமார் என்று ஆனது. ஆனால் செல்வக்குமாரை அனைவரும் செல்வம் என்றுதான் அழைக்கிறார்கள். கல்லூரியில் படித்த மூன்று நண்பர்கள் (கிருஷ்ணன், விஜயகுமார், வெங்கடேசன்) மட்டும் என்னை செல்வா என்று அழைப்பார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் வரை நான் தாடி வைத்திருந்தேன். அது வரையில் சில நண்பர்கள் என்னை “டேய் தாடி” என்று அழைப்பார்கள்.

கல்லூரி (படிப்பதாக ஊர் சுற்றிய) காலத்திலேயே என் பெயர் ஆனந்த விகடனில் வர ஆரம்பித்தது. இரா.செல்வக்குமார் என்ற பெயரில் கதைகளும், கவிதைகளும், துணுக்குகளும் வெளியாகின. ”இராமச்சந்திரன்” என்பது என் தந்தையின் பெயர். அதனால் ஆர்.செல்வகுமார் என்ற பெயரை இரா.செல்வக்குமார் என்று பிரசுரிக்க கொடுத்தேன்.

வில்லன் நடிகர் திரு.செந்தாமரையின் மகன்கள் தென்னவன் மற்றும் வள்ளுவன் ஆகியோர் எனது பள்ளிக்கால நண்பர்கள். திரு.செந்தாமரை அவர்கள் நியுமராலஜயில் கெட்டிக்காரர். அவரின் பாதிப்பு அவருடைய மகன்களுக்கும் உண்டு. ஒரு நாள் தென்னவன் ஏதேதோ கூட்டிப் பார்த்துவிட்டு இனிமேல் ஒரு 'K' சேர்த்து R.Selvakkumar என்று எழுது, கையெழுத்துப் போடு என்று சொன்னார். நான் அரை மனதுடன் அப்படியே செய்ய ஆரம்பித்தேன். எனது கையெழுத்துகளில் இன்னொரு 'K' சேர்ந்து கொண்டது. போகப்போக கையெழுத்து சுருங்கி selv வரையில்தான் இருந்தது. மற்ற எழுத்துக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஆனால் ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakkumar என்றும், ஒரு சில விசிட்டிங்கார்டுகளில் R.Selvakumar என்றும், தொடர்ந்து குழப்படி செய்து கொண்டிருந்தேன்.

கல்லூரி முடிந்து Zee TVயில் கால் பதித்த காலத்திலிருந்து டைட்டிலில் (இயக்கம்) ISR.SELVAKUMAR என்று பெயர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். மீடியா நண்பர்கள் அனைவரும் என்னை செல்வக்குமார் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது டிவி உலகில் என் பெயர் செல்வக்குமார், மற்றவர்களுக்கு என் பெயர் செல்வம். அது இன்று வரையில் அப்படியே தொடர்கிறது.

இடையில் கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் எழுதினேன். அனைத்தும் கணினி தொடர்பானவை. முதன் முதலாக எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் வாய்ப்பு வந்தது. ஆங்கிலத்தில் சுமார் என்றாலும், கம்ப்யுட்டரில் ஞானம் உண்டு என்பதால் தைரியமாக ஒப்புக் கொண்டு எழுதினேன். புத்தகம் வெளியாகும் நேரத்தில் (ஜோதிடத்தில் ஆர்வமுள்ள) நண்பர் ஜெயகோபி எனது பெயரை ISR.SELVA என்று பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நானும் அப்படியே செய்தேன். ஜெயகோபி (மெட்டி ஒலி, எம்டன் மகன்)எடிட்டர் ஜெயக்குமாரின் மூத்த சகோதரர். இருவருமே என் நண்பர்கள்தான்.

2006ல் எனது பள்ளிக்கால நண்பர் சுப்பையா இசக்கி கிரியேஷன்ஸ் என்ற ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். முதல் படைப்பாக ”சக்ஸஸ்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். திரு. ராம்குமார் அவர்களின் புதல்வரும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரனும் ஆகிய துஷ்யந்த் அறிமுகமான படம். அந்த திரைப்படத்தில் புரொடக்ஷன் மேனேஜர் முதல் நடிகர் மற்றும் இணை இயக்குனர் வரை பல்வேறு பொறுப்புகள் ஏற்று ஆல் இன் அழகு ராஜாவாக பணியாற்றினேன். டைட்டிலில் ISR.SELVA என்றே போட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில் சென்ற மாதம் திடீரென என் பெயரை மாற்றலாம் என்று எனக்கும் என் சித்தப்பாவுக்கும் தோன்றியது. உடனே சித்தப்பாவின் நியுமராலஜி நண்பர் ஒருவரை சந்தித்தோம். அவர் ”சந்தன்” என பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். எனது மனைவி, அம்மா, தம்பி-தங்கைகள் உட்பட அனைவரும் சந்தன் என்ற பெயர் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். நான்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு
தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்திற்கு பாடல் பதிவு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கப் போவது நான். அதற்க்காகவே இந்த பெயர் மாற்றம் பற்றிய யோசனை. திரைப்படத்தின் பெயர் “அவர்”

இப்போது சொல்லுங்கள் அவருக்காக நான் என் பெயரை மாற்றலாமா?

16 comments:

Raja - London said...

அன்புடன் செல்வா அவர்களிற்கு,
நீங்கள் உங்கள் பெயரை எப்படி மாற்றினாலும்
செல்வா என்ற பெயருக்கு நிகர் எதுவும் இல்லை.
நீங்கள் ஐவில் செல்வர், அன்பில் செல்வர், இனிய குடும்பத்தினால்
செல்வர், நல்ல நண்பர்களால் செல்வர்!
உங்களை நல்ல ஆசானாக நல்ல நண்பராக செல்வா என்ற
பெயருடன் என் உள்ளத்தில் உள்ளீர்கள்.
சினிமாத் தொழிலில் அறிவு, திறமை, கடின உழைப்பு மட்டும்
வெற்றியைத் தருவதில்லை. அதிஸ்டமும் வேண்டும்.
அதற்கு உங்கள் பெயர் மாற்றம் உதவும் என நம்புகிறேன். .
அன்புடன் நண்பன்,
ராஜா - லண்டன் - யு. கே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவருக்காகவல்ல!
எவருக்காகவும் மாற்றவேண்டாம்.
பெயரை மாற்றுவதால் வெற்றிகிட்டுமானால். முதல் அனைவருக்குமே அதைச் செய்வோம்.

dondu(#11168674346665545885) said...

தமிழ்த் திரையுலகின் who is who வை பார்ப்பதுபோல உள்ளது. நிற்க.

சமீபத்தில் எழுபதுகளில் உங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர். நடித்த “ஓ மஞ்சு” என்னும் படம் நினைவுக்கு வருகிறது. அதில் அவர் தந்தி ஆஃபீஸ் குமாஸ்தாவாக வருவார். அவரிடம் தமிழில் செய்தி சொல்லப்பட அவரும் சீரியசாக அதன் தமாஷ் ஆங்கில மொழிபெயர்ப்பை உரக்கச் சொல்லிக் கொண்டே எழுதுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ISR Selvakumar said...

டோண்டு ராகவன் சார்,
ஓ.மஞ்சு திரைப்படத்தை நீங்கள் நினைவில் வைத்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அந்தப் படத்தின் விசிடி எங்காவது கிடைக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள். “அவர்“ திரைப்படம் ரிலீசாவதற்கு முன் என் தந்தை நடித்த திரைப்படங்களை வைத்து ஒரு வீடியோ தளம் உருவாக்க உத்தேசித்திருக்கிறேன்.

ISR Selvakumar said...

ராஜா அவர்களுக்கு,
என்னை செல்வா என்று அழைப்பவர்களின் வரிசையில், எப்படி உங்கள் பெயரை சேர்க்க மறந்தேன் எனத் தெரியவில்லை.

உங்கள் கருத்துக்கும் எண்ணத்திற்கும் மிக்க நன்றி!

ISR Selvakumar said...

யோகன்,
நீங்கள் சொல்வது மிகச் சரி. பெயர் மாற்றத்தினால் மட்டுமே ஒருவருக்கு வெற்றி கிடைத்துவிடாது. உழைப்பு, நேர்மை, கடமை தவறாமை இவையே முக்கியம்.

“அவர்“ எனது குழவினர் மற்றும் எனது கடின உழைப்பையும், திறமையையும் வெளிக்காட்டும் தரமான திரைப்படமாக நிச்சயம் இருக்கும்.

பாலா said...

உங்களுக்கு எது விருப்பமோ அத செய்யுங்க பாஸு
இதெல்லாம் அடுத்தவங்க கிட்டகவே வேணாம்
அதோடு நீங்கள் இயக்கவிருக்கும் படைத்திற்கு முன் வாழ்த்து

ISR Selvakumar said...

வாழத்துக்களுக்கு நன்றி பாலா.

பிரேம்குமார் அசோகன் said...

உங்களை ISR என்று அழைக்கும் கூட்டம் ஒன்று இருப்பதையே மறந்துவிட்டீர்களே ISR சார்!! "ISR எங்கப்பா பேருய்யா" என நீங்கள் எ(ங்களை)ன்னை பலமுறை அன்பாக அதட்டியுள்ளீர்களே... சந்தன் நல்ல பெயர் தான்... ஆனால் எதற்காக பெயர் மாற்ற வேண்டும்? ISR செல்வா... நல்ல உச்சரிப்பு கொண்ட பெயரல்லவா...

சொல்லவே இல்லையே சார்... பலமுறை தொலைபேசும்போதும் "அத விடு பிரேம்...ரிலீசானதும் பாத்துக்கலாம். நான் உதவி மட்டும்தான் செய்கிறேன்" என்றீர்களே? அவர் படம், வசூலில் பவர் படமாவதற்கு வாழ்த்துகள்!!

மீள்பதிவு அளவுக்கான உங்கள் மலரும் நினைவுகளை, சுருக்கமாகக் கூறி அசத்தியுள்ளீர்கள் சார்!!

ISR Selvakumar said...

ஆமாம் பிரேம்,
(உங்களைப் போல) என்னை ISR என்றே அழைக்கும் நண்பர்கள் உள்ளார்கள். முக்கியமாக (முன்ப விஜய் டிவி) தற்போது ஹலோ எஃப்.எம்மில் மார்கெட்டிங் பிரிவில் உள்ள திரு.ராமானுஜம். அவர் என்னை வாயார ISR என்றுதான் அழைப்பார். சமயத்தில் செல்வா என்றும் அழைப்பார்.

அப்பாவி முரு said...

//தற்போது தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்திற்கு பாடல் பதிவு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது//

என்னுடைய புகைப்படங்களை அனுப்புகிறேன். பரிசீலிக்கவும். கணமான பாத்திரமானாலும் தாங்குவேன் சார்....

ISR Selvakumar said...

முருகன்,
உங்கள் புகைப்படங்களை r.selvakkumar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நடிப்பில் ஏதேனும் முன் அனுபவம் இருந்தால் குறிப்பிடுங்கள்.

யாசவி said...

best of luck.

&

all the best selvaa.

Sorry again changed ur name.

keep as u like it. name is jus to call no impact on life.


give me chance to act on WEIGHT roll.

Unknown said...

பெற்றோர்கள் வைத்த பெயர் செல்வக்குமார்.இதையே தொடருங்கள்.தேவையென்றால் இனிசியலை கூட்டியோ குறைத்தோ போட்டுக்கொள்ளுங்கள்.நியுமராலஜியை நம்பினால் கையெழுத்தில் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

ISR Selvakumar said...

யாசவி,
நடிக்க உண்மையிலேயே ஆசையா? சும்மா கேட்டு வச்சீங்களா?

சிவா,
உங்கள் அக்கறைக்கு நன்றி!

Muthu said...

"செல்வாண்ணா" இப்படி கூப்பிடுரதுல ஒரு பிணைப்பு இருக்கு. பழகிடுச்சு. வேறு பெயரில் கூப்பிட்டால் அது வேறு யாரையோ கூப்பிடுறது மாதிரி இருக்கு...