Friday, January 9, 2009

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி? ஒரு அலசல்

கோடிகளில் படிக்கும்போது தலை சுற்றுகிறது. இப்படி கூட நடக்க முடியமா என்று மனம் மலைக்கிறது. இது பொய்யா மெய்யா என்று குழப்பம் வருகிறது. அதனால் நமது சக பதிவர்களின் பதிவுகளின் 'அச்சச்சோக்கள்', தினமும் ஷேர் மார்க்கெட் பற்றி அலட்டும் நண்பர்களின் 'I know that'கள், பத்திரிகைகளின் 'கோடிகள் மாயம்' அலறல்கள், தொலைக் காட்சி செய்திகளில் பங்கேற்ற வல்லுனர்களின் 'It won't affect Indian Corporate Sector'கள் இவற்றைப் பார்த்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் . . .

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?
நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.

ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.

சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.

MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.

SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.
மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.
ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.

ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை
ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.

நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள். பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.

மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.

கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.

ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோது
ஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.
மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.
சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.

அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.

உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.

எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.

புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமா
சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.

இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.

கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.
5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.

அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.

யார் குற்றவாளி?
முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.
அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.
தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்
எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.

கடைசியாக . . .
நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.

இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும். இல்லையென்றால் சத்யம் SATYAMஆகத்தான் வலம் வரும்.

28 comments:

R Mohan said...

Detailed analysis -- in-depth, informative and simple enough to understand...thanks Selva

Jeevan said...

நல்லதொரு அலசல். இனியாவது விழிப்பார்களா? இல்ல வழிவார்களா?

ISR Selvakumar said...

மோகன், அஜீவன் இருவருக்கும் நன்றி! எப்போதுமே விழிப்பது கடினம். இன்றே டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. எதைப் பற்றி தெரியுமா? பணத்தை திருடினால் குற்றம். ஆனால் 5400 கோடி ரூபாயை எட்டாயிரம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டியது குற்றமா? என்று அந்த கட்டுரை கேள்வி கேட்கிறது.

இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதில் உள்ள நேர்மையை(?) கவனிக்கச் சொல்கிறது இன்னொரு கட்டுரை.

நாமாவது? விழிப்பதாவது?
நமக்கு இன்னும் நிறைய பட்டை நாமங்கள் காத்திருக்கிறது.

RAMASUBRAMANIA SHARMA said...

TREMENDOUS ARTICLE SELVA...MY GOD...8000 THOUSAND CRORES...HOW MANY ZEROS AFTER EIGHT...FINALLY WHERE IS THE MONEY GONE...!!!UNABLE TO EVEN IMAGINE....

RAMASUBRAMANIA SHARMA said...

mmmmmmm

ISR Selvakumar said...

Welcome to my page Sharma.
These guys are playing with currencies. I'll shiver if I see so much of money.

But as you asked, where is the money? The money is gone for ever, I believe.

sheik.mukthar said...

Selva, Thanks for your very Informative and detailed story of Raju and company! Whats the next? What about the Employees and their Future? Hope Indian Govt should take more initiative to protect them!I am sure we are come to an end of this world? As things happening is really un believable? Only GOD has to save India!It and will happen because of very poor Indian Democratic Laws and Regulations!I am really appreciate your details once again Selva!
Mukthar/Brunei

ISR Selvakumar said...

Hello Mukthar,
You have asked a relavant question?
//What about the Employees and their Future?//
Already they are in panic. The unconfirmed news or rumour today is, in another 15 days, 10000 employees will be given pink slip.

I heard (not sure) that, for the past few months, many were sacked for petty reasons like, not proper tuck-in, poor shoe, late for the office, etc.

Now the job portals are busy receiving applications from Satyam employees.

Who can save them?
GOK : God only knows.

Anonymous said...

நல்லதொரு அலசல். very good sir.

vrey good report

Anonymous said...

Wow,

Dear Selva, i never saw such good and full analysis about the issue other than your blog. Really it is good one. Carry on.

with care and love,

Muhammad Ismail .H, PHD,

ஷாஜி said...

சிறந்த அலசல்...

ISR Selvakumar said...

Thank you Mr.Mohammad.

I'm happy receive 'a pat' from a PHD holder.

Anonymous said...

Dear Selva!

Really well detailed analysis.So impressive writing.

Thanks,



Ramki.

பிரேம்குமார் அசோகன் said...

நல்ல பதிவு..சிறப்பான அலசல்..சீரான சொல்லோட்டம்!
"நல்ல முதலாளிங்கடா இவுங்க..பேப்பர்ல கப்பல் உடுற முதலாளிங்க" கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் இப்படி பேசியிருப்பார். எவ்வளவு நிதர்சனம். பெட்டிக்கடையில் இன்றைய விற்பனை 1000 ரூபாயென்றால், அன்று இரவு கடை மூடும் போது 1000 ரூபாயும் அப்படியே கடைக்காரரின் பாக்கெட்டில் (அல்லது தண்டல்காரன் பாக்கெட்டில்). ஆனால் பண டைனோசர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்கு வர்த்தக கலாட்டா கிராஃப்களின் முடிவில் அதன் மதிப்பு 5000 கோடி, 8000 கோடி என கணக்கிடுகிறார்களெ.. அதற்கு என்ன அர்த்தம்? அன்றைய வர்த்தகத்தின் முடிவில் அத்தனை பணமும் எண்ணி (எண்ண முடியுமா?) அடுக்கி வைக்கப்படுகின்றனவா...இல்லையே!! அவ்வளவும் விர்ச்சுவல் பணம் தானே...வர்த்தகம் சரிந்தால் நிறுவனத்தின் தலைவர், செயல் தலைவர்களின் பென்ஸ் (அ) பிஎம்டபிள்யூ கார்கள் அனைத்தும் மாருதி 800 ஆகிவிடப்போகிறதா.. இல்லையே....அவர்களுக்கான இழப்பு, சிறிது புருவ சுருக்கம்..."ஷிட்" என்ற வார்த்தை...4 பெக் அதிகமாக தாக சாந்தி... அவ்வளவே.
(எனது கருத்துரை உங்கள் பதிவின் பாதையில் பயணிக்காமல், பைபாஸ் ரூட்டில் செல்வதால்.. நிறுத்திக் கொள்கிறேன்.)

ISR Selvakumar said...

Thank you Shaji & Ramki for your visit and comments.

I think I have many more to write about this.

When I am writing this, Mr.Ramalinga raju and his brother were arrested or surrendered before DGP of Andhrapradesh.

There are so many unanswered questions related to political links and auditing manipulations.

As a comman man we could only watch.

Lets see.

Gokul said...

80 % facts but 20 % spiced up with your imagination, like good historical fiction novel.

How come we know what he(R Raju) thought? lot of gaps are filled with imagination I feel

For Example..

இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.

This is not correct from my knowledge (correct me if I am wrong). WB banned Satyam from their projects only, this is not at all related to exposed fraud, only because unethical practices in project execution like bribing...

Another one..
சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்

From my knowledge, no one knew beforehand about the fraud. RR confessed because company became highly likely target for takeover, which will expose this cooked books

Barring these kind of over simplifications (or laymanisation) this article is excellent piece of writing... One of kind in tamil...

Anonymous said...

ஒருவேளை பொய்சத்யமா இருக்குமோ

சூனிய விகடன் said...

எல்லாத்துக்கும் அடிப்படை இந்த பாழாப்போன ஷேர் மார்கெட் போலத் தெரிகிறதே சகோதரரே ....இதுக்கு என்னதான் விடிவு ?


உங்களின் அருமையான பதிவுக்கு நன்றிகள்

Anonymous said...

Fantastic analysis. I never understood his action of trying to merger Satyam-Maytas and now it's clear after reading here. Thank you.

Can you clarify on one thing though? This guy would not have come clean normally. DSP Meryill Lynch was auditing Satyam to see their worth for the merger with other company. They found this fraud the night before and informed SEBI. Once he knew about it he didn't have a choice. So this guy is number one fraud and whoever thinks he became a good guy are very naive..Am I right?

Indy said...

Not a great article.

Setha paambai yaar venumnaalum adikkalam. Adhai thaan neengal seithu irukireergal.

By the Way, PHD could be his initials.

ISR Selvakumar said...

மெலிதான கோபத்துடன் கருத்துக்களை வெளியிட்டிருக்கும் நண்பர்கள் இந்தியா360ல் வெளியாகியுள்ள கட்டுரையை படியுங்கள். சில கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
http://india360degree.blogspot.com/2009/01/blog-post_10.html

vinoth kumar said...

savukadi

நாகு (Nagu) said...

யார் எழுதியது என்று எங்கெல்லாமோ தேடினேன். தமிழிஷில் உங்கள் பின்னூட்டம் பார்த்து இங்கே வந்தேன்.

ந்ன்றாக எழுதியிருக்கிறீர்கள். பத்தாயிரத்திற்கும் மேலாக ஆட்கள் இல்லாமல் இருப்பது போல் காட்டி மோசடி நடந்திருக்கிறது என்று ஒரு வதந்தி இருக்கிறதே அது உண்மையா?

'கொளுந்து விட்டு' என்ற பிரயோகம் இணையத்தில் அதிகமாகி இருக்கிறது. 'கொழுந்து விட்டு' என்று மாற்றவும் :-)

ISR Selvakumar said...

நன்றி நாகு,
தேடி வந்து பாராட்டியதற்கும் 'கொளுந்து விட்டு' தவறை சுட்டிக்காட்டியதற்கும்.

ISR Selvakumar said...

ஆள் சேர்ப்பு (Payroll)விவகாரம் எனக்கு இன்னும் சரியாக புரிபடவில்லை. ஆனால் பல பெரிய ஐடி நிறுவனங்களின் HRகள் எப்படியெல்லாம் மோசடி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரம் + முழுதகவல்களும் கிடைத்தவுடன் தனி பதிவாக எழுத உத்தேசித்திருக்கிறேன்.

Anonymous said...

Simple logic
1. To win MAYTAS contracts from various governments huge bribes have been paid out to politicians. Which cannot be accounted so now they enact a drama that the funds never existed in the first place. For 30,000 crore plus projects the standard Indian cut/commission is 20-30% and that accounts for 7000 crores of bribe to all governments.
2. MAYTAS projects are huge and require huge investments. Here Mr Raju bit more than he can chew. To fund he pledges the shares and siphons cash out of Satyam reserves. Hoping both real estate and share prices will keep booming.
3. The fall in share prices forced the lender to sell the large chunk of promoter shares to highest bidders who can take control of Satyam. These finance companies start underground bidding process to get maximum benefit.
In Summary Satyam fell because of
Corruption,
Greed,
Typical Indian Parent who secures the future of his kids,
fall in share prices etc.

Satyam was lucky numerologically
but the same number total MAYTAS
has brought him back to where he started since the order was reversed.

ISR Selvakumar said...

//For 30,000 crore plus projects the standard Indian cut/commission is 20-30% and that accounts for 7000 crores of bribe to all governments.//

You are correct! The Standard Indian Political cut is a very deep. Raju is behind the bars now, But who are the political bosses caused this much dirt? YSR or Chandrababu Naidu?

Still many more to come out.

sreevaths said...

Nice article yar! Keep writing!