Wednesday, November 26, 2008

சிறிய விஷயம் - பெரிய தவறு

நீங்கள் என்றைக்காவது 'கண் சொட்டு மருந்து' வாங்கியிருக்கிறீர்களா? சமீபத்தில் எனது பெண்ணுக்காக நான் வாங்கினேன். டாக்டர் எழுதிக்கொடுத்த "MOISOL EYE DROPS" மற்றும் "OCUPAL EYE DROPS" ஆகிய இரண்டு சொட்டு மருந்துகளும் மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சனை மருந்தை வாங்கிய கணத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மருந்தை சொட்டு சொட்டாக கண்களில் விடவேண்டுமென்றால் பாட்டிலின் பிளாஸ்டிக் முனைகளில் ஒரு சிறிய துளை தேவைப்படுகிறது.

என்னுடைய மகளும், மனைவியும் அதில் துளையிடுவதற்க்காக முதலில் ஒரு கூரிய பேனா முனையை முயற்சித்திருக்கிறார்கள். அது சரிப்படவில்லை என்றதும் ஒரு ஹேர்பின்னை வைத்து முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் சரிப்படவில்லையென்றதும் என்னிடம் வந்தார்கள். நான் ஹேர்பின்னையும், பேனா முனையையும் வீசி எறிந்துவிட்டு,  பாட்டில் மூடியை இடமிருந்து வலமாக ஒரு முறை இறுகச் சுற்றினேன். அடுத்த வினாடி சொட்டு மருந்துக்கான துளை ரெடியாகிவிட்டது. எப்படி? இது எப்படி? என்று ஏதோ மேஜிக்கை பார்த்ததுபோல எனது மனைவிக்கும் மகளுக்கும் ஆச்சரியம்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பாட்டில் மூடியின் உள் உச்சியில் ஒரு பிளாஸ்டிக் ஊசியின் கூர் முனை உள்ளது. பாட்டிலை மூடிவிட்டு, இடமிருந்து வலமாக மேலும் இறுக்கும்போது, உள் உச்சியிலிருக்கும் பிளாஸ்டிக் ஊசியின் கூர்
முனை குத்தி துளை ஏற்படுகிறது. இனி அந்த துளை வழியாக மருந்து சொட்டு சொட்டாக எளிதாக வெளிவரும்.

'உங்களுக்கு மட்டும் எப்படி இது தெரிந்தது?" என்று என் மகள் ஆச்சரியம் பொங்கக் கேட்டாள். நான் அமைதியாக மருந்து வைக்கப்பட்டிருந்த மேல் அட்டைப் டப்பாவைக் காட்டினேன். அதில் 'எப்படித் துளையிடுவது என்பது பற்றி' படத்துடன் ஆங்கில விளக்கமும் இருந்தது.

எதற்க்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஹேர்பின், பேனா முனைகளை வைத்து துளையிடும்போது அவற்றில் உள்ள அழுக்குகள் துளையின் முனையில் ஒட்டிக்கொள்ளும். கண்களில் அந்தத் துளைகளின் வழியாக மருந்திடும்போது, மருந்துடன் சேர்ந்து அழுக்கும் கண்களில் இறங்கும். இதனால் கண்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.

படித்த நடுத்தர வர்க்க மக்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை.படிக்காத ஏழை எளிய மக்கள் இதனால் எந்த அளவு பாதிப்படைவார்கள் என்பதை நான் தனியே விளக்கத் தேவையில்லை.

எனவே மருந்து எழுதித் தரும் டாக்டர்களும், மருந்தை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் 'சொட்டு மருந்து மூடியில் பாதுகாப்பாக துளையிடுவது எப்படி?' என்பது பற்றி ஒரு முறை விளக்குவது நல்லது.

No comments: