Friday, November 21, 2008

தேவாதி தேவர்களுக்காக பயப்படும் விகடனும், குமுதமும்

'இணைய தளத்தில் பல விஷயங்களை உடைத்து எழுதும் வசதி இன்னும் பத்திரிகை உலகத்திற்கு வந்து சேரவில்லை. அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சட்டக் கல்லூரி வன்முறை'

இந்த வார ஓ பக்கங்களின் ஓஹோ ஆரம்பம் இதுதான். தன்னை நடுநிலையின் மனித பிம்பமாக மகா அகம்பாவத்துடன் வெளிப்படுத்திக் கொண்டு வரும் ஞாநியின் வாக்கு மூலம் இது. இவர் எதை எழுத நினைத்தார்? எழுத நினைத்ததை குமுதத்தில் யார் தடுத்தார்?

இந்த மாநிலத்தின் முதல்வருக்கு வாரம் தவறாமல் தைரியமாக குட்டு வைத்த 'எந்த ஜாதிக்கும் உட்படாத ஞாநியை', சட்டக் கல்லூரி விவகாரத்தில் தலையில் குட்டி, 'உன் போக்கில் எழுதாதே' என்று அடக்கி பயமுறுத்தி வைத்த அந்த 'முரட்டு ஜாதி' கரங்கள் எவை?

சட்டக் கல்லூரி வன்முறைக்கு காரணம் 'ஜாதி' என்பதும், அது கல்லூரிக்கு வெளியே ஆரம்பித்தது என்பதையும் அறிந்துகொள்ள எந்த விசாரணை கமிஷனும் தேவையில்லை. ஆனால் எந்த ஜாதியால் பிரச்சனை ஆரம்பித்தது என்பதை போலீசோ, அரசோ, விசாரணை கமிஷனோ தைரியமாகச் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் எதற்கும் அஞ்சாத ஞாநி, யாருக்கும் அஞ்சாத ஞாநி இதைப் பற்றி தைரியமாகச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஞாநி வெறும் சோனி ஆகிவிட்டார்.

இந்தவாரம் 'ஞாநியின் ஓ பக்கங்கள்' பிரச்சனையின் வேர்களை பயத்தோடும் ஜாக்கிரதையோடும் தேடியிருக்கிறது. உண்மையை எழுதியிருந்தாலும், உரக்க பல விஷயங்களை சொல்ல முடியாமல் பயந்திருக்கிறது. பயம் என்று சொல்லக் காரணம் தெரியவேண்டுமானால் இந்த வார ஆனந்தவிகடனின் 'சட்டம் - சதி - சாதியை' படியுங்கள்.

'சமீபத்தில் நடந்து முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி' என்று தைரியமாக எழுதப்பட்ட அல்லது தெரியாமல் உளறிவிட்ட ஒரு வரி ஆனந்த விகடனின் கட்டுரையில் வருகிறது. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில் 'டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி' என்ற கல்லூரியின் பெயரில் 'டாக்டர் அம்பேத்கர்' பெயர் மிஸ்ஸிங் என்று இன்னொரு வரி இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்த, இப்படி ஒரு வன்முறைக்கு ஆரம்ப காரணமாக இருந்த அந்த ஒரு தரப்பு மாணவர்கள் 'எந்த ஜாதியைச் சேர்ந்த வெறியர்கள்' என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. மிஸ்டர் தைரியம் என்று பெயரெடுத்த - ஞாநி அவர்களும் தொடை நடுங்கிப் போய் 'மிஸ்டர் உபதேசமாக' மாறி பொத்தாம் பொதுவாக எழுதி நழுவிட்டார்.

தேவர் ஜெயந்தி வருடா வருடம் 'பயங்கர அமைதியுடன்' நடந்து முடியும் அரசியல்வாதிகளின் 'ஜாதி ஓட்டு ஜெயந்தி'யாக நடந்து முடியும். இந்த வருடம் அந்த நாள், ஜெயலலிதா காரின் மேல் கல்லெறியப் பட்ட நாளாக அறியப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லது அதற்கு முந்தை நாட்களில் இந்த போஸ்டர்களில் 'அம்பேத்கர் பெயர்' இருட்டடிப்பு சம்பவமும் தொடர்ந்து மோதலும் நடந்திருக்கிறது.

விகடன் ஒரு நாலு பக்க கட்டுரையும், ஒரு தலையங்கமும் எழுதியிருக்கிறது. குமுதம் தன் பங்குக்கு ஒரு ஷாக் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, தலையங்கத்தில் குமுறிவிட்டு, ஞாநியை 'தட்டிக் கொடுத்து' எதையோ எழுத வைத்திருக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க பண்பாட்டைக் காக்கும், வெள்ளிவிழா, பொன்விழாவையெல்லாம் கண்ட பத்திரிகைகள். சட்டக் கல்லூரி வன்முறை விஷயத்துக்காக கிட்டத்தட்ட 10 பக்கங்களை ஒதுக்கியுள்ளன. ஆனால் ஒரே ஒரு வரியில் கூட இந்த வன்முறையின் ஆரம்ப வித்துக்கு காரணமான 'தேவர்'களைப் பற்றி எழுத தைரியமில்லை.

தேவர் ஜெயந்தியன்று, அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தவர்கள் தேவர்கள், அதை தட்டிக் கேட்டவர்கள் தலித்துகள்.

இந்த ஒரு வரியை எழுத முடியாமல்தான் ஞாநி தொடை நடுங்குகிறார். ஆனந்த விகடன் கலர் படம் போட்டு விட்டு 'இரண்டு ஜாதிகளுக்குள் மோதல்' என்று மையமாக சொல்லிவிட்டு ஜகா வாங்குகிறது.

ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த ரெண்டு பத்திரிகைகளும் என்ன ஜாதி? ஏதாவது ஒரு விசாரணை கமிஷன் வைச்சு சொல்லுங்கப்பா!

17 comments:

Anonymous said...

Well said!

harijana said...

தேவர்-தலித் இருவர் செய்ததும் தவறு. ஆனால் தேவரை தவறு என்று அவர்கள் சொல்ல பயப்படுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். தாங்கள் ஒன்றும் நடுநிலயயை எழுதவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு வக்களது வாங்க சொல்கிறீர்கள் ஏன்?

நடுநிலயயை எழுதுவது பிடிக்கவில்லையா?

Anonymous said...

போதும் நிப்பாட்டுங்கள் உங்கள் பேச்சை ஞானி குறை கூறுவதை நிருத்தி நீங்கள் திருந்துங்கள்!?

ISR Selvakumar said...

நான் யாருக்கும் வக்காலத்து வாங்கச் சொல்லவில்லை. டிவி காமிராவுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டவர்களும், டிவி காமிராவுக்கு பின்னால் வன்முறைக்கு ஈடுபட்டவர்கள் ஒரே மாதிரி 'ஜாதி வெறிக்கு' உட்பட்டவர்களே. இரு தரப்பினரும் குற்றவாளிகளே. ஆனால் 'தலித்' என்கிற பெயரை தைரியமாகச் சொல்கிற ஆனந்த விகடனும்-குமுதமும், 'தேவர்' என்கிற வார்த்தையைக் கண்டு அஞ்சுவது ஏன்?

Anonymous said...

ஆதிக்க சாதி பயம் தான்..

கத்தியை எடுத்து குத்த வருபவனிடம் சமாதானம் பேசவேண்டுமாம்,எப்படி இருக்கு பாருங்க.


இந்நிகழ்வை பெரும் மனித உரிமை மீறலாக வெளிப்படுத்தும்,விளம்பரப்படுத்தும் ஜெயா/சன் தொலைக்காட்சிகள் எத்தனை சாதி அடக்குமுறை, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களமிறங்கின?

ஆட்காட்டி said...

ஞானி தான் பெயரில்லாம வந்து அடிக்கடி கொமெண்ட் குடுக்கிறார். தெரிஞ்சுக்கோங்கோ/

ISR Selvakumar said...

//இந்நிகழ்வை பெரும் மனித உரிமை மீறலாக வெளிப்படுத்தும்,விளம்பரப்படுத்தும் ஜெயா/சன் தொலைக்காட்சிகள் எத்தனை சாதி அடக்குமுறை, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களமிறங்கின?//

திரு. அனானி அவர்களுக்கு. இன்னமும் சன், ஜெயா டிவிக்களில் ஒளிபரப்பப்படும் அந்த கொடூரங்களை நான் நியாயப்படுத்துவதாக தயவு செய்து நினைத்துவிடாதீர்கள்.

அந்தக் கொடூரங்களின் பிண்ணனிகளையும் அதே தைரியத்துடனும், அதே கோபத்துடனும், அதே பரிதாபத்துடனும் அணுகுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

மேலே பின்னூட்டமிருக்கும் ஹரிஜனாக்களுக்கும் சேர்த்தே இதை எழுதுகிறேன்.

தமிழக அரசுக்கு வேண்டுமானால் ஒரு விசாரணை கமிஷன் போதுமானதாக இருக்கலாம். ஆனால் நாளைய மற்றும் இன்றைய மாணவர்களுக்கு ஒரு ஆத்ம சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. ஞாநியின் கட்டுரையில் இந்த எண்ணம் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. அதை நான் வழிமொழிகிறேன்.

அதே நேரத்தில் இன்னொரு ஜாதியின் பெயரைச் சொல்லக் கூட அவரின் பயத்தை சாடுகிறேன்.

ராஜரத்தினம் said...

எனக்கு ரொம்ப நாளாகவே இது ஒன்றும் புரியவில்லை. ஆனால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப் படவேண்டியவர்களே!

ISR Selvakumar said...

//ஞானி தான் பெயரில்லாம வந்து அடிக்கடி கொமெண்ட் குடுக்கிறார். தெரிஞ்சுக்கோங்கோ//

இந்த கிண்டலை நான் இரசிக்கவில்லை. அவருடைய ஒரு சார்பு மனநிலை மாறினால் இன்னமும் அதிக வீச்சுடனும், ஆழத்துடனும், நேர்மையுடனும் அவருடைய எழுத்துக்கள் வெளிப்படும் என்று நம்புகிறேன். வெளிப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த முதல் பதிவர் சந்திப்புக்கு அவர் வந்ததாக சில பதிவுகளில் படித்தேன்.

அவர் எதற்கும் 'வரக் கூடியவர்' பதுங்கக் கூடியவர் அல்ல.

Unknown said...

Excellent and wonderful article.
i m always said GANAI is SONI.
VAZHTHUKKAL selva.

Anonymous said...

please read his full article at gnani.net where he had given all the details with out editing

ISR Selvakumar said...

Gnani.netஐ அறிமுகப்படுத்தி வைத்த அனானி நண்பருக்கு நன்றிகள்!

ஞாநி தன்னுடைய நேர்மையான உணர்வுகளை பகிர்ந்துகொண்டிருப்பதில் ஒரு புறம் மகிழ்ச்சி.

நினைத்ததை எழுத முடியாத காரணத்துக்காகத்தான் 'விகடனை' விட்டு வந்தார். தற்போது குமுதத்திலும் அதே நிலை. சொல்லப்போனால் இவையே இன்றைய சமூகத்தின் நிலை.

அதற்க்காக குமுதத்தை விட்டுவிடக் கூடாது. எத்தனை அபத்தங்கள் இருந்தாலும் விகடனும், குமுதமும் தமிழர்களால் பரவலாகப் படிக்கப்படும் பத்திரிகைகள்.

இந்த பத்திரிகைகளை நிராகரிக்காமல், அவற்றுடன் சண்டை போட்டுக் கொண்டே, நினைத்ததை சொல்ல முயற்சிக்க வேண்டும்.

இதுவே திரு.ஞாநி அவர்களுக்கு என்னுடைய பரிந்துரை.

benza said...

As Vivek said in a movie not even five generations will see Indian Tamil community will clean up.
The only solace left for Tamil writers is to shove the blame onto another in every crisis.
Even in the matter of Sri Lanka all of you ignore the truth that Tigers holler for ''cease fire'' when they are in a tight corner.
Do not believe me, but please see their past ... it's all recorded.
They are against all educated and those that read and write.
But they always kill innocent people.
Why do you not accept and expose the truth?

Anonymous said...

YOUR COMMENTS ARE VERY BRAVE. BUT BE VERY CAEFUL. YOU ARE HANDLING A KNIFE, WHICH DOSEN'T HAVE A HANDLE. ANY TIME IT WILL TURN BACK AGAINST YOU.HOWEVER, IT DOES HAVE PARTIALITY, IRRESPECTIVE OF YOUR REFERENCES.

ISR Selvakumar said...

ஜாதி பிரச்சனையைப் பற்றி எழுதுவது 'பிடியில்லாத கத்தி'. பிடித்த கையையே பதம் பார்க்கும் என்று எச்சரித்திருக்கும் அனானி நண்பருக்கு நன்றி.

எச்சரிக்கை உணர்வுடன் யோசித்துதான் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இன்னமும் யோசனை முடியவில்லை.

கிரி said...

//ஆனால் எதற்கும் அஞ்சாத ஞாநி, யாருக்கும் அஞ்சாத ஞாநி இதைப் பற்றி தைரியமாகச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஞாநி வெறும் சோனி ஆகிவிட்டார்.//

:-)))))))

//'மிஸ்டர் உபதேசமாக' மாறி பொத்தாம் பொதுவாக எழுதி நழுவிட்டார்.//

ரஜினியையும் கலைஞரையும் திட்டினால் எவர் கேட்க போகிறார்..இவர்களை கூறினால் வீட்டிற்கு ஆட்டோ வந்து விடுமே ;-) கூட பல உருட்டு கட்டைகளுடன்

பிரச்சனைக்கு யார் காரணம் என்றாலும் தண்டைக்குரியவர்களே :-(

ISR Selvakumar said...

உண்மைதான்! ஞாநியைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. மற்றவர்கள் நிர்பந்தத்திற்குள்ளானபோது, கேலி செய்த ஞாநி, இன்று தானே ஒரு நிர்பந்தத்திற்கு அடிபணிந்திருக்கிறார்.

He is eating his own words.

ஐயோ பாவம் என்று குட்டாமல் விடுகிறேன்.