Monday, October 27, 2008

ஜெ, வை.கோ, விஜயகாந்த், சூப்பர் ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை

தமிழ் சினிமாவைப் போலவே, தமிழக அரசியலிலும் கிளாமருக்குத்தான் மரியாதை. அந்த வகையில் தமிழக கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு கடைசி பட்சம்தான். அதனாலேயே பல நேரங்களில் அவர்களின் தெளிவான உருப்படியான சிந்தனைகள் மற்றும் யோசனைகள் தமிழக மக்களைப் போய்ச் சேருவதில்லை. இலங்கைத் தூதர் பேசில் ராஜபக்ஷே சென்னை வந்து சென்ற பின்னர் இலங்கைப் பிரச்சனை மீண்டும் வெறுமனே கருணாநிதியை மட்டும் சுற்றும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி த.பாண்டியன் அருமையான சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

அடுத்த கட்டமாக கருணாநிதி இந்த யோசனைகளை பரிசீலித்து ஆவண செய்ய முயற்சிக்கலாம்.

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் தொடர்பாக நேஷனல் செக்யூரிட்டி அட்வைஸர் எம்.கே. நாராயணன், ஃபாரின் செக்ரட்டரி ராகவன் ஆகியோரின் பரிந்துரைகளைக் கேட்பதை இந்திய அரசு உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்குப் பதிலா தமிழர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்த வேண்டும்.
  • இலங்கை அரசு அனுமதித்தால் இரண்டு தமிழக மத்திய மந்திரிகள் அல்லது தமிழக எம்.பிக்கள் இருவரை பிரணாப் முகர்ஜியுடன் இலங்கைக்கு அனுப்பி நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
  • அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சாராத மருத்துவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பெளத்த மத பிட்சுக்கள், மெளல்விகள், கிறித்துவ பாதிரியார்கள், இந்துசாதுக்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களுடைய கண்காணிப்பில் வழங்க வேண்டும்
  • திரை இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரின் பேச்சு, வெறுமனே உணர்ச்சி வசப்பட்ட பேச்சே தவிர அரசியல் அறிக்கைகள் அல்ல. அதனால் அரசு அவர்கள் விஷயத்தில் கடுமையைக் குறைக்கலாம்
கருணாநிதியை காய்ச்சி எடுக்கும் பதிவர்கள் இந்த யோசனையை உரக்கச் சொல்லலாம்.
தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முயற்சி செய்கிறது என்று போலிக் கூச்சல் போடாமல் ஜெயலலிதா இந்த யோசனைகளை கருணாநிதிக்குச் சொல்லலாம்.
வருங்கால முதல்வர் என்று தன்னை வருணித்துக் கொள்ளும் விஜயகாந்த், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் மக்கு மாதிரி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்காமல், இதை அப்படியே காப்பியடித்து, கருணாநிதியை நிர்பந்திக்கலாம்.
வை.கோ ஜெயிலுக்குள்ளிருந்துகொண்டே, புலிகள் ஆதரவை விடாமல், அ.தி.மு.க அம்மாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு இந்த யோசனைகளை செய்யச் சொல்லி கர்ஜிக்கலாம்.
நவம்பர் 1ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகும் நடிகர்கள், சீமான், அமீர் கைதுகளால் தொடை நடுங்கி மெளனவிரதமிருக்காமல், இந்த யோசனைகளை தமிழக முதல்வருக்கு ஒரு வசனமாக அவரவர் ஸ்டைலில் படித்துக் காட்டலாம்.

2 comments:

Unknown said...

அது எப்படி சார், கருணாநிதி தவறு செய்திட்டார் என்று தெரிந்தவுடன் அதை மறைக்க அடுத்தவர்களை இழுத்து அதை மூடப்பார்க்கிறீர்கள்.
மற்றவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இருக்கட்டும். தமிழினத்தலைவர் என் தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டவர் செய்ததைப் பற்றி என்ன கருத்து சொல்ல வருகிறீர் என்பதை தெள்ளத்தெளிவாக சொன்னால் நலம்.

ISR Selvakumar said...

இளைய கரிகாலன்,
// அது எப்படி சார், கருணாநிதி தவறு செய்திட்டார் என்று தெரிந்தவுடன் அதை மறைக்க அடுத்தவர்களை இழுத்து அதை மூடப்பார்க்கிறீர்கள்.//

தலைப்பை 'கருணாநிதி, வை.கோ, விஜயகாந்த், சூப்பர்ஸ்டார்களுக்கு த.பாண்டியனின் யோசனை' என்று திருத்தி வாசிக்கவும். இது கருணாநிதிக்கும் சேர்த்துதான்.

//தமிழினத்தலைவர் என் தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டவர் செய்ததைப் பற்றி என்ன கருத்து சொல்ல வருகிறீர் என்பதை தெள்ளத்தெளிவாக சொன்னால் நலம்.//

இதற்கு முந்தைய 'இலங்கைப் பிரச்சனயில் கருணாநிதியின் அரசியல்' என்ற வலைப்பூவில் என்னால் முடிந்தவரை கருணாநிதி செய்ததை விளக்க முயற்சித்திருக்கிறேன். அடுத்து அவர் என்ன செய்யலாம் என்று வாசிச்கிற நண்பர்களிடம் விளக்கமும் கேட்டிருக்கிறேன்.