Thursday, October 30, 2008

அவர் !!!

இறுதி யாத்திரைக்கு வருபவர்களில் பலரும் மறுநாள் 'பால்' எனப்படும் நிகழ்வுக்கு வருவதில்லை. என் தந்தை மரணமடைந்த போதும் அப்படித்தான். முதல்நாள் பெருகிவந்து தோள் கொடுத்த ஒருவர் கூட, என் தந்தை சடலமாக தீயில் கருகிய அடுத்தநாள் வரவில்லை. சடலத்தை எரிக்கும் தீயை விடத் தகிக்கும் தனிமை உணர்வு என்னை அப்போது வாட்டியது.

ஆறுதலாக மறுநாளும் அவர் மட்டும் வந்திருந்தார். சிதையில் சாம்பல்களுக்கிடையில் எலும்புத் துண்டுகளை சிறு குச்சிகளை வைத்துக் கிளறி தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மட்டும் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

சிதையின் சாம்பல் படிந்த கைகளில் ஒவ்வொரு எலும்புத்துண்டாக எடுத்து மண் சட்டியில் வைத்து சூடு ஆற தண்ணீர் ஊற்றினார். அந்த சமயத்தில் கூட அவர் வந்தது எனக்கு பெரிதாகத் தோன்றவில்லை.

என் தந்தையின் மறைவுக்கு முன்னும் பின்னும், எனக்கு இன்னொரு தந்தையாகவே இருந்து என்னை அவர் வழி நடத்தினார். சில நேரங்களில் ஒரு தோழனைப் போல பழகினார். என்னுடன் மட்டுமல்ல, அந்தக் காலனியில் வசித்த என் நண்பர்கள் ஒவ்வொருவருடனும் இருபத்தைந்து வருடங்களாக அப்படித்தான் பழகினார். அரை டிராயர் போட்ட பருவத்திலிருந்து, மணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்பும் கூட, கிட்டத்தட்ட நான் அவர் வீட்டில்தான் வளர்ந்தேன் என்று சொல்லலாம். பக்கத்து வீட்டு மாமா என்பதைக் கடந்த அந்த உறவுக்கு தமிழில் தனியாக வார்த்தைகள் இல்லை.

திடீரென ஒருநாள் வீடு மாற்றிச் செல்லப் போவதாகக் கூறினார். வீடு தேடி வந்து எங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டுச் சென்றார். மனதில் வார்த்தைகளில் வராத ஒரு வெறுமை. அவர் வீட்டைக் காலி செய்த கடைசி நாளன்று அவர் வீட்டிலிருந்து ஒரே ஒரு செடியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஏனோ தெரியவில்லை பறித்த செடிகளை என் வீட்டுத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

தினமும் இரவு, அவர் வீட்டைக் கடக்கும் முன் அவரைப் பார்த்து 5 நிமிடம் பேசிவிட்டுத்தான் என் வீடு செல்வேன். ஆனால் அவர் இல்லாத அந்த வீட்டை தினமும் கடக்க நேர்ந்தபோது, அவரிடம் செலவழிக்க முடியாத 5 நிமிடங்கள் பெருகிப் பெருகி வெறும் தனிமையின் மூட்டையாகிப் போனது. அதைச் சுமக்க சுமக்க, என் தந்தையின் மரணத்தின் போது என்னை எரித்த தனிமைத் தீ மீண்டும் கொளுந்து விட்டு எரிவது போல ஒரு தகிப்பு. அவர் வீட்டிலேயே நான் விட்டுவிட்டு வந்த செடிகளைப் போல நாட்கள் கருகிக் கொண்டிருந்தன. அவர் வீடு மாற்றிப் போய் 3 மாதங்களாகியும் நான் அவரை சந்திக்கவே இல்லை, குறைந்தபட்சம் டெலிபோன் உரையாடல் கூட இல்லை என்பதை நான் திடீரென உணர்ந்தேன். ஏன்?

ஏன்? என்று எனது நண்பர்(அவருடைய மகன்)ஒருநாள் என்னைக் கேட்டார். நண்பரின் குரலில் 'அவர்' நேரடியாக என்னைக் கேட்டது போல உணர்ந்தேன். நாளையே பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் நாளை என்பது அடுத்த 2 மாதங்களுக்கு வரவேயில்லை. ஏனோ தெரியவில்லை . . . நான் அவரை பார்க்கவில்லை, பேசவில்லை. மனதின் ஓரத்தில் தினமும் ஒரு உறுத்தல் என்னைத் தின்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உறுத்தல், குற்ற உணர்வாக மாறி, தயக்கமாக நிலைத்துவிட்டது. என்ன விசித்திரம்!!! என்னை ஒரு தந்தையைப் போல பார்த்துக்கொண்ட அவரைப் பார்ப்பதில் எனக்கென்ன தயக்கம்?

நல்லவேளையாக என்னுடைய நீண்ட நாளைய நண்பன், 'அவரை' பார்ப்பதற்க்காகவே சென்னை வந்திருந்தான். பட்டென ஒட்டிக்கொண்டேன். 'அவர்' வீட்டுக்கு வருகிறேன் என்று அவரைத் தவிர எல்லோரிடமும் சொல்லிவிட்டு என் நண்பன் கூடவே 'அவர்' வீட்டுக்குச் சென்றேன். அவர் எப்போதும் போல அதே உரிமையுடன் 'ஏண்டா கடன்காரா என்னை பார்க்க இத்தனை நாளா வரல?' என்று திட்டோ திட்டென திட்டினார். அவர் திட்டத்திட்ட நான் தனிமைச் சுமைகள் குறைந்து இலகுவாகிக் கொண்டு வந்தேன்.

'சரி எல்லோரும் லஞ்ச் போலாமா?' நண்பன் கேட்டான்.
'ஓ.எஸ் போலாமே . .' என்று அவரும் ஒரு நண்பனைப் போல இயல்பாக கூட வந்தார்.
15 வருடங்களுக்கு முன்பு, என் தந்தையின் மரணத்தின் போதும் இப்படித்தான் இயல்பாக வந்தார். அப்போது எனக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் எதனாலோ தொடர்ந்து அவரைத் தவிர்த்து வந்த என்னை, எப்போதும் போல ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஹோட்டலுக்கு வந்தபோது, அவருடைய வருகை எனக்கு பெரிதாகப் பட்டது.

6 comments:

Anonymous said...

சில உள் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாது. அதை உணரத்தான் முடியும். உணர்ந்த நீங்கள் மிக பெரிய பாக்கியசாலி.

மங்களூர் சிவா said...

வாவ்! உணர்வுகளை அருமையா பதிவு செஞ்சிருக்கீங்க!

Pugal said...

idi "avar" padithu negizindu ponar,

nangal anivarum migavum.........
solla mudiya villai...

Chitra said...

"அவர்" இப்போது எப்படி இருக்கிறார்? இப்பொழுதாவது அடிக்கடி சந்தித்து கொள்கிறீர்களா?
இந்த பதிவை படித்து விட்டு, மனம் கனமாகி விட்டது. என் தந்தையின் மறைவின் போது, இந்தியா செல்ல முடியாமல் போக, தனியாக அமர்ந்து தியானிக்கையில், நான் வெறுமை உணர்வில் இருந்து இறை அருளால் மீண்டு வந்தேன். அன்று ஒரு சத்தியம் மனதுக்குள் செய்து கொண்டேன்: "எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளி போடலாம். ஆனால், நண்பரையோ உறவினரையோ சந்தித்து அன்பை பரிமாறி கொள்ளும் வேலை மட்டும் உடனுக்குடன் செய்ய வேண்டும்."

ISR Selvakumar said...

தங்கை சித்ரா,
இதை அவரும் வாசித்தார். சிலாகித்தார். இதற்கு பதிலாக என்னைப் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ஆனால் எழுதுவதற்குள் இறைவன் பாதம் அடைந்துவிட்டார்.

enRenRum-anbudan.BALA said...

டைரக்டர் சார்,

அருமையா, மனதைத் தொடும் விதத்தில், ஒரு நட்பின் உன்னதத்தை எழுதியிருக்கிறீர்கள்! நம் மனதுக்கு நெருக்கமானவரை, சந்திக்க வேண்டும் என்ற நினைப்பு வரும்போதே சந்தித்து விட வேண்டும். எனக்கும் ஒரு சின்ன லிஸ்ட் உள்ளது.

இடுகையில் டைரக்டர் டச் தெரிகிறது :-)

அன்புடன்
பாலா