Tuesday, October 7, 2008

பார்வையற்றோர் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?

புது தில்லி பயணம். சென்ட்ரல் ஸ்டேஷன் பத்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ஜி.டி.யில் ஏறி அமர்ந்தேன். தண்ணீர் பாட்டில்கள் வந்திருக்காத 15 வருடங்களுக்கு முன், தாகத்துக்கு வாட்டர் பேகைத் திறந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில் பக்கத்து சீட்டுக்காரரின் மேல், தண்ணீர் சிதறிவிட்டது.

"ரொம்ப ஸாரி ... தெரியாம . . . அட சார் நீங்களா?"
"ஓ... செல்வக்குமாரா? எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சார். ஒரு சாஃப்ட்வேர் விஷயமா டெல்லி போயாகணும் அதான் இந்த டிரெயினைப் பிடிச்சேன்"
"நாங்க 20 பேர் டூர் போயிட்டு இருக்கோம்"
"டூரா? டெல்லியில எங்க?"
"நாங்க ஆக்ரா போறோம். ரெண்டு நாள் தங்கி ஆசை தீர தாஜ்மகாலை தரிசிக்கப் போறோம்"
"தாஜ்மகாலை பார்க்கப் போறீங்களா?", அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை.

அவர்கள் தாஜ்மகாலை பார்க்கப்போனால் எனக்கென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? விஷயம் தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள்.

அவர்கள் அனைவரும் பார்வையிழந்தோர்.

அவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க தாஜ்மகால் வரை செல்ல வேண்டியதில்லை. அவர்கள் திரும்பும் திசை எல்லாம் தாஜ்மகால் தான்.
நீங்களும் நானும் தாஜ்மகாலை குறைந்த பட்சம் ஒரு போட்டோவிலாவது பார்த்திருப்போம். அழகில் மனதை பறிகொடுத்திருப்போம். அதனால் தாஜ்மகாலை நேரில் பார்க்க ஆவல் வருவது இயல்பானது. ஆனால் பிறவியிலேயே பார்வையிழந்த அவர்கள், வெளிச்சத்தையே பார்த்திராத அவர்கள், அழகு என்று எதைச் சொல்கிறார்கள்? தாஜ்மகால் என்று இருள் சூழ்ந்த விழிகளுக்குள் எதைக் காண்பார்கள்?

பார்வையில்லாத அவர்களால் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?
முடியும் என்று நான் நம்புகிறேன்.
இசையை எழுத்தால் எழுத முடியும் என்றால், வண்ணங்களை காற்றில் உணர முடியும்.
மொழி திரைப்படத்தில், காது கேளாத ஜோதிகா, பிருத்விராஜின் இசைப்பின்னல்களை வெறும் அதிர்வுகளால் உணர்கின்ற அற்புதமான காட்சி வரும். அந்தக் காட்சியுடன், இந்தப் பார்வையற்ற நண்பர்கள் தாஜ்மகாலை பார்த்து இரசிப்பதாகப் பொருத்திப் பாருங்கள். ஒரு வேளை நீங்களும் நானும் பார்வைக்குப் பதிலாக, ஒரு பரவச அதிர்வை உணர நேரிடலாம்.

பார்வையற்ற அந்த நண்பர்களை "Psychological problems of the blinds" என்கிற ஒரு சிம்போசியத்தில் நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. திரு. ருத்ரன் அவர்கள் தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், நான் தான் தொகுப்பாளர்.

டெல்லி டிரெயினில் நான் தண்ணீர் சிந்திய அந்த நண்பர்தான் முதலில் மேடை ஏறியவர். பிறவியிலேயே பார்வையின்றி பிறந்த அவர், எனது குரலை வைத்தே "மாநிறம் உள்ள நீங்கள் உயரமானவர் அல்ல, சராசரி உயரம்தான்." என்று கூறி என்னையும் பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதைவிட பெரிய ஆச்சரியம், பார்வையற்ற அவர் தலைமையில் 20 பார்வையற்றவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க கிளம்பியது. அந்த ஆச்சரியத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன், நான் சந்தித்த நபர்களும், கிடைத்த அனுபவங்களும் தனிக்கதை. அதை பின்னர் எழுதுகிறேன். ஆனால் முடிவில் ஒன்று உணர்ந்து கொண்டேன். அது . . .

பார்வை என்பது கண்களில் இல்லை!

No comments: