Thursday, January 11, 2007

வலையில் சிக்கும் விமானங்கள்

டாட்டா ஸ்கையில் பணிபுரியும் நண்பர் போனவாரம் பெங்களுருவிலிருந்து வந்தார். அதற்கு முந்திய வாரமும் வந்தார். அடுத்த வாரமும் வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் விமானப் பயணம் தான். டிக்கெட் விலை என்ன தெரியுமா? மயக்கமடைந்து விடாதீர்கள். வெறும் ஒன்பது ரூபாய். ஆனால் ஏர்போர்ட் வரியைச் சேர்த்தால் போய் திரும்பி வர வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான். விமானப் பயணம் என்பதால் நேரம் மிச்சம், பணமும் அதிகமில்லை. சொகுசு பஸ்ஸை விட கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். முன்பெல்லாம் போரடித்தால் நெட்டில் உட்காரந்து கொண்டு "சாட்"டுக்கு வா என்பார். ஆனால் இப்போது உடனே சென்னைக்கு பறந்து வந்துவிடுகிறார். அதற்கு காரணமே இன்டர்நெட் எனப்படும் இணைய வலை தான்.
விமான டிக்ககெட்டுகளின் விற்பனை இப்போது இணைய தளங்களில் சூடு பிடித்திருக்கின்றன. இந்த வருடம் மொத்த டிக்கெட் விற்பனையில் ஐந்து சதவிகிதம் இணையம் வழியாக நடந்திருக்கிறது. அடுத்த வருடம் அது இரண்டு மடங்காகும் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழவதும் பிரபலமான நிறுவனம் Cox & Kings. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Urrshila Kerkar எங்கள் நிறுவனத்தின் அடுத்த இலக்கு வலை வழியாக டிக்கெட் பதிவு செய்யும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்துவதுதான் என்கிறார். விமான டிக்கெட் முன்பதிவுக்காக அந்த நிறுவனம் www.ezeego1.com என்ற வலைத்தளத்தை நடத்தி விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது. அறிமுகச் செலவு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். கோடி ரூபாய் செலவு செய்து 9 ரூபாய்க்கு விமான டிக்கட் விற்பனையா என்று மலைக்காதீர்கள். சில்லறை விற்பனையாகிவிட்ட விமானப்பயணம் இனி இப்படித்தான்.
ஏற்கனவே இரண்டு இணைய தளங்கள் இதில் கொடி கட்டிக்கொண்டிருக்கின்றன. www.makemytrip.com மற்றும் www.travelguru.com ஆகிய ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள்தான் இந்தத் துறையின் முன்னோடிகள். Indo Asia Tours என்ற நிறுவனம் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு இந்த வியாபாரத்தில் இறங்கியுள்ளது. விரைவில் பத்து கோடி ரூபாய் செலவில் www.indiaholidaymall.com என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தி வியாபாரத்தை பெருக்கப் போவதாக அறிவித்துள்ளது.
பத்து ரூபாய் கொடுத்து பிரவுசிங் சென்டரில் நுழைந்து பத்து கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இணைய தளம் வழியாக, வெறும் 9 ரூபாய்க்கு விமான டிக்கெட் பதிவு செய்வது இனி அதிகரிக்கும் என்று விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வட்டாரங்கள் தெரிவிக்காத ஒரு விஷயம் உண்டு. இந்த மலிவு விமானப் பயணங்களில் தாகமெடுத்தால் தண்ணீர் கிடைக்காது. காசு கொடுத்தால்தான் தண்ணீர் கிடைக்கும். இதுதான் மலிவுக்கு நாம் கொடுக்கும் விலை.

Monday, January 8, 2007

கோன்பனேகா குரோர்பதியில் ஷாரூக் கான்

சின்னத்திரை வியாபாரத்தில் அனில் அம்பானி

சின்னத்திரை வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டும் வலை விரிக்கவில்லை. பெரிய பெரிய வியாபார முதலைகளையும் கொக்கி போட்டு இழுத்திருக்கிறது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Adlabs என்ற பெயரில் ஒரு மல்டிமீடியா கம்பெனி துவக்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தற்போது ரஜினியை கார்டூனாக்கி பணம் கொழிக்கப்போகும் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த தயாரிப்புக்கு இடையிலேயே வளர்ந்துவரும் மீடியா கம்பெனிகளை வளைத்துப்போடும் முயற்சியில் இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் குறி Synergy Communications. அந்த நிறுவனத்தின் பெரும்பான்பையான பங்குகளை அம்பானி வாங்கிவிட்டதாகக் கேள்வி. அம்பானியே குறிவைக்கும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய கம்பெனியா என்று வியப்பவர்களுக்கு ஒரு தகவல்.
சரிந்து கிடந்த அமிதாப்பை மீண்டும் சிகரத்துக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி "கோன் பனேகா குரோர்பதி". இந்த நிகழ்ச்சியை தயாரித்தது சினெர்ஜி கம்யூனிகேஷன்ஸ்தான். அது மட்டுமல்ல, தரங்கெட்ட தமிழ் சீரியல்களுக்கிடையில் எப்போதாவது தவறிப்போய் BBCயில் மாஸ்டர் மைண்ட் என்ற அபாரமான குவிஸ் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா? இந்தியாவின் தலை சிறந்த அறிவாளிகளை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம். வெற்றிகரமான இந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பதும் சினெர்ஜி கம்யூனிகேஷன்ஸ்தான். இந்த நிறுவனத்தின் பெயர் வேண்டுமானால் நம்மில் பலருக்கு அறிமுகமில்லாத பெயராக இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் தலைவரான சித்தார்த்தா பாசுவை கண்டிப்பாக நாம் அனைவரும் டிவியில் பார்த்திருப்போம்.

சுருக்கமாகச் சொன்னால் டிவி என்பது கண்ணைக் கசக்குகிற வெறும் சீரியல் சமாச்சாரம் அல்ல. ஒளியைக் காசாக்கும் பணம் கொழிக்கும் வியாபாரம். இல்லையென்றால் சித்தார்த்தா பாசுவுடன் அனில் அம்பானி கைகோர்ப்பாரா?


கோன்பனேகா குரோர்பதியில் ஷாரூக் கான்

முதல் பாராவுக்கும் இந்த பாராவுக்கும் இடையில் சில நாட்கள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட நாட்களில் திடீரென ஒருநாள் டெலிவிஷன் சானல்கள் எல்லாம் கிரிக்கெட்டை மறந்து விட்டு ஷாரூக்கானைப் பற்றி செய்தி வெளியிட்டன. காரணம் யாரும் எதிர்பாராத அதிசயமாக பாலிவுட்டின் உச்சத்திலிருக்கும் ஷாரூக்கான் அமித்தாப்பச்சனுக்குப் பதில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டுவிட்டார். உறுதி செய்யப் படாத தகவல்களின்படி அவருடைய ஒரு எபிசோடு சம்பளம் 75 லட்சம். நிகழ்ச்சியைப் பொறுத்த வரை, முதல் கோடிஸ்வரன் ஷாரூக்தான்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் சித்தார்த்தா பாசுவின் சினர்ஜி கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் அம்பானி வாங்கும் அளவிற்கு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் சினர்ஜி கம்யூனிகேஷனில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. காரணம் ஏன் என்று முதல் பாராவை எழுதும் வரை எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது புரிந்தது போல இருக்கிறது. அம்பானியும், ஷாரூக்கானும் முதலிலேயே பேசி வைத்துக்கொண்ட நிகழ்வுதான் இது என்று எனக்குத் தோன்றுகிறது. ஷாரூக் செய்வதால் நிகழ்ச்சியின் பிரபலம் கூடும். டிஆர்பி எகிறும். அதனால் சினர்ஜி கம்யூனிகேஷனின் வருமானம் கூடும். அதில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதால் ரிலையன்சுக்கும் வருமானம் எகிறும். இது என் யூகம்தான். இனி நாம் ஒவ்வொரு முறையும் ரிமோட் பட்டனை அமுக்கும்போது, நமக்கு மின்சாரக்கட்டணம் உயரும். அங்கே ரிலையன்சுக்கும், ஷாருக்கிற்கும் கோடிகள் புரளும்.